சமூகநீதியின் சின்னமாக தமிழ்நாட்டின் தலைநகரில் வி.பி.சிங் சிலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

சமூகநீதியின் சின்னமாக தமிழ்நாட்டின் தலைநகரில் வி.பி.சிங் சிலை!

முனைவர்  க.அன்பழகன்

மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக் குழு, திராவிடர் கழகம்

ஆண்டுதோறும் நாட்காட்டியில் 24 மணி நேரத்திற்கு ஒரு நாள் நகர்கிறது. ஆனால் அதில் சில நாட்கள் வரலாறாய் நிற்கிறது. அந்த நாட்களையே வரலாறு தனது கருவாகச் சுமந்து உலக வரலாற்றை ஈன்றெடுக்கிறது. அச்சிறப்புள்ள நாளில் ஒன்றாகத்தான் சமூகநீதியின் சின்னமாய் வரலாறு புகழ்பாடும் மாமனிதர் வி.பி.சிங் பிறந்த நாளாம் ஜூன் 25 சிறப்பு பெறுகிறது.

இந்திய ஒன்றியத்தின் 10ஆவது தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற வி.பி.சிங் அவர்கள்தான் கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் - பிறப்புரிமையாகிய சமூகநீதியை வழங்கிய சரித்திரத்திற்கு சொந்தக்காரர்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல் குழு பரிந்துரைத்த ஒன்றிய அரசில் 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி புது சரித்திரம் படைத்தவர். ஆம், சாதனையால் பதவி வரும் - பதவி நீளும் எனும் அரசியல் நடைமுறையில் சாதனையால் பதவியை இழந்த புதிய சரித்திரத்திற்குத் தலைமை ஏற்பவர். இதுபோன்ற நிலைக்காக ஆயிரம் முறை பதவிகளை  இழக்கலாம் என பதவி வெறி அரசியலுக்கு கல்லறை கட்டியவர். மக்கள் உரிமை காக்கும் மகத்தான பணியே - சாதனையே வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்று கட்டியங் கூறியவர்.

அவரது பிறந்த நாளுக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வி.பி.சிங் அவர்களின் சமூகநீதிக்கான சாதனைகளைப் பாராட்டும் வகையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், தமிழ்நாடு அரசின் சார்பில் முழு உருவச் சிலை நிறுவப்படும் என்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியிருப்பது, வி.பி.சிங் அவர்களது பிறந்த நாளில் நாடே மகிழ்ச்சியுடன் எண்ணிப் பார்க்கும் பெருமைக்குரியது என்றால் அது மிகையாகாது.

மேனாள் தலைமை அமைச்சர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களுக்கு சிலை நிறுவுவதற்கு நமது நன்றியை தெரிவிப்பதோடு, அவர் ஆற்றிய அச்சாதனையின் விளைவு - இன்று நாம் காணும் வியத்தகு முன்னேற்ற வாழ்வு - அதன் சிறப்பு பற்றி இளைஞர்கள், வருங்கால நாட்டின் அங்கங்கள் தேவையான அளவிற்கு புரிந்துகொள்ள வேண்டியது என்பது மிக மிக முக்கியமானது என்ற நோக்கில் அவரது பிறந்த நாள் சிந்தனையாக அவைகளை அசைபோட - சிந்தனையில் தேக்கிட வேண்டியுள்ளது.

இந்திய ஒன்றியத்தில் முதன்முதலாக சமூகநீதியை நிலைநாட்ட சட்டப்படி ஆணையிட்ட வி.பி.சிங் அவர்களுக்கு முழு உருவச் சிலை சமூகநீதி பிறந்திட்ட தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்.

உத்தரப்பிரதேசத்தில் பிறந்திட்டவருக்கு தமிழ்நாட்டின் தலைநகரத்தில் கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கும் சிலை அமைய இருக்கிறது - தமிழ்நாடு அரசு அமைக்க இருக்கிறது.

மராட்டியத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராய் - தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு இடஒதுக்கீடு தரும் சட்டத்தை உருவாக்கிய ‘அண்ணல்’ டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பிறந்து, இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்குப் போராடிய காந்தியாருக்கு, விடுதலை பெற்ற இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் எனும் மாறாப் புகழைப் பெற்றுள்ள காஷ்மீரை தாயமாகக் கொண்ட நேரு பெருமகனாருக்கு, வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்கள் எனும் பட்டியல் வழி இன்னும் பல வெளி மாநிலத் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பிறந்து தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த கால்டுவெல் போன்ற வெளிநாட்டினர்க்கும் தமிழ்நாட்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதைப்போல தமிழ்நாட்டில் தெருக்களுக்கும், கட்டடங்களுக்கும் நன்றி காட்டும் முகத்தான் பலரது பெயர்கள் சூட்டப்பட்டு அவர்களது புகழ் நிலைத்திட நினைவுச் சின்னங்கள் பல பொறிக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் போல வி.பி.சிங் அவர்களின் சிலையும் ஒன்று என்று கூறிட முடியாத - ஒரு வரலாற்றுப் பின்னணிக்கு உரியது. இதை மற்றவர்களோடு ஒப்பிட -அனைதிற்கும் உயரத்தில் வைக்கப்பட வேண்டிய நினைவுச் சின்னம்தான் வி.பி.சிங் அவர்கள் சிலை.

சமூகநீதியின் சின்னமாகப் போற்றப்படும் வி.பி.சிங் அவர்களின் சாதனை - மற்றவற்றிலிருந்து பெரும் வேறுபாட்டிற்கும் - ஆய்விற்கும் உரியது.

இன்றைய அறிவியல் உலகில் மனிதன் தோற்றம் - மொழித் தோற்றம் - நாகரிக தோற்றம் - கண்டுபிடிப்புகள் என பல கூறுகளைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள் - முடிவின்றி வந்து கொண்டேயிருக்கிறது.

திராவிடர்கள் - ஆதித் தமிழர்கள் தோன்றியது 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருக்க வேண்டும் என்ற கருத்து இன்று உறுதியாகிறது. கீழடியில் நடைபெற்று வரும் தற்கால ஆய்வும், வருங்கால ஆய்வுகளாலும் இந்த கால அளவுகள் மேலும் உயரத்ததான் வழி இருக்கிறது.

தொன்மைக்குரிய இந்த திராவிடர் இனம் - ஆரிய வருகைக்குப் பின், அதாவது 3,750 ஆண்டுகளுக்கு முன்பே ஆரிய வருகையும், பண்பாட்டுப் படையெடுப்பும், பார்ப்பன பண்பாட்டுச் சீரழிவும், கடவுள், மத, புராண, இதிகாசப் புரட்டுகளும் - ஓங்கி வளர்ந்திருந்த திராவிடர் இனத்தை உருத்தெரியாமல் ஆக்கும் பணியில், ஆரியர்கள் பகுதி அளவு வெற்றி பெற்று படிப்படியாக அடிமைகொண்டு ஆதிக்கத்தை முழுமையாகப் பெற்றிட்ட நிலையில் ஏற்பட்ட உச்சபட்ச தாக்கம் - கல்வியறிவு இல்லாமலும், சமத்துவம் நிலையாமலும், ஜாதிக் கொடுமைகள் தாண்டவமாடவும், வந்தேறிகள் மண்ணின் மக்களை குதிரையாக்கி சவாரி செய்யவும், உதிரி எண்ணிக்கை எதிரியைக் கண்டு திராவிடர்கள் கைகட்டி நிற்கவும், உடல் வளைத்து வணங்கவும் ஆன அடிமைகள் - வேற்று நாட்டு வரலாற்றில் இல்லை எனும் நிலை உருவானது.

பார்த்தால் பாவம் - தொட்டால் தீட்டு

படிக்கக் கூடாது - தெருவில் நடக்கக் கூடாது

செருப்பு அணியக் கூடாது - குடை பிடிக்கக் கூடாது

துண்டு போடக் கூடாது - ரவிக்கை அணியக் கூடாது

படிப்பதை கேட்டால் நாக்கை அறுக்க வேண்டும்

உழைக்க வேண்டும் - ஊதியம் கிடையாது

எந்தப் பொருளும் சொந்தம் கிடையாது

பார்ப்பான் எடுத்துக்கொண்டால் கேட்கக் கூடாது

பார்ப்பனர் சூத்திரனைக் கொன்றால் சிகைச் சேதம்

சூத்திரன் பர்ப்பானைக் கொன்றால் சிரச்சேதம்

இன்றும் பல்லாயிரம் மனித நேயத்திற்கு எதிரான கொடுமைகள் - அநியாயங்கள் - ஏற்க முடியாத அவலங்கள் - சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த மக்கள்தான் திராவிடர்கள். இந்த அடக்கு முறையை கையாண்டவர்கள்தான் ஆரியர்கள்.

இக்கொடுமைகளால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இழந்துவிட்ட உரிமையால் கல்வி அறிவு இல்லாதிருந்த மக்களுக்கு ஆங்கிலேயர்கள் கல்வியை காட்டினார்கள். வெளிநாட்டுக் கிறித்துவர்கள் கொஞ்சம் கல்வியை வெகுசில இடங்களில் வெகு சிலருக்கு தந்தார்கள்.

சென்னை ராஜதானியில்தான் நீதிக்கட்சி ஆட்சி - தந்தை பெரியார் ஆதரித்த கட்சி - கல்விக் கூடங்கள் திறந்தது. மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது. 1928 முதல் வகுப்புவாரி - ஜாதிவாரி உரிமையான இடஒதுக்கீடு தரப்பட முதன்முதல் ஆணையிட்டது. அதன்பின் இச்சமூகநீதி வளர்ந்து வந்த நிலையில் 47% ஆக விடுதலைக்கு முன்பு வரை 41%ஆக இருந்த நிலையில் இந்தியா விடுதலை பெற்ற பின்பு புதிய குடியரசு சட்டப்படி வகுப்புரிமை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்தது. வழக்கு போட்டவர் செண்பகம் துரைராஜ். இவர் மருத்துவம் படிக்க மனு போடாமலேயே இடம் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மனுபோட்டார். மற்றொருவர் சீனுவாசன். இவரும் அப்படியே.

அதன்பின்பு தந்தை பெரியார் மிகப் பெரும் போராட்டம் நடத்தி முதல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு மீண்டும் இடஒதுக்கீடு உயிர்பெற்று தொடர்கிறது.

இடையில் பல தடைகள் -  பொருளாதார அளவுகோல் எனும் சூழ்ச்சிகள் பல நடந்தாலும் தொடர்ந்து அந்தத் தடைகள் எல்லாம் தகர்க்கப்பட்டு, நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு வளர்ந்து இன்று தமிழ்நாடு அரசு அளவில் கல்வி வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சமூகநீதி தொடங்கியது தமிழ்நாட்டில் (சென்னை ராஜதானியில்) சமூகநீதி அதிக அளவில் வழங்கிடும் முதல் மாநிலம் தமிழ்நாடு. இன்று 50 விழுக்காட்டிற்கும் மேல் இடஒதுக்கீடு தரலாம் என்ற சட்டப் பாதுகாப்பு உள்ள மாநிலமும் தமிழ்நாடு மட்டும்தான்.

1928இல் தொடங்கி மாநிலத்தில் இடஒதுக்கீடு இன்று 69%ஆக வளர்ந்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசில் தாழ்த்தப்பட்ட - பழங்குடி மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு, விடுதலை பெற்றதற்குப் பின்பிருந்து கீழ்க்கண்ட விழுக்காடு அடிப்படையில் (15+7.5=22.5) தொடர்ந்து இருந்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு அறவே இல்லாதிருந்தது.

இந்திய ஒன்றியத்தில் கல்வி - வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (ளிஙிசி) 27 விழுக்காடு வழங்கி முதன்முதலில் உத்தரவிட்டவர் நமது மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் ஆவார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இழந்திட்ட உரிமையை - கல்வி வேலைவாய்ப்பில் இந்திய ஒன்றிய அரசில் விடுதலைக்குப் பின்பும் கிடைக்காத அந்த பெரு வாய்ப்பை, 1953லிருந்து - பல தடைகளைத் தாண்டி வந்து - 1980 முதல் 1989 வரை மரணக்குழிக்கு போயிருந்த மண்டல் பரிந்துரையை- கேட்பாராற்றுக் கிடந்த பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை சாசனத்தை -  கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகையில் 52% மக்களுக்கான சமூகநீதியை தனது ஆட்சியில் வி.பி.சிங் நிறைவேற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்திட்ட அந்தத் தவைனுக்கு - கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைமகனுக்கு சமூகநீதியின் பிறப்பிடம் தமிழ்நாட்டில் சிலை வைப்பதைவிட வேறு பொருத்தம் என்ன இருக்கிறது?

மாநிலங்களவையில் மண்டல் பரிந்துரை அமலாக்கப்படும் அறிவிப்பை செய்திட்ட மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பெரியார் - அம்பேத்கர் - ராம்மனோகர் லோகியா பெயரை நினைவு கூர்ந்து - அப்பெருமக்களின் தியாகங்களைப் போற்றி அவர்களின் இலட்சியக் கனவு நிறைவேற்றப்படுகிறது என்றாரே வி.பி.சிங். அந்த வரலாற்று நாயகருக்கு - பெரியார் மண்ணில் - சுயமரியாதை பூமியில் - சமூகநீதியின் ஆணிவேர் பதிந்திருக்கும் மண்ணில் சிலை வைப்பதை விட வேறு பெருமை என்ன இருக்கிறது?

சமூகநீதிக்கான நீதிக்கட்சி தொடங்கி - அதன் இன்றைய ஆகப் பெரும் நீட்சியாகக் காட்சியளிக்கும் - கடமையாற்றும் - காலத்தால் சோராது சமர் செய்யும் தி.மு.க.வின் தலைவர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களால் புகழ்ந்துரைக்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிக்கான மண்டல் பரிந்துரையை நிறைவேற்றி, புதிய வரலாறு படைக்கும் இத்தருணத்தில், பல கோடி மக்களின் சமூகநீதிக்கான மண்டல் ஆணையத்தின் தோற்றம் முதல் வெற்றி ஏற்றம் வரையிலான கடந்து வந்த பாதையை ஆய்ந்தறிவது மிக மிக முக்கியமானதாகும். தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் வி.பி.சிங் அவர்களுக்கு  ஒரு நினைவுச் சின்னம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஏற்கெனவே நினைவூட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் தங்கள் ஆண்டாண்டுக் காலத்திற்கும் வி.பி.சிங் அவர்களுக்கு நன்றிக்குரியவர்கள் ஆவார்கள்.

இந்திய ஒன்றியத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு பரிந்துரைத்த மண்டல குழுவின் தோற்றமும் - செயல்பாடும் - ஆணையத்தின் முடிவும் - முடிவுக்கு விடிவு ஏற்பட கொடுத்திட்ட விலையும் - குறிப்பாக திராவிடர் கழகமும் அதன் தலைவராக இன்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொடர் முயற்சிகளும் ஒரு தனி வரலாறாகும்.

மண்டல் குழு பரிந்துரை ஒன்றிய அரசின் சமூகநீதி வரலாற்றின் தொடக்கத்தை உருவாக்கிய பயணத்தின் பாதையை இப்போது பின்னோக்கிப் பார்ப்போம். அப்போதுதான் மண்டலின் உழைப்பும், வி.பி.சிங் அவர்களின் சாதனை மகுடமும் - அதற்கு சலியாது போரிட்ட சலிப்பறியாத சரித்திரத்தின் இலக்கணமாய் நமக்குக் கிடைத்துள்ள அளப்பரிய போராளி - அய்யா பெரியாரின் சமூகநீதியை விரல் நுனியில் வைத்திருக்கும் வியத்தகு மனிதர் - தமிழர் தலைவரின் நன்றிபாராத் தொண்டின் இமாலய வெற்றியும் உலகிற்கு தெரிய வரும்.

இந்திய ஒன்றியத்தின் அரசியல் பணிகளில் சமூகநீதியை நிலைநாட்ட பிரதமர் நேரு பிரதமராக இருந்தபோது காகாகலேல்கர் ஆணையம் 1953 ஜனவரி 29இல் நியமிக்கப்பட்டது. 30.03.1955இல் பரிந்துரை அறிக்கையைத் தந்தது. கிடப்பில் போடப்பட்டு செயலிழந்து போனது. இவர் பார்ப்பனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

பிறகு, 01.01.1979இல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது பி.பி.மண்டல் தலைமையில் அய்ந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. திரு.மண்டல் வழக்குரைஞர் - பீகாரின் மேனாள் முதலமைச்சர் - பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்.

இக்குழு இந்திய ஒன்றியமெங்கும் பயணம் செய்து 405 மாவட்டங்களில் தரவுகளை சேகரித்தது.

முதலமைச்சர்கள் - சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மாநில, ஒன்றிய அமைச்சர்கள் - நீதியரசர்கள் - கல்வியாளர்கள் - அரசியல் கட்சித் தலைவர்கள் - பொது அமைப்பினர் என பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து பரிந்துரையை 31.12.1980இல் அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டியிடம் வழங்கியது.

குடியரசுத் தலைவரிடம் அறிக்கை தருவதற்கு முன்பு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மண்டல் குழுவினரை வழியனுப்பும் விழாவில் ஏற்புரையாற்றிய பி.பி.மண்டல் அவர்கள் நான் எனது பணியை ஆணைய உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நிறைவு செய்து விரைவில் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க உள்ளேன். இந்தப் பரிந்துரையை நாங்கள் கொடுப்பதால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கிடைக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. இந்த அறிக்கை உயிர் பெற்று - பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றும் ஒன்றிய அரசின் ஆணையாக வரவேண்டும் என்றால், அது ஒருவரால்தான் முடியும். அவர்தான் இங்கே எங்களை வழிநடத்தி தலைமையேற்று ஆணையத்திற்கு தேவையான ஆதாரங்களை அள்ளிக் கொடுத்த - பெரியாரின் சீடர் - தலைவர் வீரமணி ஒருவரால்தான் முடியும். அவரை நம்பியே நாங்கள் இதை ஒப்படைக்க உள்ளோம் என்று உணர்ச்சி கொப்பளிக்க ஆணையத்தின் தலைவர் பி.பி.மண்டல் உரையாற்றினார்.

அவர் வைத்த நம்பிக்கை எவ்வளவு துல்லியமானது என்பதை நாடு உணரும் வகையில் அறிக்கை குடியரசுத் தலைவரிடம் தரப்பட்ட 18 நாளிலேயே 19.01.1981 திருச்சியில் திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூடி மண்டல் குழு பரிந்துரையை உடன் நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும். தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வெகு விரைவாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று தமிழர் தலைவரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடும் போராட்டங்கள் பல நடத்திய பிறகு அன்றைய இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் 30.04.1982இல் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் நாடாளுமன்றத்தில் மண்டல் பரிந்துரையை தாக்கல் செய்தார்.

அதன்பின் 1990ஆம் ஆண்டின் தொடக்கம் வரை பூட்டப்பட்ட பெட்டிக்குள் பரிந்துரைகள் புதைந்திருந்தன. இந்நிலையிலிருந்து மாற்றங்கொண்டு வந்து - நடைமுறைப்படுத்திட திராவிடர் கழகத்தின் சார்பில் 16 போராட்டங்கள் - 42 மாநாடுகள் நாடெங்கும் நடத்தப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மாநாடுகள், போராட்டங்கள், கருத்தரங்குகள், துண்டுப் பிரசுரங்கள் - சிறு நூல்கள் வெளியிடல் என பலவிதப் பணிகள் மூலம் களம் உருவானது.

அய்ந்து இலட்சம் பேர்களிடம் கையொப்பம் பெற்று அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர்களாக இருந்த ஜெயில்சிங் அவர்களை மூன்று முறையும் - பட்டுக்கோட்டை வெங்கட்ராமனை இரு முறையும் ஆசிரியர் வீரமணி சந்தித்து நடைமுறைப்படுத்திட கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் சட்டமன்றத்தில் தீர்¬மானம் நிறைவேற்றி வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

பிரதமராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 05.08.1990 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர், வி.பி.சிங் அவர்களுக்கு தந்தி கொடுத்தார்.

விடிவு பிறந்தது

07.08.1990 அன்று மண்டல் பரிந்துரையை வி.பி.சிங் ஏற்று ஆணை வெளியிட்டார். இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டுவர வி.பி.சிங் அவர்களிடம் தமிழர் தலைவர்                                                                                                       பல்வேறு முறை கேட்டுக் கொண்டார். பிரதமராக ஆவதற்கு முன்பே அவரோடு இணைந்து மண்டல் பரிந்துரை நிறைவேற பல மாநாடுகளில் முழங்கி இருக்கிறார். நிறைவாக 48 மணி நேரத்திற்கு முன்பு வரை தந்தி கொடுத்து தமிழர் தலைவர் வலியுறுத்தினார்.

வாராது வந்த மாமணியாய் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்கிய வி.பி.சிங் போட்ட ஆணையை எதிர்த்து வழக்கு போடப்பட்டு 01.10.1990இல் தடை விதித்தது. 16.11.1992இல் உச்சநீதிமன்றத்தால் ஒன்பது பேர் கொண்ட நீதிபதி அமர்வு மண்டல் பரிந்துரையை சட்டமாக்கியது செல்லும் என்று தீர்ப்பினை வெளியிட்டது.

மண்டல் பரிந்துரை சட்டமான பிறகு பா.ஜ.க. வி.பி.சிங் அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. ராமஜென்ம பூமி பிரச்சினையைக் கையில் எடுத்தது. மண்டலா? கமண்டலா? என்ற களம் உருவானது. நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் வி.பி.சிங். வாக்கெடுப்பில் நான் தோற்பது உறுதி. ஆனாலும், மண்டலுக்கு எதிரி - சமூகநீதிக்கு எதிரி - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரி யார் என்று மக்களுக்கு அடையாளங்காட்ட - நாட்டுக்கு அவர்களின் முகத்திரையைக் கிழித்து முழுத் தோற்றத்தைக் காட்ட வாக்கெடுப்பு நடத்துகிறேன் என்றார்.

தோற்பது கண்டு நான் அஞ்சவில்லை. சமூகநீதிக்காக - நாட்டு மக்களுக்காக எனது ஆட்சியை ஒரு முறை அல்ல ஆயிரம் முறை இழக்கத் தயார் என்ற கூறி தனது ஆட்சியை இழந்து மகிழ்ச்சியாக நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.

நாட்டின் உயர்ந்த பதவியான பிரதமர் பதவியை இழந்தோர் வாடிய முகத்தோடும் - வழியும் துயரத்தோடும் வெளியேறியதைப் பார்த்த நாடாளுமன்றம் - முதன்முதலாக பதவியை இலட்சியத்திற்காக துறந்து சிரித்த முகத்தோடு சிங்கம் ஒன்று செம்மாந்து நடந்து வந்த காட்சியைக் கண்டது - நாட்டு மக்கள் துயரக் கண்ணீர் சிந்தினர்.

ஆட்சியை இழந்தாலும் தான் போட்ட சட்டம் நிறைவேறி முதல் பிற்படுத்தப்பட்டவர் ஒன்றிய அரசில் பணியில் அமர்த்தப்பட்ட பின்புதான் டில்லிக்கு வருவேன் என சூளுரைத்து சொந்த மாநிலமான உ.பி.க்கு வந்துவிட்டார்.

உச்சநீதிமன்றம் 16.11.1992இல் வி.பி.சிங் போட்ட ஆணை செல்லும் என்று தீர்ப்பளித்த பின் 1993இல் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் உத்தரவிட ஆந்திராவைச் சேர்ந்த இராஜேந்திர ஆசாரி என்ற பெயர் கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் முதல் ஆணையைப் பெற்று பணியில் அமர்த்தப்பட்டார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாய் மண்டல் பரிந்துரைப்படி பதவியேற்ற பின் டில்லி வருவேன் என்று சபதமிட்டிருந்த வி.பி.சிங் முதன்முதல் பணியேற்ற இராஜேந்திர சிங்கை சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ச்சி பொங்க - வெற்றிக் களிப்புடன் புதுடில்லியில் கால் வைத்தார்.

சமூகநீதி வரலாற்றில் இவரது சாதனைகள் - சவால்கள் அனைத்தும் முன்போ பின்போ ஒருவரால் வெல்லமுடியாத சரித்திரம் என்ற கல்வெட்டு செய்திக்கு உரிமையாளர் வி.பி.சிங் என்றால் மிகையாகாது.

திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும்போது, “நான் வீரமணியைப் பார்க்கின்ற போது சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன்” என்றார்.

வி.பி.சிங் அவர்கள் மண்டல் அறிக்கையை நிறைவேற்றி சாதனை படைத்து, சென்னையில் திராவிடர் கழக மாநாட்டில் பங்கேற்றபோது, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வி.பி.சிங் அவர்களுக்குப் பெரியாருக்கு அணிவித்த சிறப்புமிகு சால்வையை அணிவித்தார்.

பெரியாருக்கு அணிவித்த சால்வையை வீரமணி எனக்கு அணிவித்து பெருமை சேர்த்துள்ளார். இச்சால்வையை பிரதமர் பதவியை விட பெரிதாகக் கருதுகிறேன். நிறைந்த இப்பரிசை என் வாழ்நாளெல்லாம் பாதுகாப்பேன் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

மண்டல் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தபோது பெரியாரை நினைவு கூர்ந்து பேசிய வி.பி.சிங் அவர்கள், டில்லியில் பெரியார் மய்யம் பா.ஜ.க. அரசின் வெஞ்சினத்தால் புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கியபேது, அதைக் கேள்விப்பட்டு, உ.பி.யில் இருந்த வி.பி.சிங் கடுங்கோபங்கொண்டு பேசினார். நான் அன்று டில்லியில் இருந்திருந்தால் என்னைக் கொன்றுவிட்டுத்தான் பெரியார் மன்றத்தை புல்டோசர் இடித்திருக்கும் என்றார்.

இந்த அளவிற்கு பெரியார் மீதும் - பெரியார் இலட்சியத்தின் மீதும் பெரியாரின் சமூகநீதிக் கொள்கையின் மீதும் அளவிலாப் பற்றும் - ஆழ்ந்த பற்றும் - ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட சமுகநீதியின் சின்னமாய் சரித்திம் படைத்திட்ட, வரலாறாய் வாழும் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களைப் பாராட்டி - அவரது சமூகநீதிக்கான தொண்டுக்கு நன்றி காட்டும் வகையில் தமிழ்நாட்டில் அவரின் முழு உருவச் சிலையை தமிழ்நாடு அரசு அமைப்பது அரசின் கடமை - ஆட்சிக்குப் பெருமை - தமிழ்நாடு வி.பி.சிங் அவர்களுக்கு உரிமை படைத்த மண் - உணர்வூட்டிய மண் - இம்மண்ணில் நிறுவப்படும் சிலை - மன்னர் குடும்பத்தில் பிறந்து , சாமான்ய மக்கள் வெள்ளத்தில் வாழ்ந்திட்ட ஒப்பற்ற தலைவரின் சிலை என உலகம் அறியப்படும் சிலையாக நிலை பெறட்டும்.

அடுத்த ஆண்டு 2024 - ஜூன் 25 அன்று மாமனிதர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாளில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் - தமிழர் தலைவர் ஆசிரியர் - சமூகநீதித் தத்துவச் சுடர் ஏந்திடும் பல்லாயிரக்கணக்கானோர் - வி.பி.சிங் அவர்களின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் பிறந்த நாளாக அமைய உள்ளதை எண்ணி அந்த நாளை வரவேற்கக் காத்திருப்போம்.

வாழ்க மாமனிதர் வி.பி.சிங்!

வெல்க சமூகநீதித் தத்துவம்!!

No comments:

Post a Comment