கோயில் விழாக்களில் ஆபாச ஆடல் - பாடல்களா? உயர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

கோயில் விழாக்களில் ஆபாச ஆடல் - பாடல்களா? உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 21-  கோயில்களில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் இடம்பெற்றால் விழா ஏற்பட்டாளர்கள் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித் தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தைச் சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'அரசகுளத்தில் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. 

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் விழாவில் தனிநபர் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது. அனைவருக்கும் பொதுவான கோயிலாக கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. ஆனால் தற்போது சிலர் கோயில் எங்களுக்கு சொந்தமானது, தங்களுக்கு மட்டும் தான் முதல் மரியாதை என பிரச்சினை செய்து வருகின்றனர். 

கடந்த மாதம் நடைபெற்ற பங்குனி உற்சவ விழாவில் ஆடல் - பாடல் நிகழ்ச்சி நடத்த நீதிமன் றத்தில் அனுமதி பெற்றனர். நீதிமன்றம் ஆபாச நடனம் இருக்கக் கூடாது என்பது போல் பல்வேறு நிபந்தனை களுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால் ஏப்.1இல் நடைபெற்ற ஆடல் - பாடலில் ஆபாச நடனங்கள் இடம் பெற்றிருந்தது. இரட்டை அர்த்த பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் விதித்த அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டன. எனவே விழா ஏற்பட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டி ருந்தது.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கணபதி சுப்ரமணியன், ஆடல் - பாடலில் பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடியதற்கான காட்சிப் பதிவை நீதிபதிகளிடம் வழங்கினார். அந்த காட்சிப் பதிவை பார்த்த நீதிபதி கடும் அதிருப்தி அடைந்து ‘கோயில் விழாவில் இவ்வளவு ஆபாசமாக நடனம் ஆட அனுமதித்தது எப்படி? இவ்வளவு ஆபாசமாக நடனம் ஆடும்போது காவல் துறையினர் என்ன செய்தார்கள்?’ என கேள்வி எழுப் பினார். 

அரசு தரப்பில் விழா ஏற்பட்டாளர்கள் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறி, முதல் தகவல் அறிக்கை நகலை தாக்கல் செய்தனர். அதை பார்த்ததும் நீதிபதி மேலும் கோபம் அடைந்தார். தொடர்ந்து நீதிபதிகள், விழா ஏற்பட்டாளர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘இதை ஏற்க முடியாது. பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23-க்கு ஒத்தி வைத்தார்.


No comments:

Post a Comment