கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று நடந்த, ஒடிசா இரயில் விபத்தில் சுமார் 289 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவம் குறித்து சிபிஅய் தனது விசாரணையைத் தொடங்கியது. மின்னணு தொழில் நுட்பக் கோளாறு என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
"கடுமையான வெயிலில் நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத சிக்னல் கருவிகளில் பழுது ஏற்பட்டு இவ்வாறு ஏற்படவாய்ப்பு உள்ளது" என்றும், இது தொடர்பாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல் இதில் தீவிரவாத தாக்குதலோ அல்லது வேறு எந்த ஒரு வகையான தாக்குதலோ இல்லை என்பதை புலன்விசாரணை அமைப்புகள் உறுதி செய்துள்ளன. இந்த நிலையில் துவக்கம் முதலே, 2017ஆம் ஆண்டு ரயில்வே பொறியாளர் ஒருவர் தன்னுடைய முகநூலில் வெளியிட்ட ஒரு படத்தை வைத்து, இவர் தான் விபத்திற்குக் காரணமானவர் என ஹிந்து அமைப்புகள் சமூகவலைதளங்களில் பரப்பின.
இதற்கு இரயில்வே நிர்வாகமும் மறுப்பு தெரிவித்து, "தற்போது அவர் இந்த கோட்டத்திலேயே வேலை செய்யவில்லை அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பே பதவி உயர்வு பெற்று வேறிடத்திற்குச் சென்று விட்டார்" என்று விளக்கம் கூறிவந்தது. இந்த நிலையில் மீண்டும் அதே பொறியாளர் படத்தை எடுத்து "விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்ட தீவிரவாதி - அதிகாரி உருவத்தில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தீவிரவாதி" என்று சமூகவலைதளங்களில் செய்திகளை மீண்டும் பரப்பினார்கள். இம்முறை இந்த செய்தியை முன்னணி செய்தி தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பு செய்தன.
ஒடிசா இரயில் விபத்து தொடர்பான வழக்கில் தொடர்புடைய சோரா பிரிவு ரயில்வே சிக்னல் இளநிலை பொறியாளர் அமிர்கான் என்பவரை இரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஅய் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்த போது அவர் வரவில்லை. இந்த நிலையில் "விசாரணை செய்ய சிபிஅய் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார்; அவரது தொலைப்பேசிக்கு பாகிஸ்தானில் இருந்து அழைப்பு வந்தது" என்றெல்லாம் செய்திகளை எந்த ஒரு சான்றும் இல்லாமல் தொடர்ந்து ஊடகங்கள் ஒளிபரப்ப ஆரம்பித்தன. முன்னணி செய்தி நிறுவனங்களில் இந்த செய்தி ஒளிபரப்பானதால் நாடு முழுவதும் மீண்டும் ஒடிசா இரயில் விபத்து தொடர்பான செய்திகள் முன்னிலை பெற்றன. இதனால் இஸ்லாமியர்கள் சில பகுதிகளில் தாக்கப்படும் சூழலும் உரு வானது. இது தொடர்பாக இரயில்வே நிர்வாகம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுபற்றி இரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஒடிசா பாலசோரில் ஏற்பட்ட இரயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவு என ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை" என்று தென்கிழக்கு இரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது; "சிபிஅய் விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்" என்றும் கூறியுள்ளது. "இது தொடர்பாக இரயில்வே துறையில் உள்ள எந்த ஒரு நபரின் பெயரில் வரும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பரவிய வதந்தியின் காரணமாக மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகரில் இஸ்லாமிய இரயில்வே ஊழியர்கள் ஹிந்து அமைப்பினரால் அவமானப் படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் முன்னணி செய்தித் தொலைக் காட்சிகளே வதந்திகளை முன்னின்று பரப்பி வருவதால் நாடு முழுவதும் இஸ்லாமிய இரயில்வே ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இரயில்வே தரப்பில் விளக்கம் கொடுத்தாலும் "உண்மை வீட்டை விட்டு வெளியே கிளம்பும் முன்பே போலிச்செய்திகள் உலகம் சுற்றிவரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப வதந்திகளை வைத்து இஸ்லாமியர்களைத் தாக்க திட்டமிட்டு ஊடகங்களும் செயல்பட்டு வருகின்றன என்று இரயில்வே ஊழியர் அமைப்புகள் கருத்துகள் தெரிவிக்கின்றன.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இயங்கும் இரயில்வே துறையில், ஒடிசாவில் மிகப் பெரிய விபத்து நடந்த நிலையில், அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய ஒன்றிய அரசின் கட்சியைச் சேர்ந்தவர்கள் திசை திருப்பும் வகையில், எதிலும் மதவாதம் என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு வன்முறை வக்கிரகங்களில் ஈடுபடுவது - வெட்கக் கேடானது.
விபத்துக்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய இரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் பன்னூறு பேர்கள் இரயில் விபத்துக் காரணமாக பரிதாபகரமான முறையில் மரணித்த நிலையில், விபத்து நடந்த இடத்திற்குச் சென்று மக்களைப் பார்த்த "பாரத மாதாகி ஜெய்!" என்று முழக்கமிட்ட கேவலத்தை என்ன சொல்ல!
எவ்வளவு விரைவில் ஒன்றிய பிஜேபி அரசை வீட்டுக்கு அனுப்ப முடியுமோ, அந்த அளவுக்கு நாட்டுக்கு நல்லது - நல்லது - நினைவில் நிறுத்துங்கள்.
No comments:
Post a Comment