அய்தராபாத், ஜூன் 11- தெலங்கானா மாநில முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ், அங்குள்ள மாஞ்சேரியலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்குவது பற்றியும், பொதுத்துறை நிறுவனமான சிங்கரேணியை மூழ்கடிப்பது குறித்தும் ஒன்றிய அரசு பேசி வருகிறது. இதன் பின்னால் நடைபெறுகிற கோல்மால்களைச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை. சிங்கரேணி உள்ளிட்ட கிழக்கு நிலக்கரி வயல்களிலும், மேற்கு நிலக்கரி வயல்களிலும், எல்லாவற்றையும் சேர்த்தால் நாட்டில் 36 ஆயிரத்து 100 கோடி டன் நிலக்கரி இருக்கிறது. இது மக்களுக்கு கிடைக்கக்கூடியது. இருப்புக்கு மத்தியில் நிலக்கரி இறக்குமதி.
ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது? நாட்டில் இவ்வளவு நிலக்கரி இருப்பு இருந்தும், அவர்கள் (ஒன்றிய அரசு) நாங்கள் மின்சாரத்தை, நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்குவோம், மின்சாரத்துறை தொடர்பான வேலைகளை முடிவுக்கு கொண்டு வருவோம், சிங்கரேணியை தனியார் துறை மயமாக்குவோம் என்கிறார்கள். இது என்ன கொள்கை? நாட்டில் என்ன நடந்து கொண் டிருக்கிறது? நாட்டில் இவ்வளவு நிலக்கரி இருந்தும், அது பயன்படுத்தப்படுவதிலலை. ஆஸ்திரேலியாவில் இருந் தும், இந்தோனேசியாவில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.
நாடெங்கும் அநீதி நடக்கிறது. இந்த அநீதியை எதிர்கொள்வதற்குத்தான் தெலங்கானா ராஷ்டிர சமிதியை, பாரத ராஷ்டிர சமிதியாக மாற்றினோம். இந்த போராட்டம் நாடெங்கும் எடுத்துச் செல்லப்படும். சிங்கரேணியை காங்கிரஸ் பாதி மூழ்கடித்துவிட்டது. இப்போது பா.ஜ.க. அதை முற்றிலுமாக மூழ்கடிக்கிறது. தெலங்கானாவில் அரசு 24 மணி நேரமும் மின்வினியோகம் செய்கிறது. ஆனால் பல மாநிலங்களிலும் மின்தட்டுப்பாடு உள்ளது. தேசிய தலைநகர் டில்லியில் கூட மின்வெட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment