வள்ளலாருக்குக் காவி சாயம் பூசலாம் என்று நினைத்தால் - அது நடக்காது - கருப்பு - சிவப்பு - நீலம் கலந்த மண் இது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

வள்ளலாருக்குக் காவி சாயம் பூசலாம் என்று நினைத்தால் - அது நடக்காது - கருப்பு - சிவப்பு - நீலம் கலந்த மண் இது!

 சனாதனமும் - ஜாதியும் பொய்யென உரைத்த வள்ளலாரை 

சனாதனத்தின் உச்சம் என்று ஆளுநர் கூறுவதா?

நாங்கள் புதிதாக வடலூருக்கு வரவில்லை - 

வள்ளலார் ஈரோட்டுக்குப் போனவர்தான்!

பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல்முன் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்!

வடலூர், ஜூலை 8  சனாதனத்தையும், ஜாதியையும் சாடிய வடலூர் வள்ளலாரை, சனாதனத்தின் உச்சம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவதா? சனாதனத் தையும், ஜாதியையும் சாடியவர் வள்ளலார். வள்ள லாருக்குக் காவி வண்ணம் பூசலாம் என்று நினைத்தால், அது நடக்காது; இது பெரியார் மண் - கருப்பு, சிவப்பு, நீல நிற மண் இங்கு உண்டு என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

“சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்‘’  வடலூரில் வள்ளலார் விழா- 

மக்கள் பெருந்திரள் மாநாடு

நேற்று (7.7.2023) மாலை வடலூரில் நடைபெற்ற “சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்’’  வட லூரில் வள்ளலார் விழா - மக்கள் பெருந்திரள் மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

வடலூர் மாநகரில்  ஒரு வரலாற்றை உருவாக்கக் கூடிய அளவில்...

மிகுந்த எழுச்சியோடு வடலூர் மாநகரிலே ஒரு வரலாற்றை உருவாக்கக் கூடிய அளவிலே, மக்கள் பெருந்திரள் மாநாட்டினை மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்து, லட்சக்கணக்கான மக்களை அழைத்து, யாரெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களோ, யாரெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களோ அந்த மக்களிடையே உரிமைக் குரலை அன்றாடம் எடுத்துச் சொல்லி, எங்கெங்கெல்லாம் எத்தகைய செய்திகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய ஓர் அற்புதமான பணியை செய்துவரும், மிகச் சிறந்த கொள்கையாளராக, ஒரு சிறப்புமிகுந்த ஆற்றல்மிகுந்த ஒரு தலைவராக இன் றைக்கு இந்த மக்கள் மத்தியில் திகழும், நம் அனைவருடைய போற்றுதலுக்கும், அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியவராக இருக்கக்கூடிய அன் பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய - நான் அடிக்கடி பொதுக்கூட்டங்களில், கழக நிகழ்வுகளில் சொல்வதைப் போல, இதுவரை திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று கூறுவதைத் தாண்டி, விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் என்று சொன்னால், அவர் மூன்றாவது குழல் என்று எடுத்துச் சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம்.

எனவேதான், இங்கே நாங்கள் மிகப்பெரிய அளவிலே ஒன்றாக இணைந்து - இந்தக் குரலை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு பெரிய திருப்பத்தை,  

மிகப்பெரிய ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்கக் கூடிய அளவில்!

அருமைத் தோழர்களே, இம்மாநாட்டின் ஏற்பாடு களை மிகச் சிறப்பாக செய்து, இந்த வாய்ப்புகளை உருவாக்கி, ஒரு பெரிய திருப்பத்தை,  மிகப்பெரிய ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்கக் கூடிய அளவிலே அற்புதமாக ஏற்பாடு செய்து, இன்றைக்கு உங்களை யெல்லாம் சந்தித்து அருமையான கருத்துகளை எடுத்து வைக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கி, எனக்கு முன்னால் உரையாற்றிய நம்முடைய அருமைச் சகோதரர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் இங்கே கருத்துகளை எடுத்துச் சொல்லி அமர்ந்திருக்கிறார்.

ஒரு குறுகிய காலத்தில், இந்த வடலூர் மாநகரம், இதுவரை காணாத ஓர் அற்புதமான மாநாட்டை - அறிவார்ந்த கருத்துகளைச் சொல்லக்கூடிய மாநாட்டை - இன்னுங்கேட்டால், எதிர்காலத்தில் எப்படியெல்லாம் மாறுதல்கள் வரும் என்பதற்கான அடையாளத்தை, முன்பே சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

ஆர்.என்.ரவிக்கு சனாதனமும் தெரியவில்லை; இராமலிங்க சாமியைப்பற்றியும் தெரியவில்லை!

அழகாகச் சொன்னார், நம்முடைய பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர் கள் விளக்கமாக, ‘‘சனாதனமா அல்லது சமத் துவமா?'' என்று சொல்லுகிறபொழுது நிச்சயமாக ஆர்.எஸ்.எஸின் ஆதரவாளராக இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சனாதனமும் தெரிய வில்லை; அதேநேரத்தில், இராமலிங்க சாமியைப் பற்றியும் தெரியவில்லை; வள்ளலாரைப்பற்றியும் தெரியவில்லை என்ற அளவிற்கு எடுத்துச் சொன்னார்.

நண்பர்களே, ஒன்றை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அவர்கள் தெரியாமல் பேசவில்லை - திட்டமிட்டு, திசை திருப்பவேண்டும் என்பதற்காகத்தான் அதைச் செய்திருக்கிறார்கள். அதன் விளைவாக இங்கே நாம் சிறப்பாக உண்மை நிலையை எடுத்துச்சொல்லக் கூடிய  அந்த  வாய்ப்பை உருவாக்கினார்கள்.

‘‘பெரியாரும் - இராமலிங்கரும்!’’

இதோ என் கைகளில் இருப்பது 80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்களால் தொகுக்கப்பட்ட புத்தகம் - ‘‘பெரியாரும் - இராமலிங்கரும்!'' - எதிலிருந்து தொகுத்தார்கள் - ‘குடிஅரசு' பத்திரிகையில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியவற்றைத்தான் தொகுத்திருக் கிறார்.

இதில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு செய்தியை உங்களுக்குத் தெளிவாக்கவேண்டும். தொடக்கத்தில் நம்முடைய வள்ளலார் அவர்கள், மற்றவர்களைப்போல, பக்தராகத் தான் இருந்தார்; பலவகையான வழிமுறைகளைத்தான் அவர் கையாண்டார். ஆனால், அதற்குப் பிறகு வள்ளலார் அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும்  மிகப்பெரிய அளவிலே, தன்னுடைய கருத்துகளில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்தார்கள்.

வள்ளல் பெருமான் அவர்கள் ஒரு பெரிய மாறுதல் அடைந்தார் - இறுதிக்காலத்தில்!

எப்படி தந்தை பெரியார் அவர்கள், சமூகநீதியை செய்வதற்கு, காங்கிரசிற்குப் போனால், சமூகநீதி கிட்டும் - அங்கேயே ஒரு பெரிய தேசிய விடுதலையை உருவாக்கி, அதன்மூலம் ‘‘எல்லோருக்கும் எல்லாம்'', ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்பதை உருவாக்க லாம் என்று நினைத்து, ஏமாந்து, எதிர்பார்த்ததையெல்லாம் செய்ய முடியவில்லையே என்பதற்காக, பிறகு சுய மரியாதை இயக்கத்தை அவர் தனியாக உருவாக் கினார்களோ, அதுபோலத்தான், வடலூர் வள்ளலார் அவர்கள், வள்ளல் பெருமான் அவர்கள் ஒரு பெரிய மாறுதல் அடைந்தார் - இறுதிக்காலத்தில் என்பதுதான் மிக முக்கியமானது.

அவருடைய இறுதிக் காலத்தில் அவர் அடைந்த மாறுதலைத்தான் ‘‘பெரியாரும் - இராமலிங்கரும்'' என்று நூலில் தொகுத்திருக்கிறார்கள்.

அதில் உள்ள ஒரு சில செய்திகளை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

ஆறாந் திருமுறை உருவாக்கம் பெற்ற காலத்தில்தான் வள்ளலாருக்கு எழுச்சி ஏற்பட்டது - மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது

வள்ளலார் அவர்கள் ஆறு திருமுறைகளை பாடியிருக்கிறார்.   அவருடைய உரைகள், அவரு டைய கருத்துகள் ஆறு திருமுறைகளாக வெளி வந்திருக்கின்றன. அதில், கடைசியாக வள்ளலார் அவர்கள் பக்தராக இருந்து, மத பக்தராக இருந்து, மதங்களிலே, சடங்குகளிலே, சாஸ்திரங்களிலே தன்னுடைய கருத்துகளையெல்லாம் மூழ்க வைத்த நிலையிலிருந்து மாறுபட்டு - ஆறாந் திருமுறை உருவாக்கம் பெற்ற காலத்தில்தான் அவருக்கு எழுச்சி ஏற்பட்டது - மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. இதுகுறித்துதான் எழுச்சித் தமிழர் இங்கே எடுத்துக் கூறினார்.

அப்பொழுது தமக்குள் திருப்பம் ஏற்பட்டதை வள்ளலார் அவர்கள் உணர்ந்தார். அதுவரையில், தான் ஏற்கெனவே கூறிய பழைமை கருத்துகளை அவர் தூக்கி எறிந்தார். அதுதான் சனாதனம். பழைய மூட கருத்துகளிலே அவர் ஊறிப் போயிருந்தார் அல்லவா - அந்தக் கருத்துகளைத் தூக்கி எறிந்துவிட்டு, பிறகு புதிய கருத்துகளுக்கு வந்தார்.

இங்கே பாபா சாகேப் அம்பேத்கர் அவர் களைப்பற்றி சொன்னார்கள், பெரியாரைப்பற்றி சொன்னார்கள் - மனித குலத்தினுடைய சமத் துவத்தைப்பற்றியெல்லாம் சொன்னார்கள்.

அந்த சிந்தனையில், மனுதர்மத்தை அழித்து, மனித தர்மத்தை உருவாக்கவேண்டும் என்பதற் காகப் பாடுபடுகின்ற இந்த இயக்க அடிப்படையில், 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய அய்யா வள்ளல் பெருமான் அவர்கள் கடைசியாக மாறி, அனுபவித்துப் பாடியதுதான் ஆறாந் திருமுறை.

நாங்கள் புதிதாக வடலூருக்கு வரவில்லை; வடலூர் ஏற்கெனவே ஈரோட்டிற்குப் போனதுதான்!

ஆரம்பத்தில் அவர்கள் என்னென்னவெல்லாம் சொன்னார்களோ, அதையெல்லாம் கடைசி கால கட்டத்தில் அந்தக் கருத்துகளை  மாற்றிக்கொண்டார்கள்.  ‘‘பெரியாரும் - இராமலிங்கரும்‘’ என்று, 90 ஆண்டு களுக்கு முன்பு தொகுக்கப்பட்ட புத்தகம். இன்றைக்கு நாங்கள் புதிதாக வடலூருக்கு வரவில்லை; வடலூர் ஏற்கெனவே ஈரோட்டிற்குப் போனதுதான். எனவேதான், இன்றைக்கு ஈரோடு,  வடலூர் வள்ளாலாரைக் காப்பாற்றுவதற்காக இன்றைக்கு வந்திருக்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ். நரிகளே, காவிகளே, 

உங்கள் முயற்சிகள் ஒருபோதும் 

இந்த மண்ணில் பலிக்காது!

எங்கள் சகோதரர் எழுச்சித் தமிழரை பக்கத் திலே வைத்துக்கொண்டு நான் தெளிவாகச் சொல் லுகிறேன், சனாதனவாதிகளே விளக்கம் சொல்லு வதற்குப் பதிலாக கொஞ்சம் விட்டு விட்டுச் சொல் கிறேன் என்று நீங்கள் விஷமத்தனம் செய்யலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ். நரிகளே, காவிகளே, உங்கள் முயற்சிகள் ஒருபோதும் இந்த மண்ணில் பலிக்காது!

இது கருப்பு மண் - இது சிவப்பு மண் - இது நீல மண் - வண்ணங்கள் இல்லாத அளவிற்கு இருக்கக் கூடிய உறுதிப்படைத்த ஒருமைப்பட்ட ஒரு மண் - பெரியாரின் பகுத்தறிவு மண் - பாபா சாகேப் அம்பேத்கரும் - பெரியாரும், ஒரே நாணயத் தினுடைய இரண்டு பக்கங்கள். அதை யாரும் மறுக்க முடியாது.

நான் பேசுவதைவிட, எழுச்சித் தமிழர் அதிகம் பேசவேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை. 

கட்டுப்பாடோடு இருந்தால்தான், 

எதிரிகள் நம்மை பிரிக்க முடியாமல் ஓடோடிப் போவார்கள்!

ஆனால், நீங்கள் அமைதியைக் காக்காத காரணத் தினால்தான் அவருக்கு சலிப்பும், சங்கடமும் ஏற்பட்டது. இனிமேல் அவர் எங்கு போனாலும்  நீங்கள் அன்பு காட்டுங்கள்; ஆரவாரம் காட்டாதீர்கள்; அது அவரை உற்சாகப்படுத்தாது; இயக்கமும் கட்டுப்பாடு என்ற கட்டுக்குள் இருக்காது. நீங்கள் எழுப்புகின்ற கூச்சல், சில நேரங்களில் அவருக்கு அவப்பெயரை உருவாக்கும். அவர் தலைவராக இருக்கக்கூடிய இயக்கம் கட்டுப் பாடோடு இருக்கவேண்டும். நீங்கள் கட்டுப்பாடோடு இருந்தால்தான், எதிரிகள் நம்மை பிரிக்க முடியாது என்று ஓடோடிப் போவார்கள்.

பெரியார் கொள்கை வழியில் வளர்ந்தவர்தான் எங்கள் திருமா!

ஆகவேதான், அவர் ஒரு வார்த்தை சொன் னால், நீங்கள் பெட்டிப் பாம்பாக அடங்கவேண்டும்; மூச்சில்லாதவர்களாக இருக்கவேண்டும். அப்படிப் பட்ட ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொண்டு தான் இந்த இயக்கம் இருக்கிறது - திராவிடர் கழகம், பெரியார் கொள்கை வழியில் இருக்கிறது. அதிலிருந்து வளர்ந்தவர்தான் எங்கள் திருமா என்பதை மறந்துவிடாதீர்கள். இதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அந்த வகையிலே, 90 ஆண்டுகளுக்கு முன்னால், வடலூரைப் பார்த்து ஈரோடு என்ன சொல்லுகிறது? அந்தக் கருத்தை மட்டும் நேரத்தின் நெருக்கடியினால் சுருக்கமாக, அவசர அவசரமாக சொல்லுகிறேன்.

ஆறாந் திருமுறையில் - சனாதனத்தை சாடும் வள்ளலார் பாடுகிறார்!

வள்ளலார் பாடுகிறார் - ஆறாந் திருமுறையை வள்ளலார் பாடுகிறார் - மாறிய வள்ளலார் பாடுகிறார் - சனாதனத்தை சாடும் வள்ளலார் பாடுகிறார் என்ன?

ஜாதியும் மதமும் சமயமுங் காணா ஆதி அநாதியாம் அது

ஜாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி.

இருட்டில் இருந்தேன்; அந்த இருட்டில் எனக்கு அறிவு வெளிச்சம் வந்தது. ஜோதி என்பது நெருப்பு இல்லை. நெருப்பு யாருக்கோ பயன்பட்டது; ஆனால், இன்றைக்கு நெருப்பும் நம்மிடத்திலே வராது; பொறுப்பு நம்மிடத்தில் இருக்கின்ற காரணத்தினால்தான், விருப்பு நம்மிடத்திலே இருக்கின்ற காரணத்தினால்தான், அனைவரையும் கட்டித் தழுவுகின்ற இயக்கம் இந்த இயக்கம். பிரித்துப் பார்க்கின்ற இயக்கமல்ல.

அதைத்தான் வள்ளலார் தெளிவாகச் சொன்னார்கள்.

ஜாதியும் மதமும் சமயமும் பொய்யென 

ஜாதி கிடையாது, மதம் கிடையாது - என் சகோதரர் களைப் பார்த்து தொடாதே என்று சொன்னார்களே, அவர்களை இல்லாமல் ஆக்கிவிடுவோம் நாங்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பார்ப்பான் ரத்தம் - பறையர் ரத்தம் என்று எங்கேயாவது உண்டா?

எட்டி நில் என்று சொல்லாதே - கிட்டே வராதே என்று சொல்லாதே - ரத்தத்தில் என்ன வேறுபாடு என்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

இது பார்ப்பான் ரத்தம் - பறையர் ரத்தம் என்று எங்கேயாவது உண்டா? மனித ரத்தம் என்றுதான் உண்டு.

இதை இப்பொழுது சொல்லவில்லை நண்பர்களே, வள்ளலார் அன்றே சொன்னார்.

ஜாதியும், மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி

சமயம் என்று சில பேர் சொல்கிறார்கள், எல்லா வற்றிற்கும் சேர்த்துத்தானே - சனாதனத்தினுடைய வேரைத் தூக்கி எறிந்தவர் வள்ளலார்.

சாதி மதம் சமயமெனும் சங்கடம்விட்டு அறியேன்

சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன்

சாத்திரம் என்பது சேறு; அந்த சேற்றில் நான் மாட்டிக் கொண்டேன்; அதிலிருந்து எப்படி வருவது என்று தெரியாமல் தவித்தேன்; அப்படி தவித்து வெளியே வந்தவர்கள்தான் இந்தத் திருமாவளனும், இந்த வீரமணியும், இந்தக் கருப்புச் சட்டையும், இந்த நீலச்சட்டையும் என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆதி அந்தநிலை அறியேன் அலை அறியாக் கடல்போல்

ஆனந்தப் பெரும்போகத்து அமர்ந்திடவும் அறியேன்

இப்பொழுது எனக்கு ஏற்பட்டு இருக்கின்ற மகிழ்ச்சி இருக்கிறதே - ஜாதி குலம் இல்லாமல் வெளியே வந்திருக்கிறேன் என்கிறார்.

கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன் ஒன்றுங்கொண்டறியர் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் யீவர்போல்

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்

ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் ஆங்கே

இலங்குதிருக் கதவு திறந்து இன்னமுதம் அளித்தே

தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தியறப் புரிவாய் சித்தமே

வேநெறி ஆகமத்தின் நெறிபு ராணங்கள்

விளிம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உள் அனைத்துங் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உணர்த் தினையே சித்தமே

வள்ளலாரைக் காப்பாற்றவேண்டும் என்று ஏன் நினைக்கின்றோம்?

நன்றாக கவனியுங்கள்! ஏன் திராவிடர் கழகத்துக் காரன்,  ஏன் பகுத்தறிவு பேசுகின்ற விடுதலைச் சிறுத்தை கள், ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள், ஏன் திராவிட இயக்கத்தவர்கள், பகுத்தறிவாளர், சிந்தனை யாளர்கள் - வள்ளலாரைக் காப்பாற்றவேண்டும் என்று ஏன் நினைக்கின்றோம்?

வள்ளலாருக்குக் காவிச் சாயம் பூச முனைந்தால்... 

வள்ளலாருக்குக் காவிச் சாயம் பூச முனைந்தால், அது நடக்காது. என்று சொல்லக்கூடிய கூட்டம் இங்கே இருக்கிறது; அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது நாங்கள்.

மேலும் வள்ளலார் சொல்லுகிறார்,

கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக

இந்தக் கண்மூடி வழக்கம் என்பதுதான் சனாதனம்! 

இன்னும் சொல்லுகிறார் கேளுங்கள்:

மதமென்றும் சமயமென்றும் சாத்திரங்கள் என்றும்

மன்னுகின்ற தேவரன்றும் மற்றவர்கள் வாழும்

பதமென்றும் பதம் அடைந்த பத்தர் அனு பவிக்க

பட்ட அனு பவங்கள் என்றும் பற்பலவாவிரிந்த

விதம் ஒன்றுந் தெரியாது மயங்கினேனே

‘‘ஆரம்பித்தில் நான் மயங்கிப் போயிருந்தேன்; அதனால் என்னுடைய அறிவு மழுங்கிப் போயிருந்தது; நான் இன்றைக்குத் தெளிவுபடுத்தி சொல்லுகின்றேன் - இதுதான் என்னுடைய உறுதியான கருத்து'' என்று சொல்கிறார்.

பெரியாருடைய பகுத்தறிவு கொள்கை- 

சமத்துவக் கொள்கையை அறிவித்த நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி

இங்கே சற்று நேரத்திற்கு முன்பு நம்முடைய சகோ தரர் எழுச்சித் தமிழர் சொன்னாரே - அம்பேத்கருடைய ஜாதி ஒழிப்பு - அம்பேத்கருடைய மூடநம்பிக்கை ஒழிப்பு - பெரியாருடைய பகுத்தறிவு கொள்கை- சமத் துவக் கொள்கையை அறிவித்த நம்முடைய ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சருடைய எழுச்சி - அத்தனையும் இணைந்த வார்த்தைகள் இதோ இருக்கிறது பாருங்கள்.

வள்ளலாருக்காக ஏன் நாங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறோம்?

ஏன் எங்களுக்கு ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வருகிறது?

உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

எவன் திரிபுவாதம் செய்தாலும், வள்ளலாரைப் பாதுகாக்கும் ஒரு பெரிய அணியை நாங்கள் உருவாக்கு வோம். அந்த அணியில், நாங்கள் இருப்போம், திருமா இருப்பார்; அத்துணை பகுத்தறிவுவாதிகளும் இருப்பார் கள்; அத்துணை சமத்துவவாதிகளும் இருப்பார்கள். லட்சக்கணக்கான மக்கள் மட்டும் இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை; உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த உரையைக் கேட்டுக் கொண்டி ருக்கிறார்கள். இன்றைக்கு நாம் செய்யவேண்டிய பணி என்ன?

வள்ளலார் அன்றைக்குச் சொன்னதைத்தான் பெரியார் எடுத்துக் காட்டினார்.

நால்வருணம் ஆச்சிரம ஆசாரம் முதலாம்

நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே!

சிறிய வயதில், மண்ணில் மூத்திரம் விட்டு, அதைப் பிடித்து வைத்து, இதுதான் பிள்ளையார், இதுதான் சாமி என்று சொல்வார்கள். அதுபோன்று பிள்ளை விளை யாட்டு என்று சொன்னார் வள்ளலார்.

‘‘இந்தப் படை போதுமா? 

இன்னுங்கொஞ்சம் வேண்டுமா?’’

ஆகவேதான், இந்தப் பிள்ளை விளையாட்டு களையெல்லாம் எங்களிடம் காட்டாதீர்கள்; அதைக் கிள்ளி எறிவது எப்படி என்பதற்காகத்தான் இங்கே ஆயிரக்கணக்கான இளைஞர்கள், எழுச்சித் தமிழர் முன்னால், எங்கள் முன்னால், ‘‘இந்தப் படை போதுமா? இன்னுங்கொஞ்சம் வேண்டுமா?'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறார்கள்.

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

சத்திய சுத்த சன் மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே

அதனால்தான் தந்தை பெரியார் வள்ளலாரை ஆதரிக்கிறார்.  

சன்மார்க்கம் என்றால் என்ன அர்த்தம்?

முகத்தில் பிறந்த ஜாதி, தோளில் பிறந்த ஜாதி, தொடையில் பிறந்த ஜாதி, காலில் பிறந்த ஜாதி என்று சொன்னார்கள்.

அன்றைக்கே தந்தை பெரியார் சொன்னார் - உங்களைப்போன்ற இளைஞர், பெரியாரிடம் கேள்வி கேட்டார்-

‘‘அய்யா, முகத்தில், தோளில், தொடையில், காலில் பிறந்தார் என்று சொல்கிறார்களே, நாங்கள் பஞ்சமர் - அய்ந்தாம் ஜாதியினர் என்று சொல்கிறார்களே, நாங்கள் எங்கே பிறந்தோம் என்று சொல்லவில்லையே?'' என்று.

அப்பாவிற்கும் - அம்மாவிற்கும் பிறக்கவேண்டிய இடத்தில் 

முறையாகப் பிறந்தவர்கள்!

உடனே பதில் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள், ‘‘நீங்கள்தான் அப்பாவிற்கும் - அம்மாவிற்கும் பிறக்க வேண்டிய இடத்தில் முறையாகப் பிறந்தவர்கள்'' என்று சொன்னார்.

எனவே, ஜாதி மண்மூடிப் போக என்று சொல்லக் கூடிய அளவில், இறுதியாக ஒரு செய்தியைச் சொல்கிறேன்.

நீங்கள் அமைதியாக இருந்திருந்தால், எழுச்சித் தமிழர் இன்னும் நிறைய பேசியிருப்பார். நான் பேசுவதைவிட, அவர் நிறைய பேசவேண்டும் என்றுதான் எனக்கு ஆசை.

ஏனென்றால், இன்றைக்கு நம்பிக்கை நட்சத்திரம் அவர் - உலகத்திற்கு. என்னிடம், அருள்மொழி ஞாபகப் படுத்தினார், 90 வயது, 90 வயது என்று.

அறிவுச் சுடரை திருமா போன்றவர்களின் கைகளில் கொடுத்திருக்கின்றோம்!

வயது ஏறிக்கொண்டுதான் போகும்; ஆனால், நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம் என்றால், இந்த ஜோதி இருக்கிறதே, இந்த அறிவுச் சுடர் இருக்கிறதே, இந்தக் கொள்கைச் சுடர் இருக்கிறதே - திருமா போன்றவர்களின் கைகளில் கொடுத்திருக் கின்றோம் என்று சொல்லும்பொழுது, இந்தக் கொள்கையை எந்தக் கொம்பனாலும் அசைத்து விட முடியாது. ஆயிரம் ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். வந்தாலும், ஆயிரம் ஆயிரம் நரிகள் வந்தாலும், ஆயிரம் ஆயிரமாக நீங்கள் அவதாரம் எடுத் தாலும் இந்த மண்ணை நீங்கள் தகர்த்துவிட முடியாது.

‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்...’’

வள்ளலாருக்கு ஒரு புதிய எழுச்சியை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். இதுவரையில், யாரோ நான்கு பக்தர்கள்தான், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். நான்கூட 5 ஆம் வகுப்பில் படிக்கும்பொழுது நடந்ததை ‘‘அய்யா வின் அடிச்சுவட்டில்'' எழுதியிருப்பேன்.  எங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார் - ‘‘கண்மூடி வழக்க மெலாம் மண்மூடிப் போக என்று சொன்னவர் வள்ளலார்’’ என்று.

‘‘அப்படியா? யாருங்க அவர்'' என்று கேட்டேன்.

‘‘இதோ பார்'' என்று ஒரு பொம்மையைக் காட்டினார்.

சந்தைக்குச் சென்றபொழுது, வள்ளலார் பொம்மை விற்றார்கள்; அந்தப் பொம்மையை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து, தினமும், ‘‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங் கருணை'' என்று சொல்லி வந்திருக்கிறேன். அப்போது அதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியாது.

‘‘கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக’’  என்று சொன்னார் வள்ளலார்.

சனாதனம் மண்மூடி போகச் செய்வதுதான் வள்ளலாருடைய தத்துவம்!

இன்னும் மண்மூடிப் போகவேண்டிய இடத்தில், கண்மூடி வழக்கம் இருக்கிறது. அந்தக் கண்மூடி வழக்கத்தை நிலைநாட்டுவது சனாதனம். அதை மண் மூடி போகச் செய்வதுதான் வள்ளலாருடைய தத்துவம். அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதோ ஒரு செய்தியை நான் சொல்கிறேன்.

சத்திய ஞான சபையில், பார்ப்பன படையெடுப்பு இப்பொழுது நடக்கவில்லை - இதற்குமுன்பும் ஒரு குழு வந்து, அது பிரச்சினையாகி வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.

மற்ற கடவுளைக் கொண்டு வந்து உள்ளே நுழைக்க ஆரம்பித்தன சனாதன சக்திகள். அதை எதிர்த்து வள்ளலார் பக்தர்கள் வழக்குத் தொடுத்தனர்.

‘‘வடலூர் வள்ளலார் வடலூரில் வருவாரா?'' என்று கேட்டார்கள்.

வருவார் வள்ளலார் - எப்படி?

இதன்மூலம் வருவார் - இந்தக் கொள்கையின்மூலம் வருவார். அவர் உருவமல்ல - அவர் தத்துவம் - அவர் கொள்கை. அந்தக் கொள்கை நிச்சயமாக வரும்.

நீதியரசர் சந்துரு வழங்கிய தீர்ப்பு!

2006 ஆம் ஆண்டு சத்திய ஞான சபையில், சிவ லிங்கம் ஒன்றை, சபாபதி சிவாச்சாரியார் என்ற ஒரு பார்ப்பனர் வைத்து பிரதோசம் அன்று வழிபாடு செய்தார்.

இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதியரசர் சந்துரு மனுதாரர் முன்வைத்த விவாதங்களை ஏற்றுக்கொள்ளாது அவரது மனுவைத் தள்ளுபடி செய்து 24.03.2010இல் தீர்ப்பு வழங்கினார். 

வள்ளலார் என்பவர் முழுக்க முழுக்க இதற்கெல்லாம் விரோதமானவர்; இந்தக் கொள்கையை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று சொல்லி, 

தீர்ப்பின் தொடக்கத்தில் வள்ளலாரைக் குறித்த சிறு அறிமுகத்தைச் செய்துள்ளார்.

‘கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்

கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே

சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரம்ஆ சாரம்

சமயமதா சாரம்எனச் சண்டைஇட்ட கலக

வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்

மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த

முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க

முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே’

‘ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே

நீதியில் கலந்து நிறைந்தது நானும்

நித்தியன் ஆயினேன் உலகீர்

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

சத்தியச் சுத்தசன் மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே’

என்ற வள்ளலாரின் பாடல்களுடன் அந்த அறிமுகம் தொடங்குகிறது. சமயம், ஜாதி, ஆகமம், வேதம் என்பன வற்றை அவர் ஏற்றுக்கொள்ளாததை வெளிப் படுத்தும் வழிமுறையாக,

‘சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில்

உணர்த்திய அருட்பெருஞ்சோதி’

‘ஆகமுடி மேல் ஆரண முடிமேல்

ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்சோதி’

‘சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த

 அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி’

என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை எடுத்துக் காட்டி தீர்ப்பு வழங்கினார் நீதியரசர் சந்துரு அவர்கள்.

இப்படை ஊர்தோறும் இருக்கும்; நாடுதோறும் பரவும் - 

உலகம் முழுவதும் பரவும்!

எனவேதான், நீங்கள் வள்ளலாருக்குக் காவிச் சாயமும் பூச முடியாது; வள்ளலாரை முழுக்க முழுக்க நீங்கள் சனாதனவாதியாகவும் ஆக்க முடியாது.

அதற்குரிய பாதுகாப்புப் படையாகத்தான் இந்தப் படை இருக்கிறது; இப்படை ஊர்தோறும் இருக்கும்; நாடுதோறும் பரவும் - உலகம் முழுவதும் பரவும். 

இன்றைய பிரகடனம் அதுதான் நண்பர்களே, எனவேதான், வள்ளலார் நெறிப்படி பார்த்தால் ஜாதி ஒழியவேண்டும்.

வள்ளலார் நெறிப்படி பார்த்தால் மதவெறி ஒழியவேண்டும்.

வள்ளலார் நெறிப்படி பார்த்தால், இந்த நாட்டில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்.

இங்கே அருள்மொழி அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்; அழகாக விளக்கம் சொன்னார், ‘‘வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடுகிறேன்'' என்று பயிரைப் பார்த்து சொன்னாரே என்று.

அந்த ஓருயிராக இருக்கக்கூடிய பயிரைப் பார்த்துச் சொன்னார். அதனால்தான் சோறு போட்டார்.

அன்றைக்குப் பற்ற வைத்த அடுப்பு 

இன்றும் எரிந்துகொண்டிருக்கிறது!

பசித்தவர்களுக்கெல்லாம் சோறு போட்டார்; அன்றைக்குப் பற்ற வைத்த அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட அந்த வள்ளலார், வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன் என்று சொன்னதினுடைய நோக்கம் என்ன?

அன்பிற்கு விளக்கம் சொன்னார்.

மிக அழகாக ஆரம்பித்து சொல்ல ஆரம்பித்தார் எழுச்சித் தமிழர் அவர்கள். நீங்கள் சத்தம் போடாமல் இருந்திருந்தால், அவர் தொடர்ந்து பேசியிருப்பார். அதைக் கெடுத்துவிட்டீர்களே என்றுதான் எனக்கு வருத்தம்.

பல பேர் வள்ளலாரைப் பற்றி பேசுவார்கள்; இரண்டே வரிகள்தான் தெரியும்.

அருட்பெருஞ்ஜோதி - தனிப்பெருங் கருணை என்பார்கள்.

நாங்கள் வள்ளலாருடைய ஆறாந் திருமுறை வரை படித்தவர்கள்; அவருடைய தத்துவத்தைப் புரிந்தவர்கள். 

எங்களுக்கு ஒப்பனை முக்கியமல்ல; உயிர், உடல் என்பது மிகவும் முக்கியம்.

‘‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே'' என்ற இந்த வார்த்தை எங்கேயாவது இருக்கிறதா?

வள்ளலார் அவர்கள், திருவள்ளுவருடைய கருத்தை உள்வாங்கினார்.

அன்புடையார் எல்லாம் உடையார்.

உடனே நம்மூரில் இருப்பவர் என்ன சொல்கிறார், ‘‘ஓ, உடையார் ஜாதியாரைப்பற்றி திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் பாருங்கள்'' என்று.

அவருடைய அறியாமையைப் பாருங்கள். இப்படி யெல்லாம் குறுகிய பொருள் கொள்ளக்கூடாது.

‘‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே!'' என்றார்.

‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'' என்று சொன்னார்.

‘‘பூட்டிய கதவைத் தட்டு - திற’’ என்று சொல்லுவதற்கு...

ஆனால், இன்றைக்கு என்ன செய்கிறார்கள்? அன்போடு கடவுளைப் பார்க்கவேண்டும் என்று இங்கே இருக்கின்ற சகோதரர்கள் கோவிலுக்குச் சென்றால், கோவில் கதவைப் பூட்டி வைக்கிறார்கள். ‘‘பூட்டிய கதவைத் தட்டு - திற'' என்று சொல்லுவதற்குத் திருமா வளவன்களும், வீரமணிகளும், மற்றவர்களும் திரளக் கூடியவர்கள்.

எனவேதான், வள்ளலார் இன்றும் தேவைப்படுகிறார்; என்றும் தேவைப்படுவார்; பெரியார் அதைத்தான் வலியுறுத்தினார்.

ஆகவேதான் நண்பர்களே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனப் பரிந்துரையைப்பற்றி நாமெல்லாம் பெருமைப்படவேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இளையபெருமாள் ஆணையம் பரிந்துரை செய்தது. 

கலைஞர்தான் கவலைப்பட்டார்; 

தி.மு.க.தான் கவலைப்பட்டது!

இந்தியாவே கவலைப்படவில்லை; கலைஞர்தான் கவலைப்பட்டார்; தி.மு.க.தான் கவலைப்பட்டது; இந்த இயக்கம்தான் கவலைப்பட்டது. அதனுடைய விளைவு தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் என்பது.

இப்பொழுது வடக்கேயும் இது பற்றிக்கொண்டுள்ளது. ஹிந்தி மாநிலமான ராஜஸ்தானில், அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் குரல் ஒலிக்கத் தொடங்கியதும், அலறுகிறார்கள் பார்ப்பனர்கள்.

சனாதனம் விடைபெறும் - 

சரித்திரம் நிலைக்கும்!

ஆகவேதான், 

ஜாதி, மதம் என்பது, ஆட்டங்காணும்; 

இயற்கை, விஞ்ஞானம் வெல்லும்; 

அஞ்ஞானம் ஒழியும்; 

சனாதனம் விடைபெறும் - 

சரித்திரம் நிலைக்கும்!

தத்துவங்களை மாற்ற முடியாது நீங்கள் -  எவ்வளவு பித்தலாட்டம் செய்தாலும், ரவி அவர்களே, நீங்கள் எப்படி அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கம் செய்து உத்தரவுப் போட்டு, அதை உடனே வாபஸ் வாங்கினீர் களோ, அதேபோல,  அடுத்து ஓடிப் போகவேண்டிய கட்டத்தை உருவாக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அது எங்களால் அல்ல; உங்களால்தான்.

எனவேதான், வடலூர் வள்ளலாரைக் கருவியாக நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதற்காக இவ்வளவு பெரிய மாநாட்டை குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த, கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களுக்கும், அவருக்கு ஒத்துழைத்த அத்துணைக் கட்சித் தோழர்கள், இயக்கத் தோழர்களுக்கு நன்றி!

இம்மாநாட்டில், பல நிகழ்ச்சிகளை எங்களுக்காகத் தள்ளி வைத்துவிட்டு, எழுச்சித் தமிழர் திருமா அவர்கள் பங்கேற்று இருக்கிறார்.

நம்முடைய எழுச்சித் தமிழர் திருமா அவர்கள் இல்லாமல்,  பெரிய நிகழ்ச்சிகளை நடத்தமாட்டோம்; ஏனென்றால், ஒரு குடும்பத்தில் ஒன்றாக இருக்கக்கூடிய அந்த உணர்வுதான்.

ஆகவேதான், நாங்கள் அழைத்தவுடன், எவ்வளவு தான் கஷ்டங்கள் இருந்தாலும், அத்தனை பணிகளையும் முடித்துவிட்டு இம்மாநாட்டில் பங்கேற்று இருக்கிறார்.

அவருக்கு நன்றி!

உங்களுக்குப் பாராட்டு!

அமைதியாக இருந்து, வரவேற்பு கொடுங்கள்!

இப்பொழுது எப்படி அமைதியாக இருக்கிறீர்களோ, அதுபோல, எப்போதும், அவர் உரையாற்றும்பொழுதும் அமைதியாக இருந்து, வரவேற்பு கொடுங்கள் என்று சொல்லி, விடைபெறுகிறேன்.

வாழ்க வள்ளலார்!

சனாதனம் ஒழிக!

சமதர்மம் வெல்க!

சனாதனம் ஒழிக!

வள்ளலார் ஒருபோதும் சனாதனவாதி இல்லை!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment