அமெரிக்காவின் மேனாள் அதிபர் ஒபாமா இந்திய பிரதமருக்கு நினைவூட்டுகிறார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

அமெரிக்காவின் மேனாள் அதிபர் ஒபாமா இந்திய பிரதமருக்கு நினைவூட்டுகிறார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து ஏதென்ஸ் நகரத்தில் அளித்த பேட்டியில் “மக்களாட்சிக்கு விரோதமானவர்களும் தலைவர்கள் என்ற பெயரில் வருவார்கள், அவர்களோடு சிரித்துக்கொண்டு சந்திக்கவேண்டிய இக்கட்டான சூழல் அதிபராக இருக்கும் போது ஏற்படும்" என்று அமெரிக்க மேனாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். கிரீஸ் நாட்டில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு - பேட்டியளித்த அமெரிக்க மேனாள் அதிபர் பராக் ஒபாமா, தான் அதிபராக இருந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்துப் பேசியுள்ளார். ஏதென்சில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அய்ரோப்பாவைச் சேர்ந்த தலைவர்களை ஒபாமா சந்தித்து வருகிறார். அதேபோல மேனாள் அதிபர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஒரு வார காலத்தை ஒபாமா ஏதென்சில் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், தான் அதிபராக இருந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்துப் பேசியுள்ளார்.

அதாவது, "நான் அமெரிக்க அதிபராக இருந்த போது எதிர்கொண்ட சிக்கலான பல தருணங்களில் ஒன்று ஜனநாயக விரோதத் தலைவர்கள் மற்றும் சர்வாதிகாரி களுடனான சந்திப்புகளாகும். அதிபர் எனும் பொறுப்பு அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்துதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் தோழமையாக இருக்கும் சக்திகள் தனிப்பட்ட முறையில் எனக்கு அழுத்தங்களைக் கொடுக்கும். அதேபோல வெளியிலும் இது போன்று சிக்கல்கள் இருக்கும். சீனாவை எடுத்துக்கொண்டால், நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்ய வேண்டியிருந்தது. இதில் ஏராளமான பொருளாதார நலன்கள் இருக்கின்றன. இப்படியான தருணங்களில், அமெரிக்காவின் அதிபராக இருப்பவர்கள் ஏற்கெனவே வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும், அல்லது ஒத்துவராத விஷயங்களை எதிர்க்க வேண்டும்.

இதுவும் அதிபராக இருந்த காலத்தில் நான் எதிர்கொண்ட சவாலாகும். எங்கு எதை ஏற்க வேண்டும், எங்கு எதை எதிர்க்க வேண்டும் என்கிற புரிதல் அவசியமாகும். என்னைப் பொறுத்த அளவில், நான் குறிப்பிட்ட நடைமுறைகளைப் பற்றிதான் கவலைப்படுவேனே தவிர, அதன் மீதிருக்கும் கருத்துகளை பற்றி அல்ல. தற்போது அமெரிக்கா மட்டுமல்லாது, உலக நாடுகளின் ஜனநாயகங்களும் பலவீனமடைந்துள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல், அமெரிக்கா எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்" என்றார். தன்னுடைய பேட்டியில், இந்தியா மற்றும் மோடி வருகை குறித்து கூறிய அவர், "தற்போது அங்கு(இந்தியாவில்) உள்ள இசுலாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களை பாதுகாக்கவில்லை என்றால் இந்தியா என்ற ஒரு நாடு பிரிந்து போவதற்கான வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால் இதைத்தான் கூறியிருப்பேன்" என்று கூறினார்.

ஒபாமா அதிபராக இருந்த போது இந்தியா வருகை புரிந்தார். மும்பையில் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, "இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு - அந்த பன்முகத்தன்மைக்கு பங்கம் ஏற்படும் போது அது சிதைந்துவிடும், அப்படி ஒரு சூழலை இங்குள்ள ஆட்சியாளர்கள் ஏற்படுத்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார். 

அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் சுற்றுப் பயணம் செய்து கொண்டு இருக்கும் இந்தக் கால தருணத்தில், அமெரிக்காவின் மேனாள் அதிபர் ஒபாமா இப்படிக் கருத்துத் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் இடித்துச் சொல்லியும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் சிந்தனையிலோ மதவாத கண்ணோட்ட விபரீதமோ அவரை விட்டு அகலவில்லையே! இதனைக் கருத்தில் கொண்டுதான், இந்தியப் பிரதமர் அமெரிக்காவில் இருக்கும் இந்தக் கால கட்டத்தில் மறுபடியும் தாம் இடித்துச் சொன்னதை பராக் ஒபாமா நினைவுபடுத்தியுள்ளார்.

மோடி என்ன செய்வார் - அவரை இயக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ். என்னும் பார்ப்பனிய குருபீடம் ஆட்டி வைத்தால் ஆடித் தீர்க்க வேண்டியதுதானே!

மூலபலத்தை நோக்கிப் போரிட வேண்டிய கடமை ஜனநாயக - மதச்சார்பற்ற சக்திகளுக்குக் கண்டிப்பாகவே இருக்கிறது.

 

No comments:

Post a Comment