- கவிஞர் கலி. பூங்குன்றன்
‘குடிஅரசு’ தடாகத்தில்
பூத்த மலர்
கொள்கை மணம் வீசும்
குறிஞ்சிமலர்
விளையாட்டுப்
பருவத்திலேயே
விளைந்த பயிர்
பள்ளிப் பருவத்திலேயே
பகுத்தறிவை உண்ட மகன்
கையெழுத்து ஏடு நடத்தி
‘தலை எழுத்து’ மந்திரத்தை
தகர்த்த வீரன்!
தத்துவப் பெரியாரின்
தடம்பற்றி
கடைசிவரை சறுக்காத
காவல்காரன்
எழுத்தாளன்
எழுத்து வியாபாரியல்ல
பேச்சாளன்
புகழ் ஆசைக்கல்ல!
‘திராவிடன் வீழ்ந்தது ஏன்?’
தீப்பந்தம் தூக்கியவன்
தமிழ் நீஷ பாஷையா?
தணலாக தகித்தவன்
இந்திக்கு என்ன வேலை?
எரியீட்டியைத் தூக்கியவன்
சின்ன வயதிலேயே
வாரியாரை வாரியவன்!
“தமிழில் பாடியதால்
தீட்டாயிடுத்து” என்ற
ஆரிய அரியக் குடிகளை
அதிர வைத்தவன்
ஆம்! விளையும் பயிர்
முளையில் தெரிந்தது!
கடைசி மூச்சு
கடைகட்டும் வரை
கரகரத்த குரலால்
மக்களைத் தட்டி
எழுப்பியவன்
ஆட்சிப் பீடமும்
சிறைக் கூடமும்
அவரின் கூட்டாளிகள்
சிறகடித்துச் செல்லும்
உப்பரிகைகள்
வாயின் நாக்கு
மட்டுமல்ல
பேனாவின் நாக்கும்
அவனின் பே(£)ராயுதங்கள்
உரசிப் பார்த்தோர்
உயிர் பிழைத்தால் போதும்
என்று ஓடியதுதான் மிச்சம்!
வெறும் அரசியல்
வாதியல்ல
பெரியார் தம்
கொள்கைவாதி!
அண்ணாவிடம்
பாடம் பயின்ற
பைந்தமிழ் அகராதி!
இளவல் வீரமணிக்கோ
இதய நாடி
தளபதி மு.க. ஸ்டாலினுக்கோ
தந்தையும், தலைவரும்!
அவர்தாம் கலைஞர்
மானமிகு
சுயமரியாதைக்காரர்!
நூற்றாண்டைப்
போற்றுவோம்!
திராவிடத் தத்துவக்
கொடியை எங்கெங்கும்
ஏற்றுவோம்!
‘திராவிட மாடல்’ ஆட்சியின்
சாதனை விளக்கினை
வீடுதோறும் ஏற்றுவோம்!
வாழ்க பெரியார்!
வாழ்க கலைஞர்!
No comments:
Post a Comment