பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் நம்மை இயக்கும் உணர்வுகள்!
அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில்
நாட்டை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற உறுதி எடுப்போம்!
யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட - யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே முக்கியம்!
சென்னை, ஜூன் 8- பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரி யர் நம்மை இயக்கும் உணர்வுகள்! அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற உறுதி எடுப்போம்; யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதே முக்கியம் என்றார் தி.மு.க. தலைவரும், முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நேற்று (7.6.2023) மாலை கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற்றது. அப்பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு,
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தோம்.ஆனால், ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்க நேர்ந்தது. அன்று நடைபெறுவதாக இருந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.அதனைத்தான் மனிதநேய மாண்பாள ரான தலைவர் கலைஞர் அவர்களும் விரும்பியிருப்பார்.
ஓராண்டு முழுவதும்
கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டம்!
தலைவர் கலைஞரைக் கொண்டாட வேண்டியது, அவரது புகழைப் பரப்ப வேண்டியது நம்முடைய கடமை.அதனால்தான் நாம் இன்று தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை கொண்டாட இருக்கிறோம்.
95 வயது வரை வாழ்ந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், இன்னும் கூடுதலாக அய்ந்து ஆண்டுகள் வாழ்ந் திருந்தால், இதே மேடையில் விழா நாயகராக நடுநாயகமாக அவரே அமர்ந்திருப்பார்.முதுமையின் காரணமாக அவர் உடல் நலிவுற்றார்.நம்மை விட்டுப் பிரிந்தார். பிரிந்தார் என்று சொல்வதை விட, நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல எங்கும் நிறைந்திருந்து, தலைவர் கலைஞர் நம்மை கண் காணித்துக் கொண்டு இருப்பதாகவே நான் கருதுகிறேன். எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் - எந்த திட்டங்களைத் தீட்டினாலும் எந்த விழாக்களில் பங்கெடுத்தாலும் - எந்த நிலைப்பாடுகளை எடுத்தாலும் தலைவர் கலைஞர் எங்கும் நிறைந்திருந்து கண்காணிக்கிறார் என்ற எண்ணத்தோடுதான் நான் நாள்தோறும் அவரது நினைவுகளைத் தாங்கி இருக் கிறேன். அந்த நினைவுகளின் காரணமாகத்தான் அண்ணனின் அருகில் அவர் துயில் கொண்டிருக்கும் கடற்கரைக்கு அடிக்கடி சென்று அவரது நினைவகத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறேன்.
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர்
நம்மை இயக்கும் உணர்வுகள்
இந்த மேடையில் தலைவர் கலைஞர் அவர்களும் அமர்ந்திருப்பதாகவே நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நம்மைப் பொறுத்தவரையில் தந்தை பெரியாரும் - அறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர் களும் - இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களும் - நம்மை நாள்தோறும் இயக்கும் உணர்வுகள்!
அந்த உணர்வுகள்தான், அவர்களது மறைவுக்குப் பிறகும் நமக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன! அந்த வகையில், எங்களின் உணர்வே! எங்களின் உயிரே! எங்களின் எழுச்சியே! எங்களின் வழிகாட்டியே! எங்களின் கலங்கரை விளக்கமே! எங்களின் உதயசூரியனே! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களே! உங்களின் 100 ஆவது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடத் தொடங்குகிறோம்!
தலைவர் கலைஞர் அவர்களே! நீங்கள் எப்போதும் உடன்பிறப்புகளுக்கிடையேதான் இருப்பீர்கள்! இதோ, உங்களது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக் கிடையேதான் இந்த விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
தலைவர் கலைஞர் அவர்களே! நீங்கள் எப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், மாவட்ட திமுக செயலாளர்கள் என அனைவரும் சூழ்ந்திருக்கத்தான் உங்களது பிறந்தநாளை நீங்கள் கொண் டாடுவது வழக்கம்! இதோ, உங்களது திமுக தளகர்த்தர்களுக் கிடையே நூற்றாண்டு விழாவை நாங்கள் தொடங்குகிறோம்!
தலைவர் கலைஞர் அவர்களே! நீங்கள் எப்போதும் தோழமைக் கட்சித் தலைவர்களைத் தோளோடு தோள் சேர்த்துக் கொண்டுதான் வலம் வருவீர்கள்! இதோ இந்த மேடையில் நம்முடைய ஆசிரியர் அய்யா உள்ளிட்ட தோழமை இயக்கங்களின் தலைவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டுதான் உங்களது நூற்றாண்டு விழாவை நாங்கள் இன்றைக்கு தொடங்குகிறோம்!
வடசென்னையில்
நூற்றாண்டு விழா!
தலைவர் கலைஞர் அவர்களே! 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் கொட்டும் மழையில் ராபின் சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டதே, அதே, வடசென்னையில் உங்களது நூற்றாண்டு விழா தொடங்குகிறது!
தலைவர் கலைஞர் அவர்களே! திமுகவிற்கு என அறிவகம் உருவானதே, அதே, வடசென்னையில்தான் உங்களது நூற்றாண்டு விழா தொடங்குகிறது!
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தலைவரான முத்தமிழறிஞர் கலைஞருடைய நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் எடுக்கிறோம் என்று சொன்னால் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களும் பொருத்தமானவைதான் என்றாலும் திமுக தோன்றிய வடசென்னைப் பகுதியில் நாம் இந்த நூற்றாண்டு விழாவைத் தொடங்குவது மிக மிக சிறப்பானது.
75 ஆண்டுகளுக்கு முன்பு, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விதை போட்ட பகுதியில் கொள்கை வேர் பரப்பி - ஆல் போல் தழைத்து இருக்கும் இந்த இயக்கத்தை வளர்த்துக் காட்டிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்போடு, நான் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாண்டமானதாக நடத்திக் காட்டி இருக்கிறார் சென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் ‘செயல்பாபு’ என்று என்னால் எப்போதும் அழைக்கப்படும் அமைச்சர் சேகர் பாபு அவர்கள். அவருக்குத் தோளோடு தோள் நின்று இந்த மாவட்டத்திலே, பகுதியிலே, வட்டத்திலே விழா சிறக்க பணியாற்றி வரும் கிழக்கு மாவட்டச் செயல்வீரர்கள் அனை வருக்கும் திமுக தலைமைக் கழகத்தின் சார்பிலும் - என்னுடைய தனிப்பட்ட முறையிலும் - இதயப்பூர்வமான நன்றியையும் பாராட்டுதல்களையும் நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கலைஞருக்கு நன்றி செலுத்தும் விழா
ஓராண்டு முழுவதும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை - அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்தக் கொண்டாட்டங்களின் மூலமாக தலைவர் கலைஞருக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழைச் சேர்க்கப் போகிறோம் என்பதல்ல; நாம் - நம் நன்றியின் அடையாளமாக கொண்டாடிக் கொண்டிருக் கிறோம்! "நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியர் வீட்டுப் பிள்ளை" என்று சொன்னவர் கலைஞர்.
சாமானியர்களுக்கான ஆட்சி
அவரது ஆட்சியே சாமானியர்களுக்கான ஆட்சிதான்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளிகள் பயன்பெறும் ஆட்சியாகத்தான் இருக்கும்! திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது ‘முரசொலி’ இதழில் தலைவர் கலைஞர் அவர்கள், "ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில்! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" என்று எழுதினார்! ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன், பேரறிஞர் அண்ணா! ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன், முத்தமிழறிஞர் கலைஞர்! இவர்களுடைய ஆட்சி ஏழைகள் சிரிக்கும் ஆட்சி!
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்
உருவாக்கிய கலைஞர்
வேல்முருகன் பேசும்போது மிகப்பெரிய பட்டியல் போட்டாரே!
குடிசை மாற்று வாரியம்,
ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம்,
தொழுநோயாளிகள் இல்லம்,
பிச்சைக்காரர் மறுவாழ்வு மய்யங்கள்,
ஏழைகளுக்குக் கண்ணொளி திட்டம்,
கைம்பெண்கள் மறுவாழ்வுக்கு நிதி,
தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்குதல்,
வேளாண் தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க கணபதியா பிள்ளை ஆணையம்,
நகர்ப்புறத் தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம்,
வேளாண் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர் களுக்கே சொந்தமாக்கும் வகையில் குடியிருப்பு மனைச் சட்டம்,
கை ரிக்சாவை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்சா வழங்கும் அற்புதமான திட்டம்,
ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டமும், அவர்களுக்கான தொழிற்சாலைகள் அமைத்தது,
மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்து அந்தச் சொல்லுக்குச் சட்ட அங்கீகாரம் தந்தவர் கலைஞர்!
இந்தியாவிலேயே முதன்முதலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் கலைஞர்!
ஏழை - நடுத்தர வகுப்பு மகளிருக்கு இலவசக் கல்வி வழங்கினார்,
ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டு வந்தார்,
குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் மகளிருக்கு உதவித் திட்டம் கொண்டு வந்தார்,
மாணவர்க்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கியது கலைஞர்!
அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்கியதும் கலைஞர்!
அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்தது கலைஞர்!
உழவர் சந்தைகள் திறந்ததும் கலைஞர்!
சமத்துவபுரங்கள் உருவாக்கியதும் கலைஞர்! - இப்படி நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம்!
அந்தளவுக்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாகத் தமிழ்நாட்டு ஆட்சியை வடி வமைத்துக் கொடுத்தவர்தான் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர்!
இந்த மேடையில் இருக்கும் அனைத்துத் தோழமை இயக்கங்களுக்குமான வழிகாட்டி அவர்! அதனால்தான், அவரது புகழைப் போற்ற அனைத்து தலைவர்களும் இங்கே ஒருசேர வந்திருக்கிறார்கள்.
"திராவிட மாடல்" கருத்தியலின்
அடித்தளம்
தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் - ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற எல்லைகளைக் கடந்து உலகத் தலைவராகச் செயல்பட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஒரு கருத்தியலின் தலைவராக தலைவர் கலைஞர் இருந்தார். கடந்தகாலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டோடு நாம் ஆட்சி நடத்தி வருகிறோம் என்றால், அந்த திராவிடவியல் நிர்வாகக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவரும் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.
சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - இன உரிமை - மொழிப்பற்று - மாநில சுயாட்சி ஆகியவைகளை உள்ள டக்கிய உன்னதமான கோட்பாடுதான் திராவிடக் கோட்பாடு!
திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்றைக்கு சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்துகொண்டு இருக்கிறார்கள். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே திராவிடத்தின் உள்ளடக்கம்! எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
படிப்பு மறுக்கப்பட்ட சமூகத்துக்கு படிப்பைக் கொடு! கல்லூரிக் கல்வியை அடைய முடியாதவர்க்கு கல்லூரிக் கல்வியைக் கொடு! ஏழை, எளிய விளம்பு நிலை மக்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்து! வர்ணம், சனாதனத்தின் பேரால் ஒதுக்கப்படுபவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை களைப் பெற்றுத் தா! ஆணுக்கு நிகர் பெண்! பெண்களுக்குப் பொருளாதார விடுதலையை வழங்கு! பெருந்தொழில்களை மட்டுமல்ல, சிறுதொழில்களையும் வளர்த்தெடு! நகர்ப்புறப் பகுதிகளோடு கிராமப்புறங்களும் செழிக்க வேண்டும்! அனைத்துத் தொழில்களும் சிறக்க வேண்டும்! அனைத்து மாவட்டங்களும் வளம் பெற வேண்டும்! மாநிலத்தின் வளம் என்பது, மாநில மக்களின் சிந்தனை வளர்ச்சியால் தெரிய வேண்டும்! - இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!
கொள்கை வாரிசு
இதுதான் தமிழ்நாடு என்ற மாநிலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக வளர்க்கப் போகிறது. நாளையே இது நடந்து விடும் என்று சொல்லும் கற்பனாவாதி அல்ல நான்.ஆனால் திராவிட மாடலே அதனைச் செய்து காட்டும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான்.அந்தத் தன்னம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன் என்று சொன்னால், இந்த தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் என்னுள் விதைத்தவர்தான் நம் முடைய தலைவர் கலைஞர். நான் அவரது கொள்கை வாரிசு.
எனவே, அறிஞர் அண்ணா போட்டுத் தந்த பாதையில், கலைஞர் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களின் மூலமாக கடந்த அய்ம்பதாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த பயனை நாட்டு மக்களுக்குச் சொல்லக் கூடிய வாய்ப்பாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நான் பார்க்கிறேன்.
கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் கால் படாத இடமில்லை. சந்திக்காத மனிதர்களில்லை. தொடங்காத திட்டமில்லை. உருகாத உடன்பிறப்புகளில்லை.
இப்படி ஊர் தோறும் - நகர் தோறும் - கிராமம் தோறும் விழா எடுக்கத் தொடங்கினால் நூற்றாண்டு விழாவையே பத்து ஆண்டுகளுக்கு கொண்டாட வேண்டி வரும்.
ஆக.7இல் கலைஞர் நினைவகம் திறப்பு
அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாகத்தான், ஜூன் மற்றும் ஜூலை மாதங் களில் சென்னை - கிண்டியில் அமைக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றைத் திறந்து வைக்க இருக்கிறோம். ஆகஸ்ட் 7-ஆம் நாள் அன்று சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறப்புவிழா காண இருக்கிறது.
தமிழ்நாட்டின் திரும்பும் திசை எல்லாம் நிறுவனங் களையும், தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய தலைவர் கலைஞர் பெயரி லான சின்னங்கள் மாதம்தோறும் திறக்கப்பட இருக்கின்றன.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகம், நாட்டைக் காக்க
ஒன்று சேர வேண்டும்
இதற்கிடையேதான் ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று தீர்மானிப்பதை விட யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அமைய வேண்டும். அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் தேர்தல் சடங்கு அல்ல, 2024 நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முறையையும் இந்தியாவில் கூட்டாட்சிக் கருத்தியலையும் காப்பாற்றுவதற்காக, இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் - மாறுபாடுகளை மறந்து இந்தி யாவைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும்.
பீகார் மாநில முதலமைச்சர்
அழைப்பு
அறிவாலயத்தில் இருந்து இந்தக் கூட்டத்திற்கு நான் புறப்பட்டு காரில் வந்து கொண்டிருந்தபோது, பீகார் மாநிலத் தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வருகிற 23 ஆம் தேதி - தேதி முடிவு செய்யப் பட்டிருக்கிறது. நீங்கள் பீகார் மாநிலத்திற்கு வரவேண்டும். அகில இந்திய அளவில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர அந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இங்கே பேசிய தலைவர்கள் எல்லாம் சொன்னார்களே, தமிழ்நாட்டில் எவ்வாறு ஒரு ஜனநாயக ஆட்சி உருவாகு வதற்கு ஒரு கூட்டணி அமைத்தோமோ, அதுபோல் இந்தி யாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு, ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும் என்று இன்றல்ல, தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். என்னை வந்து சந்திக்கும் அகில இந்தியத் தலைவர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர் களிடமும் வலியுறுத்தி வருகிறேன்.
மதவாத - பாசிசவாத - எதேச்சாதிகார பா.ஜ.க.வை வீழ்த் துவதற்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் அகில இந்தியா முழுமைக்கும் ஒன்றுசேர வேண்டுமே தவிர, தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
அவதூறு பரப்பும் பாஜக
பிரிவினைகளால் பா.ஜ.க. வெல்லப் பார்க்கும். ஜாதியால், மதத்தால் பிரிவினையை விதைக்கும் அந்தக் கட்சி, அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளின் மூலமாக வெல்லப் பார்க்கும். அதற்கு அகில இந்தியத் தலைவர்கள் - மாநிலக் கட்சித் தலைவர்கள் மாநிலங்களின் முதலமைச்சர்கள் யாரும் இரையாகிவிடக் கூடாது. எத்தகைய பொய்யையும் சொல்ல பா.ஜ.க.வினர் தயங்க மாட்டார்கள்.அவதூறுகளை அள்ளி வீசவும் அதனைப் பரப்பவும் பா.ஜ.க.விடம் ஏவலுக்கு கீழ்ப் படியவும் சிந்தனையற்ற - வெறுப்புணர்ச்சியால் மழுங்கடிப் பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது.
ஆளுநரின் சித்து விளையாட்டுகள்
அதற்குத் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் அவர் செய்து கொண்டிருக்கும் சித்து விளையாட்டுகளை எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற அந்த உணர்ச்சியோடு இன்று நாங்கள் கிளம்பி இருக்கிறோம்.எதை வேண்டு மானாலும் பேசட்டும், எங்களுக்குக் கவலை இல்லை.மக்கள் நம்மோடு இருக்கிறார்கள்.
ஒற்றுமையின் மீது, சகோதரத்துவத்தின் மீது, மதச்சார்பின்மையின் மீது, உண்மையான வளர்ச்சியின் மீது, இந்த நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ள - மக்கள், நம்மோடு இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்! எனவே, நமது உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம்.
"நீ, நான் என்றால் உதடு ஒட்டாது; நாம் என்றால்தான் உதடுகள் கூட ஒட்டும்" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அடிக்கடி சொல்வார்.அவரது நூற்றாண்டு விழாக் கொண் டாட்டங்களோடு இந்திய ஜனநாயகத் திருவிழாவையும் நாம் கொண்டாடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நாட்டை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற
உறுதி எடுப்போம்
எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்ல - நாட்டிற்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் தேர்தல் என்பதை மனதில் வைத்து, இந்த விழாவில் உறுதி எடுப்போம்! சபதம் ஏற்போம்! அதுதான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மை யான மரியாதையாக இருக்கும், பெருமை சேர்க்கும் என்பதை எடுத்துச் சொல்லி, தமிழினத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க! முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் வாழ்க! நம்மை ஆளாக்கிய திராவிடப் போராளி கலைஞர் புகழ் வாழ்க! வாழ்க! என்று சொல்லி விடைபெறுகிறேன் நன்றி! வணக்கம்!
-இவ்வாறு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அமைச்சர் துரைமுருகன்
தலைமையில்...
கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திமுக பொதுச்செயலாளர் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு வரவேற்புரை ஆற்றினார்.
நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவர் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மக்களவை உறுப் பினர்கள் ஆ.இராசா, கனிமொழி கருணாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியார் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தந்தைபெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவங்களில் அலங்கார ஒளி விளக்குகள் பளிச்சிட்டன.
மைதானம் முழுவதும் கலைஞர் உருவப்படங்கள் பல்வேறு வரலாற்றுப்பதிவுகளாக நினைவுகளின் காட்சிப்பதிவாக அமைக்கப்பட்டிருந்தன.
கலைநயத்துடன் அமைக்கப்பட்ட மேடையில் தந்தை பெரியாருடன் கலைஞர், அறிஞர் அண்ணாவுடன் கலைஞர், கலைஞருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ள படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் உச்சியில் திமுக கொடி பட்டொளி வீசிப்பறந்தது. இருபால் தொண்டர்கள் திமுக கொடியை ஏந்தி உயர்த்திப்பிடிக்கின்ற உருவம் பதிக்கப்பட்ட காட்சி அனைவரையும் கவர்ந்தது.
புத்தக வெளியீடு
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய Ôஅப்பா என்று அழைக்கட்டுமா தலைவரேÕ புத்தகத்தை கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில், திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க விழாப் பொதுக் கூட்டத்தில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு விழாக்குழு சார்பில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி செங்கோலை தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.
தலைவர்கள் பங்கேற்பு
விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிப் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈசுவரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் ஆகிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று எழுச்சி உரையாற்றினார்கள்.
விழாவில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள், சென்னை மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற, நாடாளுமன்ற இந்நாள், மேனாள் உறுப்பினர்கள், பொதுமக்கள் என கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் மாநாடுபோல் பெருந்திரளாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment