புதுடில்லி,ஜூன்27 - தெலங்கானாவின் ஆளும் பாரத ராஷ்டிர சமிதியிலிருந்து (பிஆர்எஸ்) கடந்த ஏப்ரலில் நீக்கப்பட்ட மேனாள் எம்.பி. பொங்குலெத்தி சிறீநிவாஸ் ரெட்டி, மேனாள் அமைச்சர் ஜுப்பள்ளி கிருஷ்ண ராவ் உள்ளிட்ட 35 தலைவர்கள் காங்கிரசில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
தெலங்கானாவில் நிகழாண்டின் இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கருநாடக வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர்
கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதியிட மிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், டில்லி காங்கிரசு கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (26.6.2023) நடைபெற்ற நிகழ்வில் காங்கிரசு கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மேனாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் பிஆர்எஸ். கட்சியைச் சேர்ந்த பொங்குலெத்தி சிறீநிவாஸ் ரெட்டி மற்றும் ஜுப்பள்ளி கிருஷ்ண ராவ் உள்ளிட்ட 35 தலைவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
பொதுச் செயலர்(அமைப்பு) கே.சி.வேணுகோபால், தெலங்கானா மாநில தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். வரும் ஜூலை முதல் வாரத்தில் கிழக்கு தெலங்கானாவின் கம்மம் நகரில் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி நடத்தப்படும் என காங்கிரசில் இணைந்த தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, காங்கிரசு கட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தெலங்கானா முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, செழிப்பை முன்னோக்கி கொண்டு செல்ல தெலங்கானாவைச் சேர்ந்த மேலும் அதிகமான மூத்த தலைவர்கள் எங்களுடன் இணைய உள்ளனர்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மேனாள் எம்.பி. பொங்குலெத்தி சிறீநிவாஸ் ரெட்டி, மேனாள் அமைச்சர் ஜுப்பள்ளி கிருஷ்ண ராவ் ஆகிய 2 பேரும் பாரத ராட்டிர சமிதி கட்சியிலிருந்து கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment