முதல்வர் கலைஞர் சார்பில் அவர்கள் சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த தீர்மானம் வருமாறு:-
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்ட முன்வடிவை முதல்வர் அவர்களே இந்த அவைக்கு வருகை தந்து முன்மொழிவதாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி இங்கே அவர் வரமுடியாவிட்டாலும் இந்த மன்றத்திற்கு முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு மடலை தன் கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறார்.
முதல்வர் கலைஞர் அவர்களின் கடித விவரம் வருமாறு:- மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
அவை முன்னவர் அருமைப் பேராசிரியர் அவர்களே. சட்டப் பேரவை அனைத்துக் கட்சி அன்பு உடன்பிறப்புகளே.
இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும் கூட டில்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் நங்கூரம் போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி!
ஒன்று உடல் வலி - பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி! கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு- அரசியல் மாச்சரியங்களை மீறி நீங்கள் காட்டும் அன்பு - இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது - தமிழ்த் தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது. அறிவியக்கம் - ஆன்மிகம் - நாத்தீகம் - ஆத்திகம் இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வும் நன் மனித நேயமும் வளர்த்திடுவோம்.
ஆரம்ப கால பொதுவுடைமைவாதி என்ற முறையிலும் பெரியார். அண்ணா, காமராஜர், அண்ணன் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒருவன் என்ற முறையிலும் - அடிமட்டத்துக்கெல்லாம் அடிமட்டமாகக் கிடந்து அவதியுறும் மனித ஜீவன்கள் அருந்ததி மக்கள், புதிய உலகம் - புரட்சியுகம் - காண்பதற்காக; இன்று அவையில் நான் முன் வைக்கும் சட்ட முன் வடிவை: உங்கள் ஆதரவு வழங்கி நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.
இங்ஙனம்
உங்கள் அன்பு நதியில் - என்றும் நனைந்திடவே விரும்பி வாழும்;
உடன்பிறப்பு - உங்களில் ஒருவன்
அன்பு மறவாத மு.கருணாநிதி 26.2.2009
ராமச்சந்திரா மருத்துவமனை. போரூர்.
இந்த மசோதாவை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, இச்சட்ட முன்வடிவின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி. காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டையன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பால பாரதி, ஜி.கோவிந்தசாமி. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பத்மாவதி, சிவபுண்ணியம். விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ரவிக்குமார். சட்டப் பேரவைத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் பேசினர்.
நிறைவாக அவ்விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவரது பதிலுரையை அடுத்து, சட்ட முன்வடிவு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. பேரவையில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும், சட்டமுன் வடிவை. வரவேற்று ஒருமனதாக நிறைவேற்றித் தந்தனர்.
- முரசொலி (27.2.2009)
No comments:
Post a Comment