தந்தை பெரியார் முன்னிலையில் சிறுவன் கி. வீரமணியின் முதல் முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

தந்தை பெரியார் முன்னிலையில் சிறுவன் கி. வீரமணியின் முதல் முழக்கம்

அண்ணாவின் பாராட்டு!

1943 ஜூன் 27 இல் அறிஞர் அண்ணா முன்னிலை யில் கடலூர் செட்டிக்கோவில் தெருவில் முதல் முறையாக மேடையேறினார் சிறுவன் வீரமணி. அதற்கு ஓர் ஆண்டு கழித்து, 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி..... 

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில்  தென்னார்க்காடு மாவட்டத் திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.  இளவயதிலேயே கி.வீரமணியைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த அவருடைய ஆசிரியர் திரு. ஆ.திராவிடமணி பி.ஏ.,அவர்கள் பெரு முயற்சியால் தான் அம்மாநாடு கூட்டப்பட்டது. மாநாட் டிற்கு விருதுநகர் திரு.வி.வி.இராமசாமி அவர்கள் தலைவர். மாநாட்டுத் திறப்பாளர் அய்யா பெரியார். திராவிட நாட்டுப் படத்திறப்பாளர் தளபதி அறிஞர் அண்ணா. முதல் நாள் இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத் திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய, ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம், எப்போது விடியும் என்ற ஆவல் கி.வீரமணியின் உறக்கத்தினை ஓடோடச் செய்தது. பொழுது விடிந்ததும் திரு.ஏ.பி.ஜனார்த்தனம் எம்,ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க கி.வீரமணியை அழைத்துப்போனார். அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினார்கள். கி.வீரமணிக்கு ஆசை ஒரு பக்கம். அவரை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம். அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். “இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணி தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான்” என்று அய்யா வுக்கு அறிமுகப்படுத்தினார்.  தோழர் ஏ.பி.ஜனார்த்தனன். கி.வீரமணி அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமை யாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டார். 

மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். இம் மாநாட்டில் சிறுவன் கி.வீரமணியும் உரையாற்றி னார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும், கண்டனங் களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்றும் அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசிய முறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்து பேசிய அண்ணா அவர்கள் கி. வீரமணி யின் பேச்சை வைத்தே துவக்கினார்.

“இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப் பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான் என்று தெரிகிறது” என்று அறிஞர் அண்ணா அவர்கள் கி.வீரமணியைப் பற்றி குறிப்பிட்டார்கள்.

No comments:

Post a Comment