சனாதனத்தை வேரறுப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு ஊக்க மருந்தாக இருந்து எங்களை வழிநடத்தவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

சனாதனத்தை வேரறுப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு ஊக்க மருந்தாக இருந்து எங்களை வழிநடத்தவேண்டும்!

 தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டுக்கு மேல் வாழவேண்டும் - அவருடைய நூற்றாண்டு விழாவிலும் திருமாவளவன் பேசவேண்டும்!

‘‘90 இல் 80 - அவர்தான் வீரமணி'' சிறப்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் 

கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., விழைவு 

சென்னை, ஜூன் 29 தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டுக்குமேல் வாழவேண்டும் - அவரு டைய நூற்றாண்டு விழாவிலும் திருமாவளவன் பேச வேண்டும். சனாதனத்தை வேரறுப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு ஊக்க மருந்தாக இருந்து எங்களை வழிநடத்தவேண்டும். நீங்கள் இருக்கின்ற துணிச்சலில் தான் நாங்கள் இப்படியெல்லாம் பேசுகிறோம் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

 ‘‘90 இல் 80 - அவர்தான் வீரமணி’’

கடந்த 27.6.2023 அன்று மாலை சென்னை தியாக ராயர் நகரில் உள்ள  சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் ‘‘90 இல் 80- அவர்தான் வீரமணி'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கி னார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

இவ்விழாவிற்குத் தலைமை ஏற்று சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற திரா விடர் கழகத்தின் பொருளாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களே,

நிறைவாக நம்மிடையே வாழ்த்துரை வழங்கவிருக் கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப் பினருமான மதிப்பிற்குரிய அண்ணன் திருச்சி சிவா அவர்களே,

வாழ்த்துரை வழங்கி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் இரா.முத்தரசன் அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீ. அவர்களே, திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற இரா.வில்வநாதன் அவர்களே,

நிறைவாக நம்மிடையே ஏற்புரை வழங்கவிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

திரளாகக் கூடியிருக்கின்ற கருஞ்சிறுத்தைகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு வாழும் சாட்சியமாக விளங்குகிறவர் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா

‘‘அகவை 90 பொதுவாழ்வு 80'' என்னும் தலைப்பில் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களை வியந்து பார்க் கிறோம்.

அறிவார்ந்த சான்றோர் யாவரும் அவரை ஒவ்வொரு கோணத்திலும் ஆய்வு செய்து, வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக பொதுவாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பொது வாழ்வில் ஒருவர் வெற்றிகரமாக இயங்குவது எப்படி என்பதற்கு இன்றைக்கு வாழும் சாட்சியமாக விளங்கு கிறவர் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

பொது வாழ்வில் தனிமனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இன்றைக்கு ஒரு வாழும் சான்றாக - சாட்சிய மாக விளங்குகிறவர் தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

இளம்வயதிலேயே, சிறு வயதிலேயே பேரறிஞர் அண்ணா,  தந்தை பெரியார் போன்றவர்களால் அடை யாளம் காணப்பட்டவர், பாராட்டப்பட்டவர் என்கிற பெருமை நம்முடைய அய்யா அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. இங்கே அதை பலரும் எடுத்துரைத்தனர்.

மாபெரும் ஆளுமைகள் 

பெரியாரும் - அண்ணாவும்!

10 வயதிலே அவர் ஆற்றிய உரை, அண்ணாவை வியக்கச் செய்திருக்கிறது; பெரியாரையும் ஈர்த்திருக்கிறது. தமிழ் மண்ணில் ஒரு புரட்சிகர அரசியலுக்கு வித்திட்ட மாபெரும் ஆளுமைகள் பெரியாரும் - அண்ணாவும்!

தமிழ் மண்ணில் அரசியலின் திசை வழிப் போக்கை - ஒரு பெரிய திசை வழியில், புரட்சிகர திசை வழியில் மடைமாற்றம் செய்த மாமனிதர்கள் அய்யா பெரியாரும், அறிஞர் அண்ணாவும்.

அப்படிப்பட்ட அந்த ஆளுமைகளால் அடையாளம் காணப்பட்ட, அவர்களே வியந்து பார்த்த, பேராளுமை மிக்க ஒரு சிறுவனாக தன் பொதுவாழ்வைத் தொடங்கிய அய்யா அவர்கள், அதிலிருந்து வழுவாமல், நழுவாமல், பாதையை விட்டு விலகாமல், ஏற்றுக்கொண்ட கொள் கையின் பிடிப்பிலிருந்து உறுதி தளராமல், இன்றைக்கும் மீள்நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றார்.

எதையும் தீர்மானிப்பதிலே தொலைநோக்குப் பார்வை கொண்டவர்

எதையும் தீர்மானிப்பதிலே தொலைநோக்குப் பார்வை கொண்டவராக அய்யா ஆசிரியர் அவர்கள் விளங்குகிறார். நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில், பெரியார் திடலுக்குச் செல்லுவது வழக்கம்.

ஒரு போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது. ரயில் மறியல் போராட்டம் - நானும் அந்த ரயில் மறியல் போராட்டத்தில் சைதாப்பேட்டையில் பங்கேற்று,  கைதாகி, ஒரு நாள் முழுவதும் பரங்கிமலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டு, மீண்டும் நான் பெரியார் திடலுக்கு வருகிறேன்.

பெரியார் திடலின் வாசலில், கைதாகி விடுதலையாகி வந்த எங்களைப் போன்றவர்களிடையே அவர் பேசுகிறார். 

என்ன பேசினார் என்றால், எதற்காக அந்த ரயில் மறியல் போராட்டம் என்றால், ஈழத் தமிழர் விடுதலைக் கான ஒரு பிரச்சினை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்த நிகழ்வு அது.

தமிழ்நாட்டில், அன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், டெலோ இயக்கத்தை ஆதரித்தார். சிறீசபாரத்தினம் அவர்களை ஊக்கப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் எல்.டி.டி.இ. பிரபாகரன் அவர்களை ஆதரித்தார்.

இப்படி ஒரு பார்வை அன்றைக்கு இருந்தது. அந்த நேரத்தில், அய்யா ஆசிரியர் அவர்கள் பேசினார்.

கடைசியில், அந்த இயக்கம்தான் 

நிலைத்து நின்றது

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சரியாக முன் னெடுத்துச் செல்லக்கூடிய ஆளுமை தளபதி பிரபாகரன் அவர்கள்தான். அவர் பக்கம் நின்று நாம் போராடுவது தான் சரியானது என்ற கருத்தை அன்றைக்கு எங்களி டத்தில் பேசியது நினைவிருக்கிறது.

கடைசியில், அந்த இயக்கம்தான் நிலைத்து நின்றது. மற்ற இயக்கங்கள் எல்லாம் இடையிலேயே காணாமல் போய்விட்டன.

அந்தப் போராட்டத்தை உறுதியாக முன்னின்று எடுத்துச் செல்லுகின்ற, முன்னெடுத்துச் செல்லுகின்ற வலிமைமிக்க ஒரு பேரியக்கமாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்தது.

தமிழர் தலைவர் அவர்கள், அன்றைக்கு அவர் பேசிய அந்தப் பேச்சு, தமிழீழ விடுதலைப்புலிகளால் மட்டும்தான் இந்தப்  போராட்டத்தை வெகுவாக முன் னெடுத்துச் செல்ல முடியும் என்கிற அந்தக் கருத்தை இன்றைக்கு நான் எண்ணிப் பார்க்கிறேன்.

பட்டினி அறப் போராட்டத்தில் ஈடுபட்டார் அண்ணன் பிரபாகரன்

அண்ணன் பிரபாகரன் அவர்கள் தன்னுடைய கைகளில் வைத்திருந்த தந்தியில்லா கருவிகள் ஆகிய வற்றை அன்றைய அய்.ஜி. மோகன்தாஸ் அவர்கள் திடுமென பறித்துக் கொண்டார். அந்த நடவடிக்கையைக் கண்டித்து பட்டினி அறப் போராட்டத்தில் ஈடுபட்டார் அண்ணன் பிரபாகரன் அவர்கள். அப்பொழுது நாங்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் - தோழர் அருள்மொழி, நான், இன்னும் சில தோழர்கள். அவர் பட்டினி இருக் கின்ற இடத்திற்குச் சென்று, அவரைப் பார்க்கவேண்டும்; அவருடைய போராட்டத்தைக் கைவிடச் சொல்லி நாம் வலியுறுத்தவேண்டும் என்று முடிவெடுத்து நாங்கள் பயணிக்கிறோம்.

அப்பொழுது அருள்மொழி சொன்னார், ‘‘ஆசிரியர் அவர்களைப் பார்த்துவிட்டு, நாம் அங்கே போகலாம்'' என்று.

மந்தைவெளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்தார் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். ஏதோ ஒரு சிகிச்சைக்காக இருந்த அவரை நாங்கள் மாணவர்களாகப் போய் அவரைப் பார்த்தோம்.

நானும் அங்கேதான் புறப்பட்டுக் கொண்டிருக்கின் றேன். நீங்கள் முன்னால் செல்லுங்கள், நான் வருகிறேன் என்று தமிழர் தலைவர் அங்கிருந்து கிளம்பி வந்தார். ஆனால், நாங்கள் பேருந்தில் செல்லுவதற்கு முன்பு, அவர் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டார்.

பட்டினிப் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி, அந்த வாசலில் நாங்கள் எல்லோரும் முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தை நடத்தினோம்.

‘‘ஆயுதம் ஏந்தி போராடுகிற நீங்கள், அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுவதா?'' என்று மாணவர்களாகிய நாங்கள் முழக்கம் எழுப்பினோம்.

சிறிது நேரத்தில், அண்ணன் பிரபாகரன் வெளியில் வந்து எங்களைப் பார்த்தார்; எங்களிடம் பேசினார். அவர் வந்த சில நொடிகளில், ஆசிரியர் அவர்களும் அந்த அறைக்குள்ளிருந்து வெளியே வந்து, அண்ணன் பிரபாகரனிடத்தில் ஏதோ ஒரு தகவலை காதோரம் சொன்னார்.

உடனே அண்ணன் பிரபாகரன் மீண்டும் அந்த அறைக்குள்ளே, அய்யா அவர்களோடு போய்விட்டு, சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார்.

பழச்சாறு கொடுத்து, பட்டினி போராட்டத்தை முடித்து வைத்தார் தமிழர் தலைவர்

எங்களையெல்லாம் பார்த்துச் சொன்னார், ‘‘முதல மைச்சர் எம்.ஜி.ஆர். தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு என்னோடு பேசினார்; பறிக்கப்பட்ட ஆயுதங் களையெல்லாம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டார்; பட்டினிப் போராட்டத்தை முடிக்கச் சொல்லியிருக்கிறார்; ஆகவே, நான் போராட்டத்தைக் கைவிடுகிறேன்'' என்று அண்ணன் பிரபாகரன் அவர்கள் பேசினார்.

அந்த பட்டினி போராட்டத்தை முடித்து வைத்தவர் தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

எங்கள் முன்னால், அவருக்குப் பழச்சாறு கொடுத்து, பட்டினி போராட்டத்தை முடித்து வைத்தார்.

எங்களுக்கும் அன்றைக்குக் கூல்டிரிங்ஸ் வழங்கச் சொல்லி, அண்ணன் பிரபாகரன் ஆணையிட்டார், எங்களுக்கும் கொடுத்தார்கள்.

அப்பொழுது அண்ணன் பிரபாகரன் பேசினார், ‘‘நாங்கள் ஆயுதம் ஏந்தியது சிங்கள பவுத்த பேரின வாதத்திற்கு எதிராகத்தானே தவிர, இந்திய அரசுக்கு எதிராக அல்ல. நாங்கள் ஒருபோதும் இந்திய அரசை எதிரியாகப் பாவிக்கமாட்டோம்'' என்றார்.

அவர் கடைசி வரையில் அப்படித்தான் இருந்தார். இந்திய அரசின் துணையில்லாமல், ஈழத்தை வென்றெ டுக்க முடியாது என்ற அந்தப் பார்வை - தீர்க்கதரிசன பார்வை அண்ணன் பிரபாகரனிடத்தில் இருந்தது.

அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், இங்கே இருக்கின்ற நாம், நம்முடைய அரசியலுக்காக, காங்கிரசை விமர்சிக்கின்றோம் என்கிற பெயரில், தி.மு.க.வை விமர்சிக்கின்றோம் என்கிற பெயரில், இந்திய அரசை விமர்சிக்கின்றோம் என்கிற பெயரில், ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், அப்பொழுதும் இந்திய அரசின் உதவி, துணை நமக்கு எப்பொழுதும் தேவை - ஈழத் தமிழரின் சிக்கலுக்கு என்பதில் தெளிவான பார்வை கொண்டவராக இருந்தவர்தான் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.

நிதானமாக, அரசியலைக் கையாளுகின்ற பக்குவத்தைப் பெற்றிருக்கின்றார் தமிழர் தலைவர்

அந்த அடிப்படையில்தான், அவர்கள் எந்த கடின மான நிலைப்பாட்டினையும் எடுக்காமல், அவதூறு பரப்புகின்ற நிலைப்பாட்டினை எடுக்காமல், நிதானமாக அரசியலைக் கையாளுகின்ற பக்குவத்தைப் பெற்றிருக் கின்றார். மிக வியப்பாக இருக்கும்.

என்னைப்பற்றிகூட திராவிடர் கழகத்திற்கு எதிராக அல்லது பெரியாருக்கு எதிராக திருமாவளவன் செயல்படுகிறார் என்கிற ஒரு வதந்தி கிளம்பியபொழுது, எனக்கு எதிரான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டபொழுது, மிக நிதானமாக தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்தவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.

என்னை தோழமையோடு அரவணைத்தவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர்

அவர் ஒரு நாளும் என்னை விமர்சித்ததில்லை. தோழர் ரவிக்குமார் அவர்கள், ‘தமிழ்மண்' இதழில் சில கட்டுரைகளை எழுதி, அதனால் ஏற்பட்ட முரண்பாடு - விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமே பெரியாருக்கு எதிராக இருக்கின்றது என்பதைப் போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டபொழுது, அந்த நேரத்திலும் என்னை தோழமையோடு அரவணைத்தவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் என்பதை என்றென்றைக்கும் நான் நினைவுகூர்ந்திட கடமைப்பட்டு இருக்கின்றேன்.

ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால், எதிலும் ஒரு தெளிவு - தொலைநோக்குப் பார்வை - நிதானம் - விமர்சனத்தில்கூட அறிவார்ந்த அணுகுமுறை - அவதூறு இல்லாத ஓர் அணுகுமுறை.

பலமுறை என்னை தனியே அழைத்துத் தட்டிக் கொடுத்து, ‘‘நிதானமாகச் செல்லுங்கள்- எனக்குத் தெரியும், உங்கள் பயணம் கடினமான பயணம்தான். நிதானமாகச் செல்லுங்கள்'' என்று சொல்லுவார்.

உணர்ச்சிவயப்பட்டு எப்பொழுதாவது நான் பேசிவிட்டால், அந்த நேரங்களில் என்னை அழைத்து என்னைத் தட்டிக் கொடுத்து, நிதானமாகச் செல்லுங்கள் என்று அறிவுறுத்துவதின்மூலமாக. திருமாவளவன் இந்தத் தளத்தில் நமக்குத் தேவையான ஒரு சக்தி என்பதை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொண்டுள்ளார் தமிழர் தலைவர் என்பதை என்னால் அப்பொழுது உணர்ந்துகொள்ள முடிந்தது.

தமிழர் தலைவர், பெரியாரால் அடையாளம் காணப் பட்டவர் என்பதால், இன்றைக்கு சமூகநீதி அரசியல் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள், அய்யா பெரியாரோடு முரண்பட்டு விலகிப் போன நேரத்தில், தமிழர் தலைவரும் ஒருவேளை விலகியிருந்தால், போயிருந்தால், திராவிடர் கழகத்தின் நிலை என்ன என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கிறது.

அரசியல் தளத்திற்கு அப்பாற்பட்ட நிலையில்,  ஒரு பேரரணாக இருப்பவர் தமிழர் தலைவர்

ஒருவேளை நமக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு பெரிய பாதுகாப்பு அரணாக இருந்தாலும்கூட, அரசியல் தளத்திலே - அரசியல் தளத்திற்கு அப்பாற்பட்ட நிலையில், ஒரு பேரரணாக இருப்பவர் தமிழர் தலைவர் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. விரைந்து முடிவெடுக்கக் கூடியவர்.

பெரியாரின் பிள்ளை - 

பேரறிஞர் அண்ணாவின் வழித்தோன்றல்!

தருமபுரியில், ஜாதியின் பெயரால் ஓர் ஆணவக் கொலை நிகழ்ந்தது. மூன்று சேரிகள் கொளுத்தப்பட்டன. அதை எப்படி அணுகுவது? அதை எப்படி எதிர் கொள்வது? என்று எல்லோரும் தயங்கி நின்ற நேரத்தில், திணறி நின்ற நேரத்தில், தடுமாறி நிலை குலைந்து நின்ற நேரத்தில், உடனே அந்த இடத்தில் ஜாதி ஒழிப்பு மாநாட்டினை அறிவித்து, தருமபுரியில் பல்லாயிரக் கணக்கான கருஞ்சிறுத்தைகளைத் திரட்டி, அந்த மாநாட் டில் திருமாவளவன் பேசுவார் என்று, திருமாவளவனுக்கு மேடை போட்டுக் கொடுத்த துணிச்சல்மிக்க பேராளு மைதான் - பெரியாரின் பிள்ளை - பேரறிஞர் அண்ணா வின் வழித்தோன்றல்  நம்முடைய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.

நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு அது. ஒட்டுமொத்த தமிழ்நாடே கொந்தளித்துப் போய் நிற்கிறது. எந்தப் பக்கம் பேசுவது என்று ஜனநாயகச் சக்திகள்கூட தடுமாறிப் போய் நின்றார்கள். வாய்த் திறந்தால், நமக்கு எதிராகப் போய்விடும் என்று எல்லோரும் நிலைகுலைந்து போய் நின்றனர்.

ஆனால், பெரியாரின் பிள்ளை என்பதினால், துணிச்சலாக ஓரிரு நாள்களிலேயே அந்த முடிவை எடுத்து அறிவித்தார் தமிழர் தலைவர் அவர்கள்.

அந்த இடத்தில் நான் தனிப்பட்ட முறையில் போய் ஒரு மாநாட்டினை போட்டிருக்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஓர் ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருக்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை அன்றைக்கு அனுமதித்திருக்காது.

ஆனால், ‘‘திராவிடர் கழகத்தின் சார்பிலே மேடை போட்டு, நான் பேசுவதைவிட, தம்பி திருமாவளவன் பேசுவான்'' என்று அந்த மேடையிலே என்ன பேச வைத்தார். அதுதான் பெரியாரின் வாரிசு என்பதற்கு ஒரு மிகச்சிறந்த சான்று.

இன்றைக்கு சனாதனத்தின் உச்சம்தான் வள்ளலார் என்று இங்கே ஓர் அரைவேக்காடு காவிக் உலவிக் கொண்டிருக்கிறது. 

கடவுள் நம்பிக்கையைக்கூட விமர்சித்தவர்தான்; விக்கிர வழிபாட்டில் வள்ளலாருக்கு உடன்பாடு கிடையாது!

வள்ளலார் எவ்வளவு பெரியவர் - ஆன்மிகத் தளத்தில் அவர் ஒரு தந்தை பெரியார்.

சனாதன எதிர்ப்பாளர்; பார்ப்பன ஆதிக்க எதிர்ப் பாளர்; ஜாதீய கட்டமைப்பை முற்றாக எதிர்த்தவர். கடவுள் நம்பிக்கையைக்கூட விமர்சித்தவர்தான். விக்கிர வழிபாட்டில் அவருக்கு உடன்பாடு கிடையாது.

வள்ளலாருடைய கொள்கைகளை நாம் மிகப்பெரிய அளவிலே உயர்த்திப் பிடிக்கவேண்டிய அளவிற்கு அவர் மிகச் சிறப்பாகச் சிந்தித்த சிந்தனையாளர். அந்த வள்ளலாரைப் போய், சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் - சூப்பர் ஸ்டார். சனாதனத்தின் சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் உளறுகிறார்.

உடனே அந்த இடத்தில், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று தமிழர் தலைவர் அய்யா அவர்கள் வருகிற ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித் திருக்கிறார். இதுதான் தமிழர் தலைவர்.

வடலூரில் ஜூலை 7 ஆம் தேதி 

சனாதன எதிர்ப்பு மாநாடு!

தருமபுரியிலே ஜாதியின் பெயரிலே ஒரு வன்முறை வெறியாட்டம் நடந்தபொழுது, ஜாதி ஒழிப்பு மாநாட் டினை அறிவிக்கின்ற துணிச்சல் தமிழர் தலைவருக்கு இருந்ததைப்போல, வடலூரிலே வள்ளலாரை இழிவு படுத்தியவரைக் கண்டிக்கவேண்டும் என்கிற வகை யிலே, ஜூலை 7 ஆம் தேதி சனாதன எதிர்ப்பு மாநாட் டினை அறிவித்து, வள்ளலாரைப் போற்றி பேசுகிற அவருடைய கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கின்ற ஒரு கடப்பாட்டை திராவிடர் கழகம் மேற்கொண் டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் சமூகநீதிக்கு ஆபத்து வருகின்ற நேரத்தில், நெருக்கடி வருகின்ற நேரத்தில், விழிப்பாக இருந்து, நம்மைத் தட்டி உசுப்பி, நம்மைக் களத்திற்கு இழுக்கக் கூடியவர் - ஈடுபட வைக்கக்கூடிய ஒரு தாய்மைக் குணம் உள்ளவர் தமிழர் தலைவர் அவர்கள்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண் டும், உள்ளத்தை எப்பொழுதும் தெளிவாகவும், திடமாக வும் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்கு இன் றைக்கு வாழும் அரசியலில், இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம்.

இரவெல்லாம் பொதுக்கூட்டம், நிகழ்ச்சி என்று அலைகிறோம் என்று நேரத்தின்மீதும், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றவர்கள்மீதும் பாராத்தைப் போட்டு, உடலை கவனிக்காமல் விட்டுவிடுகிற என்னைப் போன்றவர்கள் பலர் இருக்கிறோம்.

உடலைப் பேணிக் கொள்வதில், மருத்துவரைவிடவும் சிறந்தவராக இருக்கிறார்!

அய்யா அவர்களும் கடினமாக உழைக்கிறார்; நேர்த்தியாக உழைக்கிறார்; திட்டமிட்டு உழைக்கிறார்; அல்லும் பகலும் உழைக்கிறார். ஆனால், உடலைப் பேணிக் கொள்வதில், மருத்துவரைவிடவும் சிறந்தவராக இருக்கிறார். மருத்துவருக்கே ஆலோசனை சொல்லக் கூடிய வகையிலே மிகச் சீரிய பார்வை உள்ளவராக, தெளிவுள்ளவராக இருக்கிறார்.

அதனால்தான் சொன்னேன், அவர் இன்றைக்கு நமக்கு ஒரு வாழும் சாட்சியமாக - ஒரு முன்மாதிரியாக இருந்து கொண்டிருக்கின்றார்.

பொதுவாழ்வில் எப்படி வெற்றிகரமாக இயங்குவது? சாதனயாளராகத் திகழ்வது? பெரியார் மறைந்த பிறகு, திராவிடர் கழகம் இருக்காது; அன்னை மணியம்மை யாருக்குப் பிறகு திராவிடர் கழகம் இருக்காது என்று பலரும் கனவு கொண்டிருந்த நிலையில், அந்தக் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுகிற ஒரு பேராளுமையாகப் பொறுப்பேற்றவர் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள். இன்றைக்கு அதை ஆயிரம் மடங்கு பெருக்கி வைத்திருக்கிறார்.

‘‘பெரியாரை உலகமயமாக்குவோம்; 

உலகத்தை பெரியார் மயமாக்குவோம்’’

கல்வி நிறுவனங்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன; பிரச்சார நிறுவனங்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன. பெரியாரின் சிந்தனைகள் நாளுக்கு நாள் உலகமயமாகி வருகின்றன.  ‘‘பெரியாரை உலகமயமாக்குவோம்; உல கத்தை பெரியார் மயமாக்குவோம்'' என்று இன்றைக்கு உரத்து முழங்கிக் கொண்டிருப்பவர்; உலகம் முழுவதும் பயணம் செய்துகொண்டிருப்பவர்.

டில்லியிலே பெரியார் மய்யம்; சென்னையிலே  பெரியார் திடல். பெரம்பலூர் அருகிலே பெரியார் உலகம் என்று மிகப்பெரிய திட்ட மதிப்பீட்டில் கனவுத் திட்டம் ஒன்றை செயல்படுத்த அனைத்துப் பணிகளை யும் செய்துகொண்டிருக்கின்றார்.

பல்கலைக் கழகம் - இவையெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சி; எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகள். இதுதான் பெரியார் மிசன்.

பெரியார் மிசன் என்ற ஒரு மகத்தான இயக்கத்தை முன்னெடுத்தவர்!

அம்பேத்கருக்கு இப்படி இந்தியாவிலே எந்த மிசனும் உருவாகவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சருடைய கருத்துகளைப் பரப்புவதற்கு, விவேகானந்தர் இராம கிருஷ்ண மிஷன் என்ற ஒன்றை உருவாக்கினார். அதனால், அவர்களின் கருத்துகள் இன்னும் போய்க் கொண்டே இருக்கின்றன. தலைமுறை விட்டு தலை முறை. பெரியாருடைய சிந்தனைகளை அப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான பெரியார் மிசன் என்ற ஒரு மகத்தான இயக்கத்தை எடுத்து, சாதித்துக் கொண் டிருக்கின்ற, சாதனைகளைத் தொடர்ந்து கொண்டிருக் கின்ற ஒரு மாபெரும் ஆளுமைதான் தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

சமூகநீதியைப் பாதுகாப்பதற்காக, சனாதனத்தை வேரறுப்பதற்காக  அகில இந்திய அளவிலே, வழி காட்டும் ஒரு மாபெரும் தலைவராக இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இங்கே நம்முடைய சுப.வீ. அவர்கள், அண்ணன் கவிதைப்பித்தன் கவிதை வரிகளிலிருந்து எடுத்துக் காட்டிச் சொன்னதைப்போல, சமூகநீதிக்கான தளத்தில், நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர் களுக்குத் தோள் கொடுத்து இன்றைக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றார்.

முத்தமிழறிஞர் கலைஞருக்கும் உற்ற துணையாக இருந்தார்; அவருடைய தளபதிக்கும் உற்ற துணையாக இருக்கிறார். பெரியார் வாழும் காலத்தில் வாழ இயலாத நம்மைப் போன்றவர்களுக்கு, அய்யா அவர்களின் வாழும் காலத்தில், அவரோடு மேடையில் அமர்வதற் கான வாய்ப்பு, அவருக்கு முன்னால் உரையாற்று வதற்கான வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். 

சனாதனத்தை வேரறுப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு ஊக்க மருந்தாக இருந்து எங்களை வழிநடத்தவேண்டும்!

அவர் நூறாண்டுக்குமேல் வாழவேண்டும் - அவரு டைய நூற்றாண்டு விழாவிலும் திருமாவளவன் பேச வேண்டும். சனாதனத்தை வேரறுப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு ஊக்க மருந்தாக இருந்து எங்களை வழிநடத்தவேண்டும். நீங்கள் இருக்கின்ற துணிச்சலில் தான் நாங்கள் இப்படியெல்லாம் பேசுகிறோம்.

நீங்கள் இருக்கின்ற துணிச்சலில்தான் நாங்கள் இந்தத் தளத்திலே எதைப்பற்றியும் கவலைப்படாமல் பயணிக்கிறோம்.

ஊக்கம் பெறுவோம்; உந்துதல் பெறுவோம்; களமாடுவோம்!

ஆகவே, உங்களைப் பார்த்து நாங்கள் இன்னும் இன்னும் ஊக்கம் பெறுவோம்; உந்துதல் பெறுவோம்; களமாடுவோம் - உங்கள் கனவை நனவாக்குவதற்கு நீங்கள் சொன்னதைப்போல, விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாம் குழல் துப்பாக்கியாக இருந்து பணியாற்றுவோம் என்பதைச் சொல்லி, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment