கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்! [1]
(Presence of mind and quick actione)
நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள் ஒரு பல்கலை வித்தகர்; ஆளுமைத் திறனை அற்புதமாகக் கையாண்ட மகத்தான லட்சியவாதி!
கடும் உழைப்பின் உருவமாகவே அவர் இறுதிவரை திகழ்ந்தவர்; "ஈரோட்டுக் குருகுலம்தான் என்னை பல துறைகளில் பழக்கி விட்டதோடு தந்தை பெரியாரும், அண்ணாவும் என்னை செதுக்கியவர்கள்" என்று எப்போதும் பெருமிதத்துடன் கூறத் தயங்காத நன்றி உணர்ச்சியின் நாயகராகவே இறுதி வரை வாழ்ந்து மறைந்தும் மறையாதவராக இன்றும் நாளையும் நம்முடன் வாழுபவர்!
அவரது பல தனித்திறமைகளில் ஒன்று, சமயோஜித சிந்தனையும் செயல்பாடுமே!
நான் எழுதி இதுவரை 28 பதிப்புகள் வெளியாகி (பல லட்சம் பிரதிகள்) வெளிநாடுகள் உள்பட பன்னாட் டுக்கும் பரவிய 'கீதையின் மறுபக்கம்' என்ற நூல் பரபரப்புடன் விற்பனை யாகிக் கொண்டிருந்த நேரம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நான் முதல் பதிப்பு நூலையும் தவறாது அனுப்பினேன். எதையும் ஆர்வத் துடன் படித்து முடிக்கும் அரிய பழக் கத்தைக் கொண்டவர் அவர் -
சில ஆண்டுகளுக்குப்பின் 'கீதையின் மறுபக்கத்தை'ப் பற்றிய பேச்சு பரவலானது.
இந்நிலையில் கலைஞரின் வீடு உள்ள கோபாலபுரத்தில் ஓர் நாள் மாலையில் ஒரு பெருங்கூட்டம் பரபரப்புடன் கூடியிருந்ததைக் காண முடிந்தது. இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் அவர்கள் கோபாலபுரம் வந்து கலைஞர் வீட்டுக்குச் சென்று அவருக்கொரு புத்தகம் அளிக்கப் போகிறேன் என்று கூடிய கூட்டத்தினரிடையே கூறினார்!
ஏதோ கலவரம் வெடிக்குமோ என்று பல தி.மு.க.வினரும் கூடி விட்டனர்.
அன்று மாலை காரில் வந்து இறங்கினார் கலைஞர். கூட்டம் கூடியதை அவர் எதிர் பார்க்கவில்லை. என்னவென்று விசாரித்துத் தகவல் தெரிந்து கொண்டு "'நண்பர்' இராம. கோபாலன் வந்தால் உள்ளே அழைத்து வாருங்கள். நீங்கள் அமைதியாக இருங்கள்" என்று கூறி மாடிக்குப் போய், இராம. கோபாலனை மேலே வர அழைத்தார்.
கனிவுடன் விசாரித்து அமர வைத்தார். உடனே அவர் தந்த 'பகவத் கீதை' நூலை வாங்கிக் கொண்டு நன்றி சொன்னார்; "நான் ஏற்கெனவே இந்த நூலை படித்திருக்கிறேன்; நீங்கள் கொடுத்த இதையும் நிச்சயம் படித்து முடிப்பேன்" என்று சிரித்துக் கொண்டே கூறியபின், தனது டிராயரைத் திறந்து - "இந்த நூலை நான் உங்களுக்கு அன்புடன் தருகிறேன்.
இது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ஆராய்ச்சி நூல். அதை நான் கொடுக் கிறேன். நீங்களும் படித்து அவர் என்ன 'தவறான கருத்துக்களை' எழுதியுள்ளார் என்று கூட விளக்கி எழுதுங்கள் அல்லது மேடையில் பேசுங்கள்" என்றார்!
அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை - அவர் முகம் மாறித்தான் இருக்கிறது. அதை வாங்கிக் கொண்டு அவர் விடை பெற்றுக் கொண்டு திரும்பினார்.
எந்த ஒரு சிறு அசம்பாவிதமோ, சலசலப்போ நடைபெறவில்லை. அதற்குள் செய்தியாளர்கள் குழுமி விட்டனர்.
மாலையில் வீட்டிலிருந்து வெளி யூருக்குப் பயணமாக ரயில் நிலையத் துக்குப் புறப்பட ஆயத்தமான எனக்கு திடீரென கலைஞரிடமிருந்து தொலைப் பேசி அழைப்பு!
இன்ப அதிர்ச்சி அது!! "ஆசிரியர், ஒரு நிகழ்ச்சி; சற்றுமுன் என் வீட்டிற்கு இராம. கோபாலன் வந்தார்" என்று நடந்ததை என்னிடம் விவரித்து, "உங்களின் 'கீதையின் மறுபக்கம்' புத்தகத்தையே அவரிடம் கொடுத்து தவறுகள் இருந்தால் எழுதச் சொன்னேன்" என்று சொல்லி சிரித்தார்; நான் அடைந்த மகிழ்ச்சிக்கோ அளவே இல்லை.
அவ்வளவு நயத்தக்க நாகரிகம், நாசூக்கான பதிலடி, அதுவும் சமயோசிதமான விரைந்த செயல்பாடு!
இது தான் கலைஞரின் தனித் திறமை - வியக்கத்தக்க வினையாற்றும் அருஞ்செயல்!
அந்தப் படமே அடுத்த பதிப்பின் இறுதி அட்டைப் படமாகவே இன்று 28ஆவது பதிப்பு அமைந்து விட்டது. ('முரசொலி', 'விடுதலை' ஏடுகளில் வந்து கொண்டுள்ளது!)
(தொடரும்)
No comments:
Post a Comment