உ.பி.யில் நடப்பது ஆட்சியல்ல - அராஜகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

உ.பி.யில் நடப்பது ஆட்சியல்ல - அராஜகம்!

“உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் படுகொலைகள் கவலை தரவில்லையா?” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மேனாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக காவலர்களால் அழைத்து வரப்பட்ட ரவுடி சஞ்சீவ் ஜீவா, நீதிமன்றத்திற்கு வெளியே 8.6.2023 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "இதுதான் ஜனநாயகமா? ஒருவர் யாரால் கொல்லப் பட்டார் என்பது அல்ல முக்கிய கேள்வி. ஒருவர் கொல்லப்படுகிறார் என்றால்  - பாதுகாப்பு இருக்கிறதா, சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்பதுதான் முக்கிய கேள்வி" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மேனாள் ஒன்றிய அமைச்சர் கபில்சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரப் பிரதேசத்தில் 2017 முதல் 2022 வரை காவல்துறை விசாரணையில் இருந்த 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது காவல் துறை விசாரணையில் இருந்த ஜீவா, லக்னோ நீதிமன்றத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதற்கு முன் அடிக் அகமது, அஷ்ரப் ஆகியோரும் காவலர் பாதுகாப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். துல்லு தேஜ் புரியா என்பவர் திகார் சிறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமித்ஷா ஜி, இது குறித்து உங்களுக்கு கவலை இல்லையா? நாங்கள் இருக்கிறோம்!" என தெரிவித் துள்ளார்.

சஞ்சீவ் ஜீவாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். 24 வயதாகும் அவரது பெயர் விஜய் யாதவ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்குரைஞரைப் போல் உடை உடுத்திக் கொண்டு அவர் துப்பாக்கிச் சூடு நடத்திய தாகவும், 6 குண்டுகளை அவர் ஜீவா மீது சுட்டதாகவும் நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் ஜீவா, வழக்கு விசா ரணைக்காக  லக்னோ சிவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. காவல் துறை விசாரணையின் கீழ் இருந்த அதிக் அகமதுவும், அஷ்ரப்பும் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டபோது செய்தியாளர்கள் போல் வந்த 3 பேர், இருவரையும் சுட்டுக்கொன்றனர். இந்த கொடிய கொலை நடந்து 2 மாதத்துக்குள் தற்போது மேலும் அதே போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் ஆட் சியில் மனிதர்களைவிட மாடுகள்தான் முக்கியம் - முதன்மையானது. 

காவல்துறையினரோடு, அவர்கள் பயணிக்கும் வாகனத்தில் ஆர்.எஸ்.எஸ். - காவி உடைக்காரர்களும் பயணிப்பார்கள் என்றால், அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.காரர்கள் வன்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளியில் வந்தால் மேளதாளத்தோடு,  மாலை போட்டு வரவேற்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் அங்கு சர்வ சாதாரணம்.

உ.பி., குஜராத் என்பதெல்லாம் ஆர்.எஸ்.எஸின் பரிசோதனைக் கூடம்.

2024 தேர்தல் நேரத்தில் அயோத்தியில் ராமன் கோயில் திறப்பு விழாவைக் கோலாகலமாக நடத்தி வாக்குகளை அறுவடை செய்வதுதான் அவர்களின் மகத்தான திட்டம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - மாயாவதியும், அகிலேஷ்யாதவும் சிந்திப்பார்களாக!

No comments:

Post a Comment