உணவு பாதுகாப்பு தொடர்பாக இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய போட்டி - 13 மாவட்டங்களுக்கு விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

உணவு பாதுகாப்பு தொடர்பாக இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய போட்டி - 13 மாவட்டங்களுக்கு விருது

சென்னை, ஜூலை 2 உணவு பாதுகாப்பு தொடர்பாக இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய போட்டியில் 13 மாவட்டங்கள் விருது பெற்றன. 

அதாவது வணிகங்களுக்கான உரிமம், பதிவுச்சான்று வழங்குதல் மற்றும் உணவு மாதிரிகள் எடுத்து கண்காணித்தல், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவது குறித்து தர மதிப்பீடு செய்தல் மற்றும் சான்று வழங்குதல், தரமான, பாதுகாப்பான, செறிவூட் டப்பட்ட, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துதல், உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தொடர்பாக இந்த போட்டி நடைபெற்றது. இதில், தேசிய அளவில் 260 மாவட்டங்கள் கலந்து கொண்டன. தமிழ்நாட்டில் இருந்து 31 மாவட்டங்கள் இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில் கோவை, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, வேலூர் ஆகிய 13 மாவட் டங்கள் சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகளை பெற்றன. 

இந்த போட்டியில் கோவை மாவட்டம் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. உணவுப் பொருட்களை பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதி காரமளித்தல் உள்ளிட்ட 5 குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2022-2023-ஆம் ஆண்டுக்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு 3-ஆம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை 13 மாவட்டங்களைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சென்னை தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.   

No comments:

Post a Comment