மேட்டூர் அணையில் நீர்வரத்து விநாடிக்கு 10,232 கன அடியாக அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

மேட்டூர் அணையில் நீர்வரத்து விநாடிக்கு 10,232 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர், ஜூலை 28 ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று (27.7.2023) விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து, மாலையில் 17 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,232 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கருநாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியை கடந்தது. நேற்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. நண்பகல் 12 மணியளவில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியைக் கடந்தது. ஆனால், மாலை 5 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில் பிரதான அருவி, சினிபால்ஸ் அருவி, அய்வர் பாணி எனப்படும் அய்ந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பாறைகள் படிப்படியாக மூழ்கத் தொடங்கியுள்ளன. பரிசல் இயக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டு, ஒகேனக்கல் பரிசல் துறை பூட்டப்பட்டது. 

மேட்டூருக்கு நீர்வரத்து: கருநாடக மாநில அணை களில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர், மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. அணைக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 10,232 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், அணையின் நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 64.80 அடியாகவும், நீர் இருப்பு 28.39 டிஎம்சியாகவும் இருந்தது.


No comments:

Post a Comment