ஜாதி -தீண்டாமை ஒழிப்பு என்பது வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல - காவல்துறையில் தனிப் பிரிவை உண்டாக்கி வருமுன் தடுத்திடுக!
கோவில் திருவிழா என்ற பெயரிலும் மற்றும் பல இடங்களில் எடுத்துக்காட்டாக வேங்கைவயல், விழுப்புரம் மேல்பாதி போன்ற இடங்களில் ஜாதிக் கலவரங்களை உண்டாக்கும் அரசியல் சூழ்ச்சிப் பிரச்சினையை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதாமல், காவல்துறையிலேயே தனிப் பிரிவை ஏற்படுத்தி, தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு ஜாதி ஒழிப்புக்கும், தீண்டாமை அழிப்புக்கும் முன்னோடி யான சமத்துவப் போராட்டம் தொடரும் மண்.
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டுள்ளது!
‘திராவிட மாடல்' ஆட்சி, முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்று, அமைதிப் புரட்சியாக நூற்றாண்டு நாயகர் மானமிகு கலைஞர் அவர்களால் தமிழ்நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு, இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டுள்ளது!
1969 இல் ஒன்றிய அரசால் - லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட, நண்பர் இளையபெருமாள் எம்.பி., அவர் களின் தலைமையில் ‘‘தீண்டாமை ஒழிப்பு அனைத்திந்திய கமிட்டி‘‘யின் பரிந்துரைகள் கவனிக்கப்படாமல் நீண்ட கிடப்பில் போடப்பட்டது.
அதன் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றான அனைத்து ஜாதியினரும் கோவிலில் அர்ச்சகராக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையை செயல் வடிவத்திற்குக் கொண்டு வந்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர். அதற்கான சட்டத்தையும் நிறைவேற்றினார்.
தந்தை பெரியார் தமது 95 ஆம் வயதிலும்
தொடர்ந்து களமாடியதன் விளைவே!
அதற்கு முக்கிய மூலகாரணம் - ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு - உயர்ஜாதி பார்ப்பனர் மட்டுமே ஏகபோகமாக கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சகராகிடும் பாரம்பரிய (ஜாதிக்கு மற்றொரு புனைவு) அர்ச்சகர் முறையை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை தந்தை பெரியார் தமது 95 ஆம் வயதிலும் தொடர்ந்து களமாடியதன் விளைவே அச்சட்டம்.
பார்ப்பன ஆதிக்கப் பிடி தளருவதைக் கண்டு அதை எப்படியும் காப்பாற்றிட, நீதிமன்றத்தால் சட்டத்தில் ஏற்கெனவே திட்டமிட்டு புகுத்திய சில சட்டப் பிரிவுகள்மூலம் இன்னமும் முழுவீச்சில் புதிய சட்டத்தை செயல்படாமல் தடுத்து வருகின்ற பார்ப்பன ஆதிக்க சக்திகள் - சட்டப் போராட்டமாக அச்சமூகப் போராட்டம் இன்னும் நடந்துகொண்டு வரு கிறது; இந்தத் தி.மு.க. ஆட்சியில் அதை செயல்படுத்திய பின்பும்கூட!
இந்த நிலையில், தீண்டாமைக்கு மீண்டும் புத்துயிர் தரும் வகையில் சில மாவட்டங்களில், குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிட சகோதரர்கள் வாழும் பகுதியில் உள்ள தண்ணீர்த் தொட்டியை அசிங்கப்படுத்தி, அந்த விசாரணை அதிசயமாக இன்னமும் நீடித்து வரும் அவலம் ஒருபுறம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக தீவிரமாக
மாறிவிடக் கூடாது என்பதற்காக கோவிலுக்கு ‘சீல்!'
மறுபுறம் விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில், அது குலசாமி என்ற சாக்கினைக் கூறி, அங்கே கும்பிடச் சென்ற ஆதிதிராவிட சமூகத்தினரை, உயர்ஜாதி என்று தங்களை எண்ணிக்கொண்ட சிலர், அவர்களைத் தடுத்ததால், தகராறு ஏற்பட்டது. அது எங்கே ஜாதிக் கலவரமாக மாறி, பொது அமைதிக்கு ஊறுவிளைவித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக தீவிரமாக மாறிவிடுமோ என்று கருதிய இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அக்கோவிலை ‘சீல்' வைத்து மூடிவிட்டனர் அதிகாரிகள்!
இது ஒரு தற்காலிகத் தீர்வாக மட்டும்தான் அமைய முடியுமே தவிர, உடனடியாக குற்றவாளிகளை ஜாதி பார்க்காமல், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்படி கைது நடவடிக்கைகளை செய்தல் அவசியம்!
இன்னொரு கோணத்திலும் இப்பிரச்சினையை ஆராயவேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கும், சமூக ஆர்வலர்களான ஜாதி தீண்டாமை ஒழிப்புப் போராளிகளான நாமும் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவும் அணுகவேண்டியது அவசியம் என்பது நமது உறுதியான கருத்தாகும்!
நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர்
ரவிக்குமார் அவர்கள் எடுத்த முயற்சி!
இப்பிரச்சினையை ஜாதிக் கலவரமாகவோ, ஜாதி மோதலை ஏற்படுத்த சமூக, பொது அமைதிக் குலைத்தலுக்கோ இடந்தராத வகையில் 11 கட்சியினர், பொதுமக்களைக் கொண்டு அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிக்குமார் அவர்கள் எடுத்த முயற்சியையொட்டி, ஒத்துழைப்பு கிடைத்திட - பா.ஜ.க.வினர் மட்டும் ஏன் கையெழுத்திட மறுத்து, ஒத்துழையாமையைக் காட்டியுள்ளனர்.
ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை, தமிழ்நாடு ஆட்சிக்கு எதிராக, தாம் ஆளுநராக இருப்பதை மறந்து, ஆர்.எஸ்.எஸ்.காரர்போல், தமிழ்நாடு தி.மு.க. அரசுமீது குற்றப்பத்திரிகை வாசித்து வருவதையும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.
ஜாதி மோதல்கள் குறிப்பாக கோவில் திருவிழா - ‘‘பக்தி மயக்க பிஸ்கெட்டுகள்'' வெகுவாகப் பயன்படக்கூடும் என்று ஆங்காங்கு இப்படி கோவில் திருவிழாக்கள் - வழிபாட்டு வாய்ப்புகளையொட்டி மறைமுகமாக திட்டமிட்டே கலவரங்கள் ஆங்காங்கே விதைக்கப்படுகின்றனவோ என்ற அய்யமும் தவிர்க்கப்பட முடியாதவை!
சட்டம் வேடிக்கை பார்க்கக் கூடாது!
எது எப்படியோ, சட்டம் வேடிக்கை பார்க்கக் கூடாது; தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் பற்களின் கூர்மையை மழுங்க விடாது தமிழ்நாடு அரசு என்ற நம்பிக்கை நமக்கு உண்டு!
தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் இந்த சிறுபொறியை பெரு நெருப்பாக்கும் முன்பே அறநிலையத் துறையும் உடனடியாக கவனமுடன் செயல்பட்டு தடுக்கவேண்டும்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் காலமேகப் பெருமாள் கோவில் திருவிழாவில், குடித்துவிட்டுப் பக்தர்கள் சிலர், ஆதிதிராவிட இளைஞர் ஒருவரை தாக்கியதும், பிறகு இரு நபர் தகராறு ஜாதிக் கலவரமாக வெடிக்கும் அபாயச் சூழ்ச்சி உருவாகாமல் உடனடியாகத் தடுக்கப்படவேண்டாமா?
காவல்துறையில்
தனிப் பிரிவு அவசியம்! அவசரம்!
மேலும் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினை என்பதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்ற கண்ணோட்டத்தில் மாத்திரம் அணுகாமல், ‘‘நோய்முதல் நாடவேண்டும்.'' சமூகப் பிரச்சினையாக அரசு பார்த்து, ஜாதி ஒழிப்புக்கான தீவிரப் பிரச்சார அமைப்புகளின் ஒத்துழைப்பை நாடி, அவர்களது முயற்சிகளைப் பாராட்டி, ஆண்டுதோறும் சில புதிய திட்டங்களை கலைஞர் நூற்றாண்டில் தொடங்குவது சாலச் சிறந்தது! காவல்துறையில் தனிப் பிரிவு அவசியம்! அவசரம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.6.2023
No comments:
Post a Comment