வலிமையான ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 28, 2023

வலிமையான ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம்!

 நெருக்கடி நிலை காலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா!

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!

சென்னை, ஜூன் 28 நெருக்கடி நிலை காலத்தில் மட்டு மல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா! வலிமையான ஒருங்கிணைப்புக்கும், முன்னெடுப்புகளுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம் என்று தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அவருடைய வாழ்த்துக் கடிதம் வருமாறு:

சுயமரியாதை என்று சொல்லப்படும் தன்மானத் துடன், ஒவ்வொரு மனிதரும் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் இலட்சியம். தனி மனிதர்களுக்குத் தன்மானம் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், இயக்கத்தை வழிநடத்துபவர் களுக்குத் தன்மானத்தைவிட இனமானமே பெரிதாக இருக்கும். இருக்க வேண்டும்.

தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழும், நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!

தன் மீது வீசப்படும் சொற்களையும், கற்களையும் எதிர்கொண்டு, எதிரிகளின் வசவுகளை உரமாக்கிக் கொண்டு, உயர்ந்து வளர்ந்து, பழமும், நிழலும் தரும் மரமாக நிலைத்து நிற்பதே திராவிட இயக்கத்திற்கான தலைமைப் பண்பு. அத்தகைய தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராக இருப்பவர்தான் நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள். 

90 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வு என்கிற பெருமையைத் திராவிட இயக்கத்தில் அன்றி, வேறு எந்த இயக்கத்திலும் காண்பது அரிது! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது 94 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்கார ராகத் திகழ்ந்தவர். இனமானப் பேராசிரியர் அவர்கள் தனது 96 ஆண்டு கால வாழ்வில் ஏறத்தாழ அதே அளவிலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இன்று நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களும் அத்தகைய பெருமைக்குச் சொந்தக்கார ராகத் திகழ்கிறார்.

நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டைக் கடந்த பொது வாழ்வு என்பது நம் தலைவர்களுக்கு வாய்த்தது என்பது, நமக்குப் பெரு மையாக மட்டுமல்ல, இந்தச் சமுதாயத்திற்குப் பெரும் பயனாகவும் அமைந்துள்ளது.

மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் 

புரட்சியாளர் தந்தை பெரியார்

தன்னலமற்ற தொண்டறத்தால்தான் சமுதாயச் சீர் திருத்தத்தை உருவாக்க முடியும் என்று தனது 95 வயது வரை ஓயாமல் பயணித்து, மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு, மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் புரட்சியாளர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை அவர் கண் முன்னாலேயே சட்ட வடிவமாக்கிக் காட்டியவர் பேரறி ஞர் அண்ணா. தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், பெரியாருக்குப் பிறகும் அவரது சிந்தனைகளைச் சட்டங்களாகத் திட்டங்களாகத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

சுயமரியாதை - சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்!

திராவிடர் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றத் திற்கும் பாதை சற்று மாறுபட்டாலும் இலக்கு ஒன்றுதான். இரு இயக்கங்களுமே சுயமரியாதை - சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்.

10 வயதிலேயே, திராவிடர் கழக மேடை மீது போடப்பட்டிருந்த மேசை மீது ஏறி நின்று பகுத்தறிவை முழங்கிய மாணவரான ஆசிரியர் அய்யாவின் முழக்கம் இன்று வரை ஓயாமல் தொடர்கிறது. அது என்றும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நம் விருப்பம்.

தந்தை பெரியாரின் 

முழு நம்பிக்கையைப் பெற்றவர்!

நமது இயக்கத்திலே, தந்தை பெரியாரிடம் இருந்து நற்சான்றை மட்டுமல்ல, அவரது முழுமையான நம்பிக் கையையும் பெற்றவர் ஆசிரியர் அய்யா அவர்கள். பெற்ற நம்பிக்கையை இன்றளவிலும் முழுமையாகக் காப்பாற்றி வருகிறார்.

தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் எனும் ஆலமரத்தை பாதுகாப்பதுடன் பல புதிய விழுது களையும் உருவாக்கி, இந்தக் கொள்கை ஆலமரம் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் தொண்டாற்றி வருபவர் நம் ஆசிரியர் அய்யா அவர்கள்.

ஆசிரியர் அய்யா அவர்களின் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!

பேரறிஞர் அண்ணா பொறுப்பு வகித்த, குத்தூசி குருசாமி போன்றவர்கள் பொறுப்பு வகித்த ‘விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகளைக் கடந்து பணியாற்றி வரும் ஆசிரியர் அய்யா அவர்களின் இந்தப் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!

தன்னிடம் தந்தை பெரியார் ஒப்படைத்த இயக் கத்தை, பத்திரிகையை, நிறுவனங்களை பன்மடங்கு பெருக்கி, பகுத்தறிவுப் பயணத்தைப் பழுதறத் தொடர்ந்து, தொண்டால் பொழுதளக்கும் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துகளை மட்டுமல்ல, வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர்!

நெருக்கடி நிலைக்கால ‘மிசா' சிறைவாசத்தில் நான் சித்திரவதைகளை எதிர்கொண்ட போது, என் தோள் பற்றித் துணைநின்ற தோழமைத் தலைவர் நம் ஆசிரியர் அய்யா. அந்த நெருக்கடி நிலைகாலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லா சானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா அவர்கள்.

இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை இந்திய ஒன்றியம் சந்தித்து வரும் நிலையில், வலிமையான ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிக மிக அவசியம்.

அரசியல் குறித்த ஆலோசனைகள் மட்டுமல்ல, வாழ்வியலுக்கான ஆலோசனைகளையும் அவரிட மிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். 90 வயதிலும் இளைஞருக்குரிய வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் அவர் செயலாற்றுவதை வியப்புடன் பார்க்கிறேன்.

'பெரியார் உலகம்' முழுமை பெற்று  அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும்!

தாய்க் கழகமான திராவிடர் கழகத்தைக் கட்டிக்காத்து வரும் ஆசிரியர் அய்யா அவர்கள் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தையும் தாண்டி, நூற்றாண்டு விழா கொண்டாடி, இன்னும் பலப்பல ஆண்டுகள் இதே சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் செயலாற்றி எங்களை வழிநடத்த வேண்டும். அவர் சிந்தனையில் உருவாகிச் செயல்வடிவம் பெற்று வரும் 'பெரியார் உலகம்' முழுமை பெற்று அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும். பெரியாரையும் அவரது பகுத்தறிவுச் சிந்தனைகளையும் உலகமயமாக்கும் அவரது பெரும் பணி தொடரவேண்டும் எனத் தெரிவித்து, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

நன்றி! 

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment