காமராசர் பற்றி தந்தை பெரியார்!
மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான்.
மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறி களாய் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவே தான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’ 23.1.1965)
திரு. காமராசர் போன்ற பற்றற்றவர்களுக்கு உதவி செய்தால் நமக்கு நன்மை ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏன்? ஆச்சாரியார் இருந்து நமக்குக் கொடுத்த தொல்லைகளை நீங்கள் அறிந்ததேயாகும். குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து நம்மீது திணித்தார். உத்தியோகத்தில் நமக்குக் கிடைக்க வேண்டியதையெல்லாம் அவர் இனத்திற்குக் கொடுத்தார். திரு. காமராசர் வந்ததும் அதை அப்படியே மாற்றி, ஆச்சாரியார் தன் இனத்திற்குச் செய்ததுபோல இவர் நம் இனத்திற்குச் செய்கிறார் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள், அவரை எப்படியாவது ஒழித்துக்கட்டத் திட்டமிட்டு அவருக்கு எவ்வளவு தொல்லைகள் உண்டாக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து வருகிறார்கள். ஆகவேதான் நாம் திரு. காமராசரை ஆதரிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்; திரு. காமராசர் அவர்கள் தோல்வி அடைந்து மந்திரி பதவிக்கு வரமுடியவில்லையானால் அடுத்து வருபவர் யாராக இருக்க முடியும் என்பதையும், வந்தால் நமக்கும் நம் இனத்திற்கும் எவ்வளவு தீமைகள் உண்டாகுமென்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நம் இனம் முன்னேற வேண்டுமானால் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து திரு. காமராசருடைய கையைப் பலப்படுத்த வேண்டும்.
(2.10.1956 அயன்புரத்தில் திரு.வி.க. நினைவு நாள்-_ தந்தை பெரியார் உரை ‘விடுதலை’ 9.10.1956)
---
தந்தை பெரியார் பற்றி காமராசர்
பெரியகுளம் நகரசபை சார்பிலும் திராவிடர் கழகம் சார்பிலும் முதல் மந்திரி காமராசருக்கு வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன.
“திரு. காமராசர் பதிலளிக்கையில், திராவிடர் கழகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அதற்கு நல்ல முறையில் தலைமை வகிப்பதாகச் சொன்னார். பிற கட்சிகளைப் போல எல்லாவற்றையும் கண்டபடி தாக்காமல், கெட்டதெனப் புலப்படுவதைக் குறை கூறவும், நல்லதென நினைப் பதைப் பாராட்டவும் அவர் தயங்குவதில்லை. மற்ற கட்சிகளைப் போல் தேர்தலில் கலந்து கொள்ளாததால் இவ்வாறு நடந்து கொள்ள அவரால் முடிகிறது என்று அவர் கூறினார்”.
('தினமணி' 13.2.1955).
---
உண்மையிலேயே தமிழ்நாட்டில் இன்றைக்குள்ள அரசியல் சமுதாய விழிப்புக்கு முக்கியக் காரணம் பெரியார் அவர்களின் தொண்டாகும். அவருடைய சேவையை அடிப்படையாகக் கொண்டதுதான் இன்றைய தினம் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திர நாட்டின் வாழ்க்கையாகும்"
27.11.1955 அன்று நடைபெற்ற டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவின் பிறந்த நாள் விழாவில் காமராசர் ஆற்றிய உரையிலிருந்து - ‘விடுதலை’ (3.12.1955)
---
பெரியார் தேவை - காமராசர் உரை
“சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்தெறிந்து தன்மானத்துடன் சரிசமமாக வாழும் மறுமலர்ச்சி வேண்டுமென்று சோஷியலிச லட்சியத்தை உருவாக்கித் தந்தவர் பெரியாரே. அவரது லட்சியம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பரவியது. அவர் சேவையால்தான் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அவர் விதைத்ததை நாம் அறுவடை செய்து அனுபவிக்கிறோம்.
சமத்துவ சமுதாயம் விரைவில் அமைய வேண்டும் என்ற அவரது லட்சியம் முற்றிலும் நிறைவேற வேண்டும். எவ்வளவு விரைவாக நம்முடைய சமுதாயத்தில் மனிதன் சமமாக வாழக்கூடிய சமுதாயம் உருவாக்க முடியுமோ அதை உருவாக்க வேண்டும். அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள், எல்லா வேலைகளையும் செய்து விதைத்திருக்கிறார்கள்; களையெடுத்திருக் கிறார்கள். நாம் செய்ய வேண்டியது அறுவடைதான். அதைக்கூட நாம் செய்யமாட்டோம் என்று சொல்ல முடியுமா என்ன? அதை எப்படிச் செய்யப் போகிறோம்? என்பதே பிரச்சினை.
அவர்களுக்கு 89 வயது ஆகிறது. இன்னும் பல ஆண்டுகள் இருக்க வேண்டும். அவர்களுடைய வழி காட்டுதல் நமக்குத் தேவை என்பதற்குக் காரணம் மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லக்கூடிய துணிவு எனக்குத் தெரிந்த வரையில் அவர் ஒருவருக்குத்தான் உண்டு. என் னுடைய மனதில் நினைத்ததைச் சொல்வதற்குள் யார் என்ன நினைப்பார்களோ என்று பார்த்துப் பார்த்து அவற்றை நினைத்தும், அவை நல்லவையாக இருந்தாலும் சொல்லாமல் இருந்து விடுகிறேன். அவர்களிடத்தில் அது கிடையாது. யாருடைய தயவு தாட்சண்யத்தைப் பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. தனக்கு நியாயமாகப்படும்போது அதனால் யாருடைய வருத்தத்திற்கும் கவலைப்பட மாட்டேன் என்று சொல்கிறார்கள். அப்படி வாழ்ந்து நல்ல முறையில் சொல்லக் கூடிய தலைவர் நீண்ட நாள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்."
('விடுதலை', 22.09.1967)
No comments:
Post a Comment