சென்னை, ஜூலை 1- கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் கரோனா தொற்றுக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு இருப்பதாலும், போட்டியாளர்கள் இந்த தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு இருப்பதால் காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்வர்கள் மத்தியிலும், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் வந்தன.
இதையடுத்து அறிவிப்பு வெளியான போது 7,301 காலி இடங்கள் என்று இருந்ததை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து, சமீபத்தில் 10 ஆயிரத்து 178 இடங்களாக அதிகரித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஜூன்) 20ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, மேலும்
குரூப்-4 பதவிகளில் காலியிடங்களை அதிகரித்து புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதில், 5 ஆயிரத்து 321 இளநிலை உதவியாளர், 3 ஆயிரத்து 377 தட்டச்சர், 1,079 சுருக்கெழுத்தர், 425 கிராம நிர்வாக அலுவலர், 69 பில் கலெக்டர், 20 கள உதவியாளர், ஒரு இருப்பு காப்பாளர் என மொத்தம் 10 ஆயிரத்து 292 காலி இடங்கள் குரூப்-4 பதவிகளில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
நெல்லை, ஜூலை 1- கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங் களில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கி உள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் காற்றின் வேகத்தால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 18 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக தேவை என்ற நிலையில் பருவநிலைக் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது. மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன் என்பதால் இந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 7,000-க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் காற்றாலை சீசன் தொடங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந் துள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.
மழை பெய்வதற்காக
விநாயகருக்கு பூஜையா?
சேரன்மாதேவி, ஜூலை 1- சேரன்மாதேவி கன்னடியன் கால்வாய் கரையில் மிளகு பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுமார் 5 கிலோ மிளகை அரைத்து விநாயகர் சிலைக்கு சாத்தியப்பிறகு, சிலை மூழ்கும் அளவிற்கு தண்ணீரால் குளிப்பாட்டி அந்த தண்ணீரை கால்வாயில் வடியவிட்டால், விநாயகரின் உச்சி நன்றாக நனைந்து மழை பெய்யும் என்பது அய்தீகமாம்.
கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாமல் அணைகளில் குறைந்தளவே தண்ணீர் இருப்பதால் பாசனத்துக்கு போதிய தண்ணீர் திறந்து விடமுடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மழை வேண்டி, மிளகு பிள்ளையாருக்கு கும்ப பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை விவசாயிகள் நடத்தினர்.பின்னர் மிளகு விநாயகர் சிலைக்கு மிளகு சாத்தப்பட்டு, சிலை மூழ்கும் அளவிற்கு சுமார் 300 குடம் தண்ணீரால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால்வாயில் தண்ணீரை வடியவிட்டனராம்.
பி.ஜே.பி.யை அடையாளம் காண்பீர்!
தமிழில் குடமுழுக்கிற்கு எதிர்ப்பு - பா.ஜ.க.வினர் கைது
ஒசூர், ஜூலை 1- ஓசூர் கோவிலில் தமிழில் கோவில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை வைத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசூடேஷ் வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் பேரியக்கத்தினர் அறநிலையத் துறையினரிடம் கோரிக்கை வைத்து அதற்கான ஒப்புதலையும் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழில் குடமுழுக்கு கோரிக்கை வைத்த தமிழ் தேசிய பேரியக்கத்தினர் மீது சில நபர்கள் அண்மையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் 29.6.2023 அன்று மஞ்சுநாத் மற்றும் வினோத் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் பா.ஜ.க. அய்டி பிரிவு பிரமுகர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்ப்புடைய மேலும் மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment