பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
சென்னை, ஜூன் 29 ''திமுகவுக்கு வாக்களித்தால் கலை ஞரின் குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் பேசி இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தால் பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கலைஞரின் குடும்பம் என்பது இந்த தமிழ்நாடு, தமிழர்கள் தான்'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத் துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (29.6.2023) நடைபெற்ற கும் மிடிப்பூண்டி வேணுவின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது:
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர்
''இந்த நாட்டின் பிரதமராக இருக்கக்கூடியவர் என்ன சொல்கிறார் என்றால், தி.மு.க.வுக்கு வாக்களித்தால் கலைஞரின் குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பேசி இருக்கிறார். கலைஞரின் குடும்பம் என்பது இந்தத் தமிழ்நாடு, தமிழர்கள் தான். 50 ஆண்டு காலமாக தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த 50 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந் திருக்கக் கூடிய அந்த நிலைகளை எல்லாம் பார்த்துவிட்டு பிரதமர் பேச வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக் கியவர் யார் என்றால் கலைஞர் தான்.
குடும்பம் குடும்பம் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ஓராண்டு 'மிசா'வில் அடைக்கப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில், சிறையில் இருக்கக்கூடிய தோழர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று அந்தக் குடும்பங்களைச் சார்ந்து இருக்கின்ற உறவினர்கள், பெற்றோர், பிள்ளைகள் முறையாக அனுமதி பெற்று சந்திப்பது வழக்கம். ஆனால், சென்னை சிறைச்சாலையில் இரண்டு மாத காலம் அதற்கு அனுமதி தரப்படவில்லை. நியாயமாக - சட்டப்படி அனுமதி தந்தாக வேண்டும். ஆனால், அனுமதி தரவில்லை. இதற்காக கலைஞர் அறிக்கை விட்டார். "அனுமதி தரவில்லை என்று சொன்னால் சிறை வாசலில் சிறையில் இருக்கக்கூடிய அத்தனை பேரது குடும்பத்தினரோடு பட்டினிப் போராட்டம் என்னுடைய தலைமையில் நடைபெறும்'' என்று கலைஞர் அந்த அறிக்கையில் அறிவித்தார்.
சிறையில் உள்ள அத்தனை பேரையும் மகனாக கருதியவர் தலைவர் கலைஞர்
அதன் பிறகு அச்சம் ஏற்பட்ட சிறை அதிகாரிகள், அனுமதி தருகிறார்கள். அனுமதி தந்தவுடன் முதலில் யாருக்கு என்றால் எனக்குத் தான் கிடைத்தது. கலைஞர் போய் பார்க்கணும். ஆனால், கலைஞர் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ''சிறையில் இருக்கிற அத்தனைப் பேரையும் பார்த்த பிறகுதான் என் மகன் ஸ்டாலினை நான் பார்க்க வருவேன்'' என்று சொன்னவர் கலைஞர். சிறையில் உள்ள அத்தனை பேரையும் மகனாகக் கருதி யவர் தலைவர் கலைஞர். ஆகவே, குடும்ப அரசியல் என்பதை பொருத்தமாகத்தான் பிரதமர் சொல்லி இருக்கிறார்.
அவருக்கு இப்போது ஓர் அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 23 ஆம் தேதி பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் பாட்னாவில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். ''பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கக்கூடிய கட்சி களை ஒன்றுதிரட்டி ஒரு தேர்தல் வியூகத்தை அமைக்க வேண்டும். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை எந்த வியூகத்தில் சந்திப்பது'' என்பதைப் பற்றி யோசிக்க - கலந்து பேசிட, முதல் கட்டமாக முதல் கூட்டமாக அந்த முயற்சி எடுத்து அந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அதனால்தான் இன்றைக்கு பிரதமர் இறங்கி வந்து பேசக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
ஒன்றிய பிஜேபி ஆட்சியின் லட்சணம்!
நான் கேட்கிற கேள்வி எல்லாம், மணிப்பூர் மாநிலம் இன்றைக்கு ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக் கின்ற பிஜேபி ஆளக்கூடிய மாநிலம். அந்த மணிப்பூர் மாநிலம் கடந்த 50 நாள்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்களாம். இதுவரை பிரதமர் அந்தப் பக்கமே போகவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட 50 நாள்களுக்குப் பிறகுதான் அமித் ஷா நடத்தி இருக்கிறார். இதுதான் ஒன்றியத்தில் ஆளக்கூடிய பிஜேபி ஆட்சியின் லட்சணம். இந்த லட்சணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வருகிறது. பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று சொல்லி இருக்கிறார்.
மதப் பிரச்சினையை அதிகமாக்கி நாட்டிலே குழப்பத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நினைக்கிறார்
ஒரு நாட்டினுடைய சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்றால், மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக்கூடாது என்று கருதுகிறார் மோடி. ஆக, மதப் பிரச்சினையை அதிகமாக்கி நாட்டிலே குழப்பத்தை ஏற்படுத்திவிடலாம் என்று அவர் கருதிக் கொண்டி ருக்கிறார். நான் உறுதியோடு சொல்கிறேன், நிச்சயமாக, உறுதியாக வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடத்தை வழங்க இந்திய நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களும் தயாராக இருக்க வேண்டும்''
- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.
No comments:
Post a Comment