வன்முறை தலை விரித்து ஆடும் மணிப்பூர் பற்றி பிரதமர் வாய் திறக்காதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

வன்முறை தலை விரித்து ஆடும் மணிப்பூர் பற்றி பிரதமர் வாய் திறக்காதது ஏன்?

அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேட்டி

புதுடில்லி, ஜூன் 25  மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து தென்கோடியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அக்கறையும் ஆதங்கமும் ஏன் பிரதமர் மோடிக்கு எழவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். 

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக உருவெடுத்து 50 நாட்களை கடந்துவிட்டது. நூற்றுக்கும் அதிகமானோர் இந்தக் கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னும் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓய்ந்ந்தபாடில்லை. மணிப்பூரைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கு அகதிகளாக சென்று விட்ட நிலையில், பலர் காடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். 47 ஆயிரம் பேர் இருப்பிடத்தை இழந்து, மணிப்பூருக்கு உள்ளேயே அரசு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அரசின் பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்து, மணிப்பூர் கலவரம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க நேற்று (24.6.2023) உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்ப்பில் மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அனைத்து கட்சியினரும் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவடைந்ததும் திமுக எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய திருச்சி சிவா, "மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினோம். மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு உள்ளது. 

ஆனால், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் மோடி இதுவரை கருத்து தெரிவிக்காதது கவலை அளிக்கிறது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து தென்கோடியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அக்கறையும் ஆதங்கமும் ஏன் பிரதமர் மோடிக்கு எழவில்லை? அமைதியை நிலைநாட்ட எடுத்த நடவடிக்கை பலனிக்காதது பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது. அனைத்து கட்சி பிரதிநிதிகளை மணிப்பூர் அனுப்பி மக்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment