இவர் தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனையாளர்
அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி - ஆனால், பெயர் மட்டும் குழந்தை!
புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி.
திண்ணையில் தொடங்கி
சென்னை பல்கலை வரை....
1906ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது.
பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப் பயிற்சி செய்யும் திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார் குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு பாடவல்லவர். இவருடைய பொழுது போக்கு பாட்டெழுதுவது. 1934இல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.
இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில் தொடங்கி 37 ஆண்டுகள் தொடர்ந்தன. பவானி உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரிய ராகவும் பணியாற்றினார். கவி பாட வேண்டும் என்ற வேட்கை. இளமையில் இசைக்கேற்பப் பாடத் தொடங்கினார். பின்னாளில் மரபில் மடை திறந்தார் கவிதைகளை. நல்ல பேச்சாளர், கவிவாணர், மொழி உணர்வாளர்.
1938, 1948, 1965 ஆகிய ஆண்டுகளில் நுழைய முயன்ற ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் இறங்கியவர் இவர்.
இவரின் பேச்சும், பாடல்களும் அங்கே உணர்ச்சிப் பெருக்காயிற்று, மக்கள் உணர்வுப் பிழம்பாயினர்.
1946 தொடங்கி 1958ஆம் ஆண்டு வரை ‘வேளாண்’ இதழைத் தொடர்ந்து நடத்திய இதழாளர்.
இவர் தந்தை பெரியாரின் தன்மதிப்புச் (சுயமரியாதை) சிந்தனையாளர்.
கம்பன் பாடியது ஆரியத்திணிப்பு
குழந்தை பாடியது தமிழரின் இனமானம்
கம்பனோடு போட்டி போட்டவர் குழந்தை.
12 ஆயிரம் பாடல்களைப் பாடினான் கம்பன் - பெயர் இராமகாதை, இராமாயணம்.
3100 பாடல்களைப் பாடினார் புலவர் குழந்தை - பெயர் ‘இராவண காவியம்’
“தமிழ்ப் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவு படுத்தும் புராணக் கதைகளையே பாடி வந் தார்கள். அதற்கு மாறாக இராவண கவியத்தைப் படைத்து இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்” - 1971ஆம் ஆண்டு விழுப்புரத்தில் புலவர் குழந்தையை இவ்வாறு பாராட்டுகிறார் தந்தை பெரியார்.
“இராவண காவியம் பழைமைக்குப் பயணச் சீட்டு. புதுமைக்கு நுழைவுச் சீட்டு” - இராவண காவிய நூலில் அறிஞர் அண்ணாவின் அணிந் துரை வரிகள் இவை. “கம்பனின் இராமாய ணத்தை இராவணகவியமாக மாற்றியமைத்ததன் மூலம், செந்தமிழ்ப் பெருமக்களின் சிந்தனைத் தீயை நெய்யூற்றி வளர்த்தார் புலவர் குழந்தை” என்றார் அண்ணா!
ஆரியர்களின் சமூக ஆதிக்கப் பண்பாட்டைத் தடுத்து நிறுத்தித் தகர்த்தெறிந்த இராவண காவியம் வெளியான ஆண்டு 1948.
இராவணனைத் தலைவனாக்கி, இராமனை வில்லனாக்கினால் விடுமா காங்கிரசு அரசு? அன்றைய காங்கிரசு அரசால் அதிரடியாகத் தடை செய்யப்பட்டது புலவர் குழந்தையின் இராவண காவியம். தடைக்கு இன்னொரு காரணம் அது திராவிடர்களின் பேரிலக்கியங் களில் ஒன்று. காலம் மாறியது. திராவிட முன் னேற்றக் கழகம் ஆட்சியில் ஏறியது. திராவிடப் பேரிலக்கியத்தின் தடையைத் திராவிட இயக்க ஆட்சி நீக்கியது - நீக்கியவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், ஆண்டு 1971.
திருக்குறள் மாநாடு
புலவர் குழந்தை பாடல்கள் 13 கவிதை நூல்கள் முன்று இலக்கண நூல்களை எழுதியவர் புலவர் குழந்தை.
தந்தை பெரியாரின் மீது மரியாதையும், சுய மரியாதை கொள்கை மீது பற்றும் கொணடவர். 1948ஆம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது.
பெரியார் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை எழுத அறிஞர் குழு ஒன்றினை அமைத்தார் அதில் முக்கியமானவர் புலவர் குழந்தை. இருபத்தைந்தே நாள்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார். இந்த உரையுடனே திருக்குறள் குழந்தையுரை என்ற நூல் வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment