ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் முத்தமி ழறிஞர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அதில் “தமிழக அரசில் மேலோங்கி இருந்த பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கலைஞர். ஆனால், அதைத் தவிர பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை”.இதில் சிறுமைப்படுத்துவதாக எண்ணி கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.
நெல்சன் மண்டேலா கறுப்பினத்தவர் களுக்கு விடுதலை வாங்கித் தந்தார். மற்றபடி பெரிதாக ஒன்றும் செய்ய வில்லை எனச் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இதுவும். கலைஞர் என்ற அந்த பிரம்மாண்டத்தை சிறுமைப்படுத்த பலர் தங்கள் வாழ்க்கை யையே அர்ப்பணித்து அதேபணியாய் இருந்தும்கூட இறுதியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். ‘அய் ரோபோட்’ என்ற ஆங்கிலப்படத்தில், “நாங்களும் மனிதர்களுக்கு இணையானவர்கள் தான்” எனச் சொல்லும் ரோபோட்டைப் பார்த்து அப்படத்தின் நாயகன் வில் ஸ்மித், “ உன்னால் சிம்பொனி எழுத முடியுமா?” என்பார்அதற்கு அந்த ரோபோட், “உன்னால் முடியுமா?” எனத் திருப்பிக் கேட்கும். வில் ஸ்மித் மூக்குடைபட்ட அதிர்ச்சியில் அமைதியாகிவிடுவார்.
1970களில் கலைஞருக்கு கணினி அறிமுகம் செய்யப்பட்டபோது, “கம்ப் யூட்டர் எல்லாமே செய்யும் அய்யா,” என யாரோ சொல்ல, “கவிதை எழுதுமா?” என சிரித்தபடியே திருப்பிக் கேட்டிருக்கிறார் கலைஞர். ஒருவேளை ‘அய் ரோபோட்’ திரைப் படத்தில் ரோபோட்டுக்கும் வில் ஸ்மித்துக்கும் நடந்த உரையாடல் ரோபோட்டுக்கும் கலைஞருக்கும் இடையே நிகழ்ந்திருந்தால் ரோபோட் மூக்குடைபட்டிருக்கும். முதன்முதலில் தி.மு.க. தேர்தலில் நிற்கும் என அறிவிக்கப்பட்டபோது கலைஞர் பெரிதும் எதிர்பார்த்த நாகப்பட்டினம் தொகுதிக்கு பதிலாக குளித்தலை அவருக்கு தரப்பட்டது. எந்த முகச் சுழிப்பையும் கலைஞர் காட்டவில்லை. கட்சிக்கு கட்டுப்பட்டு குளித்தலையில் நின்று வெற்றி பெற்றார். தேர்தல் நிதி பத்து லட்சம் ரூபாய் திரட்டப்போவதாக மேடையில் தன்னிச்சையாக அறிவித்தார்.
அண்ணாவுக்கே அதிர்ச்சி - மேடை யில் இருந்து இறங்கியபின், “என்னப்பா இப்படி அறிவித்துவிட்டாய்? பத்து லட்சம் ரூபாயை நம்மால் எப்படித் திரட்ட முடியும்? அதற்கு நாம் எங்கே போவது?” என வருந்தினாராம். கலைஞர் திரட்டிக் கொடுத்ததோ பதினொரு லட்சம்! காமராசர் தோற்கடிக்க நினைத்த 15 பேர்கள் கொண்ட ‘லிஸ்டில்’ அண்ணா உள்பட 14 பேர் காமராசரின் திட்டப்படி தோற்க, வெற்றி பெற்றதோ கலைஞர் ஒருவர் தான்.
மிசா காலத்தில் அதே காமராசரின் ஆதரவைப் பெற்றவரும் கலைஞர் தான். இந்தியாவெங்கும் மிசாவைக் கண்டு நடுங்கிக்கொண்டிருக்க, சினிமாக்களில் வாள் சுழற்றிய எம்.ஜி.ஆர் கூட மிசாவை ஆதரித்து தீர்மானம் போட்ட சூழலில் - தனியாளாக மெரினா கடற்கரையில் மிசாவுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர் கலைஞர். இந்திய அமைதிப் படையை வரவேற்கப் போகாதது அரசியல் சட்ட நடைமுறை மீறல் எனத் தெரிந்தும் அதை துணிச்சலாகச் செய்து ஆட்சியை இழந்தவர் கலைஞர்.
மக்கள் நீதிமன்றத்திற்கு முன்னோடியாக ஓய்வுபெற்ற நீதி பதிகளின் தலைமையில் ஊழல் வழக்குகளை விசாரிக்கலாம். அதில் இந்நாள் மேனாள் முதலமைச்சர்களை சேர்த்துக்கொள்ளலாம் என சட்ட மியற்றிவர் கலைஞர். கச்சத்தீவு விவ காரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிரான தீர்மானத்தை திமுக நிறைவேற்றியபோது அதிமுக புறக்கணித்தது.
ஆனால், பழியோ கலைஞரின் மேல்! இப்படி எத்தனையோ எவ் வளவோ - நமக்கு உண்மையாக கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பார்த்தால் கலைஞர் மீதான விமர்சனங்களில் 99% உண்மைக்கு புறம்பாகவோ அல்லது மறைக்கப்பட்டோதான் வைக்கப்பட்டிருக்கின்றனவே தவிர நேர்மையானதாக இல்லை என்பது தெரியும். கொஞ்சநாள் முன்பே திருமணம் ஆன தன் மகனை மிசாவில் கைது செய்ய காவல்துறை வீடுதேடி வந்திருக்கும்போது, “அவன் வீட்டில் இல்லை. வந்தவுடன் நானே அனுப்பி வைக்கிறேன்,” எனச் சொல்லிவிட்டு அதேபோல் மகன் வந்தவுடன் அவரை அனுப்பி வைக்க அவரால்தான் முடியும். இத்தனைக்கும் அப்போது கலைஞர் முதலமைச்சர். நடு இரவில் கைதாகி கையை உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு அதை காவலர் ஒருவர் முறுக்கியபோதும் ஊடகவியலாளர் களிடம், அந்தக் காவலர் பெயர் “முருகேசன் அல்லவா, அதான் முறுக்கிவிட்டார்” என அவரால் நகைச்சுவை ததும்ப பேச முடியும்.
தேர்தலில் தோல்வியுற்ற அடுத்த நாளே அதே புன்னகையுடன் பத்திரிகை யாளர்கள் முன்தோன்றி, எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட முடியும். மழையையும், வெயிலையும் அவரால் ஒன்றாகப் பார்க்க முடியும் - வெற்றியும், தோல்வியும் அவருக்கு இரவு பகல் போல இயல்பானதொன்றுதான். புறச்சூழல் எதுவுமே அவரை பாதிப்பதில்லை.
அந்த மூளையையோ, அந்த இதயத்தையோ எந்த பதற்றமும், கோபமும், எரிச்சலும் ஆட்கொண்டு யாருமே பார்த்ததில்லை.
அந்த மனிதன் ஒரு எக்கு கோட்டை. அதனால்தான் 94 வயது வரையிலும்,“நீயா நானா பார்க்கலாம்,” என காலத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார். காலத்தால் அழிக்கப்படும் காலத்தை எல்லாம் கலைஞர் எப்போதோ தாண்டிவிட்டார் என்பது காலத்துக்கும் தெரியும். கலைஞரை தலைவராக ஏற்பதும் ஏற்காததும் அவரவர் அரசியல் கொள்கைகளைப் பொறுத்தது. ஆனால் நம் வாழ்க்கையின் சோதனையான ஒவ்வொரு காலகட்டங் களிலும் அவர் வாழ்க் கையில் இருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமானவைகள் உண்டு.
இப்போது பேசிக்கொண்டிருப்பது கலைஞர் எனும் மனிதனைப் பற்றியல்ல, கலைஞர் எனும் உள்ளம் உறுதிபெற்ற ஒரு வரலாற்று நாயகனைப் பற்றி. கலைஞர் எனும் சின்னத்தைப் பற்றி. சிறுவயதில் சித்திரக்கதை வாசித்திருப்பவர்களுக்குத்தெரியும். சித்திரக்கதை நாயகனின் முத்திரை சின்னம் எப்படி எதிரிகளுக்கு உதறலை ஏற்படுத்துமோ, அதைப் போல கலைஞர் எனும் அந்தச் சின்னம், அந்த வார்த்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமூகநீதி எதிரிகளுக்கு உதறலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment