கருநாடகா உயர்நீதிமன்றம் ‘‘இறந்த பெண்ணின் உடலுடன் உடலுறவு கொள்பவர்களுக்குத் தண்டனை விதிப்பது குறித்த சரியான விதிமுறை எதுவும் இல்லை'' என்று கூறி, குற்றம் செய்த நபரையும் விடுவித்தது- அண்மையில்!
என்னே வெட்கக்கேடு!
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூ,றி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய போது, அந்தப் பெண்ணுக்கு செவ்வாய்த் தோஷம் இருப்பதாகக் கூறி, அந்த இளைஞர் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுப்புத் தெரிவித்துவிட்டார்
இதனால் இளைஞர்மீது இளம் பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், அவர் பிணை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த இளைஞர், ‘‘பெண்ணுக்கு செவ்வாய்த் தோஷம் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது'' எனக் கூறினார்.
அப்போது பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘‘அந்தப் பெண்ணுக்கு செவ்வாய்த் தோஷம் கிடையாது'' என வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதி பிரிஜ்ராஜ் சிங், அப்பெண்ணுக்கு உண்மையிலேயே செவ்வாய்த் தோஷம் இருக்கிறதா என்பது குறித்துக் கண்டறிய லக்னோ பல்கலைக் கழகத்தின் ஜோதிடத் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான அறிக்கையை 10 நாள்களில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவு கவலைக்குரியது எனக்கூறி அதற்குத் தடை விதித்தது.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) கூறுகிறது. இங்கோ உயர்நீதிமன்ற நீதிபதி செவ்வாய்த் தோஷத்தை நம்புவதும், ஒரு பல்கலைக் கழகத்தில் ஜோதிடத் துறை இருப்பதும் மகாவெட்கக்கேடு!
- மயிலாடன்
No comments:
Post a Comment