சென்னை ஜூன் 25 கணவனிடமிருந்து பிரிந்திருந்தாலும் பெண்ணுக்கும் - ஆணுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இணையருக்கு 1965 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். ஒன்றிய அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றிய கணவர், பின்னர் வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டார். அங்கு சம்பாதித்த பணத்தை எல்லாம் தன் மனைவிக்கு அனுப்பி வைத்தார். அவர், பல சொத்துகளை தன் பெயரில் வாங்கினார். அதுமட்டுமல்லாமல், ரொக்கமாக பெரும் தொகையையும், ஏராளமான தங்க நகைகளையும் வைத்திருந்தார்.
கணவர் வெளிநாட்டில் இருந்ததால், உள்ளூரில் மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பின் உச்சக்கட்டமாக தன் சொத்துகளை விற்பனை செய்யும் முகவராக அவரை அந்தப் பெண்மணி நியமித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் நாடு திரும்பி, மனைவி பெயரில் உள்ள சொத்துகள் எல்லாம் தன்னுடையது. தன்னுடைய உழைப்பில் வாங்கப்பட்டது. தன்னுடைய மனைவிக்கு சொத்தின் மீது எந்த உரிமையும் கிடையாது என்று சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சார்பு நீதிமன்றமும், மனைவிக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. இந்த சொத்துகள் எல்லாம் கணவரின் சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டது என்பதால், சொத்துகள் எல்லாம் கணவருக்கே சொந்தம் என்று தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சிதம்பரத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கீழமைநீதிமன்றம், சார்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி அமைத்தது. சில சொத்துகள் மனைவிக்குச் சொந்தம் என்று தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து கணவரும், மகன்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.
அப்போது, ‘‘தன் பெற்றோர் கொடுத்த தங்க நகைகளை விற்பனை செய்துதான் என் கணவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பினேன். என் வரதட்சணை நிலத்தை விற்பனை செய்து சில சொத்துகளை வாங்கினேன். தையலகத் தொழில் மூலமும் சம்பாதித்தேன்'' என்று மனைவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்குக் கணவர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
திருமணத்துக்குப் பின் வீட்டையும், குழந்தைகளையும் மனைவி பார்த்துக் கொள்கிறாள். இதனால்தான் கணவரால் தன் தொழிலைத் திறம்பட செய்ய முடிகிறது. அதன்மூலம் கிடைக்கும் செல்வம் மீது கணவர், மனைவி இருவருக்கும் சமபங்கு உண்டு. குடும்பத்தையும், குழந்தைகளையும், குடும்ப மருத்துவர் போல 24 மணி நேரமும் விடுமுறை இல்லாமல் மனைவி பார்த்துக் கொள்கிறார். அதனால் மனைவியின் பணியுடன், கணவர் பார்க்கும் 8 மணி நேர வேலையை ஒப்பிட முடியாது. திருமணத்துக்குப் பின் கணவர், குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, கூலி பெறாத வேலையாளாக மனைவி பணியாற்றுகிறாள். அப்படிப்பட்டவருக்கு இறுதியில் எதுவும் இல்லை என்றால், அது தேவையில்லாத வேதனையை அவருக்கு கொடுக்கிறது. கணவனும், மனைவியும் வாகனத்தில் உள்ள இரு சக்கரங்கள் போன்றவர்கள். கணவன் சம்பாதிப்பதும், குடும்பத்துக்காக மனைவி உழைப்பதும் சரிசமமானது. அது ஒரு கூட்டு உழைப்பு. இதன்மூலம் கிடைக்கும் பலன்களை பெறும் பயனாளிகளாக இருவரும் உள்ளனர். சொத்துகள் கணவன் அல்லது மனைவி என்று யார் பெயரில் வாங்கினாலும், அது இரண்டு பேரும் பணத்தைச் சேமிக்க எடுத்த கூட்டு முயற்சியால்தான் வாங்கப்பட்டுள்ளது.
குடும்பத்தைக் கவனித்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனைவிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. அதேநேரம், மனைவியின் பங்களிப்பை இந்த நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு தடையாக எந்த சட்டமும் இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் மொத்தம் 5 சொத்துகள் உள்ளன. அதில், 3 சொத்துகளில் கணவன், மனைவி ஆகியோருக்கு சமபங்கு உண்டு. மீதமுள்ள 2 சொத்துகளுக்கு மனைவியே முழு உரிமையாளர் ஆவார்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment