எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் - நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி தூக்கி எறியப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் - நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி தூக்கி எறியப்படும்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

திருவாரூர், ஜூன்21- எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் முயற்சி ஈடேறினால், நாடாளுமன்றத் தேர் தலில் பா.ஜ.க. அகற்றப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் காட்டூரில் நேற்று (20.6.2023) நடைபெற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில், உடல்நலக்குறைவு காரணத்தால் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து விழாவில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஆங்கில வாழ்த்துரையை மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, தமிழில் மொழி பெயர்த்து வழங்கினார்.

அவ்வுரை வருமாறு:

கலைஞருக்கு என்னுடைய உளமார்ந்த நன்றி யையும், நினைவேந்தலையும் நான் செலுத்துகிறேன். இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கும் அரிய வாய்ப்பைப் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டி.ஆர்.பாலு இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்க பாட்னாவிற்கு வந்தார். 

அண்மையில் ராஜா இவ்விழாவிற்கான அழைப் பிதழைக் கொடுப்பதற்காக பாட்னா வந்திருந்தார். 

கலைஞரின் 100ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயத்தின் அடி தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். 

கலைஞர் அவர்கள் தன்னுடைய 14ஆவது வயதில் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து அதற்குப்பின் 80 ஆண்டுகள் தீவிர, முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இது இந்த நாட்டில் எந்த தேசியக் கட்சி தலைவருக்கும், மாநிலக் கட்சித் தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பேறு.

கலைஞர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ் நாட்டில் சமூக நீதிக்காகவும், சமத்துவதற்காகவும் அரும் பாடுபட்டவர், ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்காகவும். பெண்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற் காகவும், பாடுபட்டவர். ஏழைகளுக்காக உழைத்ததே அவருடைய புகழுக்குக் காரணம். 

சமூக நீதிக்கு பாடுபட்ட கலைஞர்!

அவர் மாற்றம் ஏற்படுத்திய கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் அவர் என்றென்றும் நிச்சயம் வாழ்ந்து கொண்டிருப்பார். 'சுயமரியாதை இயக்கத்தின் தலைவர்' என்ற அடிப்படையில் 1989 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, முதன்முதலாக பெண்களுக்கு குடும்பச் சொத்தில் உரிமை உண்டு என்ற சரித்திரப் புகழ் மிக்க சட்டத்தை இயற்றினார். அதோடு உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பெண்கள் பொருளாதாரத் தில் தற்சார்பு பெறும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி வரலாறு படைத்தார். தன்னு டைய இளம் வயதில் திரைத்துறையில் வசனகர்த்தாவாக இருந்த கலைஞர் அவர்கள் தமிழ் கலாச்சாரத்திற்கு ஆற்றிய பங்கு அளவிட முடியாதது. அவர் எழுதிய கதைகளும், வசனங்களும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தன. சமுதாய வளர்ச்சிக்காக அவர் முன்மொழிந்த கொள்கை களும், அவர் ஆற்றிய பணிகளும், தொண்டும் என் றென்றும் அரசியல் தலைவர்களுக்கும், பொதுவாழ்வில் மிகுந்த அக்கறையோடு ஈடுபடும் யாவருக்கும் ஒரு உந்து சக்தியாக வழிகாட்டும். 

கலைஞர் மீது மிகப் பெரிய மரியாதை! 

நான் அவரை கடைசியாகச் சந் தித்தது 2017ஆம் ஆண்டு அவரு டைய பிறந்த நாள் விழாவில்தான். தலைவர் கலைஞர் அவர்கள் மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு, 1991ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், நான் ஜனதாதளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். எப்போதெல்லாம் - தி.மு.க. விற்கு எதிராகக் குற்றச்சாட்டை முன்வைக்கும் போதெல்லாம் அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் உறுப்பினராக நான் செயல்பட்டிருக்கிறேன். 2017ஆம் ஆண்டில் அவருடைய பிறந்தநாள் விழாவிற்கு வந்த போது, தி.மு.க. சட்டமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பை இழந்திருந்த நேரம், திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெறும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வெற்றி பெறுவார் என்று பேசினேன். 2018இல் கலைஞர் அவர்கள் மறைந்த போது மரியாதை செலுத்த வந்த போது, மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சராக வரவேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டுச் சென்றேன். எனது விருப்பம் நிறைவேறி நீங்கள் (மு.க.  ஸ்டாலின்) முதலமைச்சராக பொறுப்பேற்று மாநிலத் திற்கு மிகப் பெரிய தொண்டாற்றி வருகிறீர்கள். சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்கு ஆளாவதாக பரவலாக தகவல் வெளியானது. அதற்கு ஆதாரமாக இணையதளத்திலும், சமூக வலைத் தளங்களிலும் ஒரு காட்சிப் பதிவு வலம் வந்தது. இதுதொடர்பாக சிலர் என்னை வந்து சந்தித்தார்கள். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். உடனடியாக முதலமைச்சர் தீவிரமாக விசாரித்து இது தவறான தகவல் என்றும், வெறும் வதந்தி என்றும் தெளிவுப்படுத்தினார். பீகாரில் இருந்தும் ஒரு அதிகாரிகள் குழு தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு நடத்தி "பீகார் மாநிலத் தொழிலாளர்கள் யாரும் தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை” என்று உறுதிப்படுத்தினர். அந்தத் தொழிலாளர்களுக்கு பாது காப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் எப்போதும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உறுதியளித்தது. பீகார் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாங்கள் அறிகிறோம். குறிப்பாக பீகார் மக்கள் தமிழ்நாட்டில் அன்புடன், நேசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். 

பா.ஜ.க. அகற்றப்படும்! 

இந்த விழாவில் பங்கேற்றதற்கு நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். ஜூன் 23 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள் ளும் ஒரு முக்கியமான கூட்டம் நடைபெற உள்ளது. அதில் உங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார். எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த ஒற்றுமை நாங்கள் எண்ணுவதுபோல் ஈடேறினால், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் வரும் நாடா ளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்படும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, 2017இல் கலைஞரின் பிறந்தநாளுக்கு என்னை அழைக்க வந்த கனிமொழி, ராஜா ஆகியோர் அனைவருக்கும், தயாளு அம்மாள் அறக்கட்டளையில் உள்ள அனைவருக்கும், என்னை அழைத்தவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உள்ள திரா விட முன்னேற்றக் கழகம் வலிமை பெறும், உறுதி பெறும், கலைஞரின் கொள்கையை தொடந்து கொண்டு சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். 

-இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.


No comments:

Post a Comment