உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் (EWS) பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும் - சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 9, 2023

உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் (EWS) பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும் - சிறப்புக் கூட்டம்

தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை, ஜூன் 9- உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் (EWS) பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம்  நேற்று (8.6.2023) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

சிறப்புக்கூட்டத்தில் கருத்துரையாற்றியவர்கள் கூறு கையில்,  உயர்ஜாதியில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு என்கிற அரசமைப்பு விரோத சட்டம் வரும்போது இந்தியாவிலேயே முதலில் அதனை கடுமையாக எதிர்த்து அறிக்கை விடுத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். சமூக நீதி என்றால் இந்தியாவுக்கே வழிகாட்டி யாக இருப்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்று குறிப்பிட்டார்கள்.

பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரையாற்றினார்.

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோரின் கருத்துரையைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கருத்துரை நிறைவுரை வழங்கினார்.

பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரையில், சமூக நீதித் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் இடஒதுக்கீடு முக்கியப்பங்கு வகிக்கின்றது. அது வேலைவாய்ப்பாகட்டும், கல்வி ஆகட்டும். அரசியல் தளத்திலே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடங்கள் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற வகையிலே அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க நாடு விடுதலை அடைந்த காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சமூக நீதி தத்துவத்துக்கு தொடக்கம் முதல் எதிர்ப்பாக இன்னும் சொல்லப்போனால் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே அதற்கு எதிர்ப்பாக இருந்த சங்கிகள், அதனுடைய இன்றைய வடிவங்களாக இருக்கக்கூடிய இன்றைய பாசிச பாஜக, அந்த சமூக நீதித் தத்துவத்தை திசைதிருப்பி, அந்த சமூக நீதித் தத்துவத்தை, இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்கின்ற வகையிலே, உயர்ஜாதி ஏழைகளுக்கு, இதுவரை இடஒதுக்கீட்டின் கீழ் வராத உயர்ஜாதியினருக்கு என்று பொதுவாக சொன்னாலும், அதனால் பலன் அடைபவர்கள் பார்ப்பனர்கள்தான் அதனை வெளிப்படையாகச் சொல்லாமல், உயர்ஜாதி ஏழைகளுக்கு என்று மிகக் குறுகிய காலத்திலே, அரசமைப்புச்சட்டத்திலே எந்த விதியும் இதுவரை அவ்வளவு விரைவில் மாற்றப்படவில்லை. ஒருவார காலத்தில் அமைச்சரவை முடிவெடுத்தது,  அரசாணையாக நடைமுறைக்கு வந்த ஒரு சூழல் வந்தது. இதை எதிர்த்து சென்றபோதிலும்கூட, உச்சநீதிமன்றம் அதனை ஆமோதிக்கின்ற வகையிலே நீதிமன்ற மாண்புகளையெல்லாம் குலைக்கின்ற வகையிலே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை எதிர்த்தும் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. மறு ஆய்வு செய்யப்பட உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே சமூக நீதி  மண்ணான தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விடமாட்டோமா என்ற நப்பாசையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான பாஜக சில செயல்திட்டங்களை அறிவித்துள்ளது.

சமூகநீதிக்கு எப்போதெல்லாம் அச்சுறுத்தல், அறைகூவல் வருகின்றதோ, அதை முதல்முதலாக எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவர் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். அந்த வகையிலே உண்மை நிலை என்ன, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும்கூட அது சமூகநீதிக்கு எதிரானது, அது எப்படியெல்லாம் முறியடிக்கப்பட வேண்டும் என்ற வகையிலே பாஜகவின் செயல்திட்டத்தை தமிழ்நாட்டிலே முறியடிக்க வேண்டும் என்ற வகையிலே அதன் உண்மை விளக்கங்களை, பாஜகவின் தந்திர வித்தைகளை எடுத்துக்காட்டவே இந்த சிறப்புக்கூட்டம். என்று குறிப்பிட்டார்.

கழகத்துணைத் தலைவர் தொடக்க உரை

எப்போதெல்லாம் சமூக நீதியாக இருந்தாலும், தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என்ற நிலை ஏற்பட்டாலும் உடனே ஒரு போர்க்குரல் வெடித்துக்கிளம்புகிறது என்று சொன்னால் அது பெரியார் திடலாகத்தான் இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

பல்வேறு காலக்கட்டங்களிலே இந்த இடத்திலே நம்முடைய தலைவர் அவர்கள் ஆற்றிய உரை தொடக்கத்திலே எவ்வளவு எதிர்ப்புகளும், இடர்ப்பாடுகளும் இருந்தாலும் இறுதி வெற்றி பெரியார் திடலுக்கு என்ற நிலைதான் கடந்த காலத்திலும் இருந்தது. இப்போது நாம் எடுத்துக்கொண்டிருக்கின்ற இந்தத் தலைப்பும் நிச்சயமாக வெகுமக்களை பாதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்ற காரணத்தினாலே வெற்றி நமதே என்பதில் இரண்டு கருத்துக்கு இடமிருக்க முடியாது.

தந்தைபெரியார் காங்கிரசுக்குள்ளே நுழைந்தது முதல் அவர் சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் என்று வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும். சுதந்திரம் பெறாதபோது தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு இருந்தது.சுதந்திரம் பெற்று குடியரசு ஆனவுடன் நம்மக்களுக்கு இருந்த இடஒதுக்கீடு சமூக நீதி பறிக்கப்பட்டது.

முதல் சட்டத்திருத்தமே இந்த இடஒதுக்கீட்டுக்காகத்தான். அதைக் கொண்டுவருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தந்தைபெரியார். மக்களை எல்லாம் ஒன்று திரட்டி கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையிலே மாணவர்களைக்கூட கிளர்ச்சியில் ஈடுபடச் செய்து முதல் சட்டத்திருத்தம் வந்தது என்பது வரலாறாகும்.

இன்றைக்கு புதிதாக இந்த இடஒதுக்கீட்டிலே பொருளாதார அளவுகோலைக் கொண்டு வரவேண்டும்  என்கின்ற ஒரு திட்டமிட்ட சதி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டியதுதானே என்ற எண்ணம் ஏற்படுமே தவிர, அதற்குள் இருக்கக்கூடியது விஷம் என்ன என்பதை நாம் நன்றாகப் பரிந்துகொள்ள வேண்டும்.

எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் 9ஆயிரம் ரூபாய் இருந்தால் இடஒதுக்கீடு கிடையாது என்று சொன்னபோது கூட, சமூகநீதியில் ஆர்வமும், அக்கறையும் இருந்தவர்களிடம்கூட அது சரிதானே என்ற மேம்போக்கான எண்ணம் இருந்தது.

அந்த நேரத்திலே தலைவர்களுக்கெல்லாம் வகுப்பு எடுப்பதைப்போல நம்முடைய தலைவர் அவர்கள் இதிலுள்ள ஆபத்தை எடுத்துச்சொல்லி, தமிழ்நாடெங்கும போராட்டங்களை நடத்தி, அந்த ஆணையை எரித்து கோட்டைக்கு அனுப்பினோம். அதற்குப்பின்னால் ஆறு மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலே தோல்வியைக் கண்டறியாத எம்.ஜி.ஆர். 39 தொகுதிகளில் 37 இடங்கள் தோற்பதற்கு காரணம் இந்த இடஒதுக்கீடு பிரச்சினைதான். அதற்குப்பின்னாலே அந்த ஆணையை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல் 31லிருந்து 50ஆக உயர்த்தப்பட்டது. இது ஒரு நீண்ட வரலாறு.

இன்றைக்கு உள்ள ஒன்றிய அரசின் அடிப்படைக் கொள்கை ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்பது இடஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. தொடக்கக்  காலம் முதலே இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள்தான். 

மண்டல் குழு பரிந்துரையில் வேலைவாய்ப்பில் 27 விழுக்காட்டை சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் கொண்டுவந்தபோது, வெளியிலிருந்து ஆதரவு கொடுத்த பிஜேபி, ரத யாத்திரை என்ற ரத்த யாத்திரையை நடத்தி, தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டதால் விபிசிங் ஆட்சி கவிழ்ந்தது.

இன்றைக்கு ணிகீஷி என்று சொல்கிறார்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், அதிலும் உயர்ந்த ஜாதி ஆண்டு வருமானம் 8 லட்சம், ஏழைகள் நாளொன்றுக்கு ரூ.2220 சம்பாதிப்பவர்கள் ஏழைகள். அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று அவசரஅவசரமாக சட்டம் கொண்டு வருகிறார்கள். எத்தனையோ மசோதாக்கள் தூங்கி வழிகின்றன.

சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட முன்வரைவுகள் ஆளுநர் மாளிகையில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த ணிகீஷி சட்டம் மட்டும் வாயு வேகம், மனோவேகத்துடன் என்று சொல்வதுபோல நிறைவேற்றுகிறார்கள்.

வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி

அரிய வகை ஏழைகள் என்று கூறி உயர்ஜாதியில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு என்று சட்டம் கொண்டு வந்தபோது, மாயாவதி, சமாஜ்வாதி, காங்கிரசு, சிபிஎம் போன்ற கட்சிகள் ஆதரித்தன. திமுக, ஆர்ஜேடி, ஓவைசி, சிபிஅய் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. 

இந்தியாவிலேயே  முதல்முதலில் எதிர்த்து குரல் கொடுத்தவர் ஆசிரியர் அவர்கள்தான். தொடர்ந்து அதுபற்றி கவலைப்படுபவர் ஆசிரியர் அவர்கள்தான்.

இப்போதும் முன்பு கூட்டியதைப்போல மீண்டும் அனைத்துக்கட்சிகள், அமைப்புகளைக் கூட்டிய அடுத்தகட்ட நடவடிக்கைக்காக கூட்டத்தை ஆசிரியர் கூட்ட வேண்டும்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி

ஜாதியின் பெயரால் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் எல்லாவற்றையும் சலுகையாகப் பெற்றவர்கள் இன்றைக்கு வலிமையான சமூகமாக தங்களுக்கு வசதியாக சட்டம் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். 

103ஆவது சட்டத்திருத்தம் அரசியல் சாசன திருத்தம் என்றபோது வலிமையாக எதிர்ப்பு தெரிவித்தது திராவிடர் கழகம். நீதிமன்றத்தில் செல்லாது என்று தமிழர் தலைவர் தெரிவித்தார். ஆனால் நம்முடைய நம்பிக்கையை பொய்ப்பித்தது நீதிமன்றம்.

இதுவும் நடக்கும் என்று தந்தை பெரியார் சொல்லியுள்ளார்.

103ஆவது சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் 3 பேர் செல்லும் என்றும், இருவர் மாறுபட்ட கருத்தையும் பதிவு செய்தனர். அதில் மூன்றாவது நீதிபதியின் கருத்தும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிராக இல்லை. அனைத்து ஜாதி ஏழைகளையும் சேர்க்க வேண்டும் என்றார்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை செல்லாது என்று நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஏற்கெனவே 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு விரோதமாக 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு கூறுகிறது.

இதில் Judicial Discipline இல்லை.நீதிமன்ற நடைமுறையே தவறாக உள்ளது. அரசமைப்புக்கு எதிரானதாக உள்ளது.

முதல் சட்டத் திருத்தத்தைப்பார்த்தவர் ஆசிரியர். தற்போது 103ஆவது சட்டத்திருத்தத்தை எதிர்ப்பவரும் ஆவார்.

EWS குறித்து இளைஞர்கள், மாணவர்களிடம் இந்த கருத்து சென்று சேர வேண்டும். 

இளைஞர்கள் ஜாதி, மதம் பெருமை, அடையாளம் என்று போலிப் பெருமையில் இருந்து வருகின்றனர்.

ஜாதி சங்கங்கள் தந்தைபெரியார் காலத்திலிருந்து ஆசிரியர் காலத்திலும் இங்கு கூடினார்கள். கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக. முன்னேற்றத்துக்காக.

கல்வி உரிமை பறிபோனால் திரும்பப் பெற 100 ஆண்டுகள் ஆகிவிடும். கழகத்தின் போராட்டக் குரலை இன்றைய இளைஞர்கள் எதிரொலிக்க வேண்டும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இங்கே புதிய இளைஞர்கள் ஏராளமானவர்களைப்பார்க்கும்போது எல்லையற்ற மகிழ்ச்சி. சமூகநீதிக்கான போராட்டம் பல நூற்றாண்டுகள் நடைபெற்று வருவதாகும்.

புராண காலத்திலிருந்து தொடர்கிறது. தேவாசுரப்போராட்டம் என்று அய்யா சொல்லுவார்.

இன்றைக்கும் திராவிடம், சனாதனம் என்று பெயர் மாறினாலும் போராட்டத்தின் தத்துவம் ஒன்றுதான்.

இன்னமும் இடஒதுக்கீடு எல்லா இடத்திலும் வரவில்லை.

ஆனால் மோடியரசில் லேட்டரல் என்ட்ரி என்கிற பெயரில் தனியார் நிறுவனங்களிலிருந்து நேரடியாக இணைசெயலாளர்கள் நியமனம் நடைபெறுகிறது.

போராடிப்பெற்ற அனைத்தும் பழிவாங்கப்படுகின்ற அளவுக்கு பறிக்கப்படுகிறது.

எல்லா வகுப்புகளுக்கும் இடஒதுக்கீடு வேண்டும். நாளையும் அதுதான் நம் கொள்கை.

இடஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல.

உயர்ஜாதி ஏழைகள் என்றால் புள்ளிவிவரங்கள் தேவைஇல்லையா?

100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் எங்கள் பெண்கள் வேலை செய்கிறாரகள். அதுபோல் உயர் ஜாதி ஏழைகள் இருக்கிறார்களா? நீதிபதிகளுக்கே கூட இடஒதுக்கீடு குறித்து எடுத்து சொல்ல வேண்டியதாக உள்ளது.

திராவிட இயக்கம் சமூக நீதி வரலாற்றில் பின்னிப்பிணைந்து உள்ளது.

சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் என்கிற அடிப்படையில்தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசமைப்புச்சட்டம்.

ஆனால், அரசமைப்புச்சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே மாற்றுகிறார்கள்.

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு EWS நிறைவேற்றாமல் இருக்கிறது என்றால் முதுகெலும்பு உள்ள அரசு என்பதால்தான்.

முன்பு 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து தெருத்தெருவாக சொன்னோம். இப்போது EWS பற்றி தெருமுனைக்கூட்டங்கள் நடத்துவோம்.

போராட்டம் பிரச்சாரம் தொடரும். எங்களுக்கு வாழ்க்கையே போராட்டம்தான்.

இன்று நூற்றாண்டு காணும் கலைஞர் அவர் ஆட்சியில் சட்டநாதன் குழுவை அமைத்தார். அவர்கள் திருச்சிக்கு சென்று தந்தைபெரியாரை சந்தித்தார்கள். உச்சநீதிமன்றம் 50க்கு மேல் கூடாது என்று கூறியுள்ளதே என்றபோது 49 என்பது 50க்கு கீழ்தான்  வருகிறது என்று கூறுங்கள் என்றார் தந்தைபெரியார்.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு 9ஆம் அட்டவணைப் பாதுக்காப்பில் உள்ளது.

புத்தக வெளியீடு

சமூக நீதி, இடஒதுக்கீடு தொடர்பான புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட தோழர்கள் மேடைக்கு வந்து கழகத் தலைவரிடம் பெற்றுக்கொண்டார்.

துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். 

வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment