சென்னை, ஜூன் 6 - சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், நாட்டிலேயே புதிய கணக்கு தொடங்கியதில் சிறந்த அஞ்சல் வட்டங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்று தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்தார்.
அஞ்சல் துறையின் சென்னைநகர மண்டலத்தில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களின் செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், மண்டல மேன்மை விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022-2023ஆம் ஆண்டில் மண்டல மேன்மை விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (5.6.2023) நடைபெற்றது. விழாவில், தலைமை விருந்தினராக, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் ஜெ.சாருகேசி கலந்து கொண்டார்.
அஞ்சல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி, அவர் பேசியதாவது: தமிழ்நாடு அஞ்சல் துறை கடந்த நிதியாண்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டால், 100 சதவீதத்துக்கு மேல் சாதனை இலக்கை எட்டியுள்ளோம். வழக்கமாக, நகர மண்டலத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சிறு சேமிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனால், கடந்த நிதியாண்டில் சிறுசேமிப்பு பிரிவில் சென்னை நகர மண்டலம் பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது.
2022-2023ஆம் நிதியாண்டில் சென்னை நகர மண்டலம் அஞ்சலக சிறுசேமிப்பு பிரிவின்கீழ், ரூ.127 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. வணிகத் துறையில் ரூ.101.53 கோடி, வணிகம் அல்லாத துறையில் ரூ.135.89 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் வரை, அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியின் கீழ் 59 லட்சம் நேரடிக் கணக்குகள் இருக்கின்றன. சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் 2022-2023ஆம் ஆண் டுக்கான புதிய கணக்குகளைத் தொடங்குவதில் நாட்டி லேயே சிறந்துவிளங்கும் அஞ்சல் துறை வட்டங்களில் தமிழகம் ஒன்றாகும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment