பனையோலையைச் சிறுகத்தியால் சீவியபடியே பேசுகிறார் சுப்புத்தாய். வாய் பேசினாலும் கைகள் கவனத்துடன் இயங்குகின்றன. நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் பனையோலை, பூவாகவும் பெட்டியாகவும் உருவெடுக்கிறது. குடும்ப வறுமையைப் போக்கப் பனையோலைகளில் கலைப்பொருட்கள் செய்யத் தொடங்கியவர், தற்போது தேர்ந்த கைவினைக் கலைஞர். தன் கலைத் திறனுக்காகப் பல்வேறு அங்கீகாரங்களையும் விருதுகளையும் சுப்புத்தாய் பெற்றிருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புத்தாய். இவருடைய கணவர் செல்வராஜ் யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டதால் தொடர்ச்சியாக வேலைகளில் நீடிக்க முடியவில்லை. ஒரு மகன், இரு மகள்கள் இருக்கும் குடும்பத்தை நகர்த்த வேண்டுமே. அதற்காகத்தான் பனையோலையைக் கையில் எடுத்தார் சுப்புத்தாய். “எங்கள் குடும்பத் தொழிலே இதுதான். எங்கள் பாட்டி, அம்மா எல்லாம் பனையோலையில் பொருட்கள் செய்வதைச் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிராமப்புறப் பெண்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 1982இல் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். நானும் அதில் சேர்ந்து ஆறு மாதப் பயிற்சியை முடித்தேன். அடுத்த ஆண்டே மானூரில் பயிற்றுநராக மூன்று மாதங்கள் பணியாற்றினேன். மூன்று மாத ஒப்பந்தம் முடிந்த பிறகு வேலையும் முடிந்தது” என்றார்.
அரசு வழங்கும் கைவினைக் கலைஞர்களுக்கான அடையாள அட்டையைப் பெற்றிருப்பதால், அரசு சார்பில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு சுப்புத்தாய்க்குக் கிடைத்தது. அந்த வாய்ப்புகள் அனைத்தையும் தன் திறமையை மேம்படுத்திக்கொள்ளும் களமாக மாற்றினார்.
பனையோலை, அதைக் கிழிக்கப் பயன்படும் கத்தி இவை இரண்டுடன் கொஞ்சம் கற்பனையும்தான் இந்தத் தொழிலுக்கு மூலதனம். “நெல்லிக்காய் நிறத்தில் இருக்கும் குருத்தோலைதான் இதற்குத் தேவை. அவற்றை மொத்தமாக வாங்கி வெயிலில் காயவைத்துப் பதப்படுத்திய பிறகே பயன்படுத்துவோம் என்கிறார் சுப்புத்தாய்.
திருப்பூர், பாளையங்கோட்டை, நாகர்கோவில் என்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கி சென்னை வரைக்கும் நீண்டிருக்கிறது இவரது வாடிக்கையாளர்கள் பட்டியல். கோவையில் இருந்து கிடைத்திருக்கும் கல்யாணப் பெட்டி ஆர்டரைச் செய்து முடிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.
30 ரூபாயில் தொடங்கி அய்ந்தாயிரம் வரைக்கும் இவரிடம் பனையோலைப் பொருட்கள் கிடைக்கின்றன. மாவட்ட அறிவியல் மய்யம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் தனக்கு வழங்கப்பட்ட விருது குறித்து குறிப்பிட்டவர், கல்லூரிப் பெண்கள் பகுதிநேரமாகக்கூட இந்தக் கைவினைக் கலையில் ஈடுபடலாம் என்கிறார்.
No comments:
Post a Comment