வியப்பே வியக்கும் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 26, 2023

வியப்பே வியக்கும் தமிழர் தலைவர்

குஜராத் என்றாலே தமிழ்நாட்டுக்கு ஆபத்துதான் போலும். குஜராத் புயலால் தகித்துக் கொண்டிருந்தது தமிழ்நாடு. புயல் கரையை கடந்ததும் தூறலும் மழையும் தமிழ்நாட்டை குளிரச் செய்தது. புயல் வர வேண்டாம் என குஜராத்திகள் யாகம் நடத்துகிறார்கள். ஆனால் மத வெறி யால் ஏற்படும் அழிவை ஏனோ ரசிக்கிறார்கள். அறியாமை இருளால். 

இருளகன்று கதிரவன் மெல்ல முகம் காட்டிட தூறலும் தென்றலும் நிறைந்த ஜுன் 18 ஆம் நாள் காலைப் பொழுது 9:10 மணிக்கு திருச்சியில் இருந்து தனது ஊர்தியில் புறப்பட்டார் தமிழர் தலைவர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அடைந்த தலைவரின் ஊர்தி உளுந்தூர் பேட்டை நோக்கி விரைந்தது. தமிழர் தலைவரை வரவேற்க காலை 10:30 மணியிலிருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி அருகே தோழர்களும், தோழமைக் கட்சியினரும் பொதுமக்களும் திரண்ட வண்ணம் இருந்தனர்.

ஆரவார முழக்கங்களுடன் வரவேற்பு: காலை 11:20 மணி

தமிழர் தலைவர் அவர்களின் ஊர்தி உளுந்தூர்பேட்டை வந்தடைந்தது. ஆரவார முழக்கங்கள் -மகிழ்ச்சி - புன்னகை கூத்தாட திரண்டிருந்த தோழர்கள் சார்பில் விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்புராயன் தமிழர் தலைவருக்கு பய னாடை அணிவிக்க தொண்டர்கள் தலைவரை உற்சாகமாக வரவேற்றனர்.

கருஞ்சட்டைத் தோழர்களோடு கருமேகங்களும் சூழ்ந்து கொண்டன. தோழர்கள் தொண்டர்களின் அன்பில் திளைத்த ஆசிரியரை மழையும் வரவேற்றது. உளுந்தூர் பேட்டையில் இருந்து அரங்க.பரணிதரன் இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழாவிற்கு சேந்தநாடு விரைந்தார் தலைவர். அணிவகுப்பு போல் நீண்ட வரிசையில் தோழர்களின் ஊர்திகளும், மழையும் தலைவரின் ஊர்தியை பின் தொடர்ந்தன. சாலையின் மருங்கில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மக்கள் தலைவருக்கு வணக்கம் செலுத்தியும் கையசைத்தும் மகிழ்ந்தனர்.

வரவேற்ற கொடிகள் - காலை 11:40 மணி:

சேந்தநாடு சிற்றூரின் தொடக்கத்தில் இருந்து ஊரின் கடை கோடியில் அமைந்திருந்த மண்டபம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் கழகக் கொடிகளும் அய்யா, அம்மா, ஆசிரியர் படம் பொறித்த வண்ணொளி பதாகைகளும் தமிழர் தலைவர் அவர்களையும், தொண்டர்களையும் வரவேற்கும் வண்ண மாய் காட்சியளித்துக் கொண்டிருந்தன.

தலைவரின் ஊர்தி மண்டபத்து வாயிலில் நின்றது. மழையோ தொடர்ந்து கொண்டிருந்தது. தலைவருடன் புடை சூழ ஓட்டமும் நடையுமாய் பின் தொடர்ந்தனர் தோழர்கள். 11:45 மணிக்கு மேடை ஏறினார் ஆசிரியர்.

கழகப் பொறுப்பாளர்கள், மாற்றுக்கட்சித் தோழர்களின் வாழ்த்துரைக்குப் பின், 12:25  மணிக்கு பேசத் தொடங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுயமரியாதைச் சுடரொளி பண்ருட்டி வை.சு.அரங்கநாதன் சிறப்புகளை யும், அரங்க. பரணிதரனின் கழகப் பணிகளைப் பாராட்டியும், வாழ்விணையர்களான மருத்துவர்களையும் வாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தார். தலைவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களால் அங்கிருந்து கடந்து செல்ல முடியவில்லை. நேரமோ 40  நிமிடத்தை கடந்து கொண்டி ருந்த போது, வாழ்க்கை இணையேற்பு விழா உறுதிமொழி களை கூறி மணமக்களை வாழ்த்தி 

சேந்தநாட்டிலிருந்து 1:45 மணியளவில் விடை பெற்றார். மழையோ விடை கொடுக்காமல், தொண்டர்களைப் போல் பின்தொடர்ந்து வந்தது.

பெரியார் திடல் பணித் தோழர் கலைமணி இல்லத்தில் - பிற்பகல் 2:15 மணி

சேந்தநாட்டில் இருந்து பெரியார் திடல் பணித் தோழர் கலைமணி இல்லம் அமைந்துள்ள முடப்பள்ளிக்கு தலை வரின் ஊர்தி பயணித்தது. 

மழை நீரும் - சேறும் - சகதியும் நிறைந்த குறுகிய சாலை யினூடே கருணாநிதி - குணசுந்தரி இல்லத்தை அடைந்தார் தமிழர் தலைவர். ஏப்ரல் 30ஆம் தேதி தான் திறக்க வேண்டிய இல்லத்தை அன்று திறக்க முடியாத நிலையில் ஜூன் 18 அன்று பார்த்து மகிழ்ந்தார்.

முந்திரி - பலாக்காட்டு காற்றின் வருடலிடையே கலைமணி குடும்பத்தார் வழங்கிய தேநீரை பருகிவிட்டு, அங்கு குழுமியிருந்த மக்களிடையே ஒலி பெருக்கியில் உரையாற்றினார். அப்போது கலைமணி இல்லத்திற்கு வந்தது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு புறம் வருத்தமாக இருக்கிறது. ஏன் வருத்தப்படுகிறார் தலைவர் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது தலைவர் சட்டென கூறினார்.  இல்ல திறப்பு விழாவன்று கழகத் துணைத் தலை வர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், அன்றைய பொதுச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஒருநாள், பொதுச் செயலாளர் அன்புராஜ் வருகை தந்தது ஒரு நாள், இன்றைக்கு நான் வந்தது ஒரு நாள் என மூன்று  செலவுகள் இந்த எளியத் தோழருக்கு ஏற்பட்டுள்ளது. அதுதான் வருத்தமாக இருக் கிறது என்று கூறினார். உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்டார்.

மதிய உணவு : பிற்பகல் 3:15 மணி:

உளுந்தூர்பேட்டை விருந்தினர் மாளிகைக்கு 3:15 மணிக்கு வந்தடைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தலைவர் செல்வ.சக்திவேல் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை உண்டுவிட்டு, 3:45 மணிக்கு சற்று இளைப்பாறச் சென்றார். 

பின்னர், 4:10 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு வந்த கழகத் தோழர்களை சந்தித்து விட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள வழக்குரைஞர் தியாகராஜன் இல்லத்துக்குச் சென்று, கழகம் சார்ந்த வழக்குகள் தொடர்பான செய்திகளை அறிந்து கொண்டு , 10 மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடக்கும் ஆதிலட்சுமி மண்டபம் நோக்கி பயணித்தது தலைவரின் வாகனம்.

அரக்கர் இனத்தின் ஆவேசப் பெரும்புயலே வருக - நேரம் மாலை - 5:25

உளுந்தூர்பேட்டை சென்னை சாலையில் உள்ள ஆதிலட்சுமி மண்டபம் அருகே தலைவரின் ஊர்தி வந்து கொண்டிருந்தது. சாலையின் தொடக்கத்திலிருந்து, நிகழ்ச்சி நடைபெறும் மேடை வரை இருபுறமும் வரிசையாய் நின்ற தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க. அன்னை மணியம் மையார் வாழ்க. அரக்கர் இனத்தின் ஆவேசப் பெரும் புயலே வருக வாழ்க என முழக்கம் எழுப்பி, வணங்கி உற்சாகமாக வரவேற்றனர். தமிழர் தலைவர் அவர்கள் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தி  ஒலி முழக்கங்களி னூடே மேடையை அடைந்தார்  .

குழுமியிருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், புதுச்சேரி ,காரைக்கால், அரியலூர்  மற்றும் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்களின் சார்பில் அந்தந்த மாவட்டத் தலைவர்களும், தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும் தங்கள் கருத்துகளை வழங் கினர்.

கண்டிராத கலந்துரையாடல் : 

நேரம் 7 மணி  

இதே உளுந்தூர்பேட்டையில்  நான் சிறுவனாக இருந்த போது நடைபெற்ற கூட்டங்களில் கல்லாலும் மண்ணாலும் எங்களை அடித்தார்கள். அதற்கு பின்னால் அப்படி கல்லால் அடித்தவர்களே நான் தான் உங்களை கல்லால் அடித்தேன் என்று நாணி கூறியதோடு இயக்கத்தில் இணைந்து பணி யாற்றினார்கள்.  அப்படி கல்லாலும் மண்ணாலும் அடித்த இதே உளுந்தூர்பேட்டையில் இன்று கூடியிருக்கின்ற பொறுப்பாளர்களைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகி றேன். இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்களிலேயே  நான் கண்டிராத கலந்துரையாடல் கூட்டமாக, மனநிறை வைத் தரக்கூடிய கலந்துரையாடலாக உள்ளது. மேலும் இது என் சொந்த மாவட்டம் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்று கூறி 40 நிமிடங்கள் உரையாற்றினார். உரையாற்று கின்ற போது கொடி செடி, படி எனும் இலட்சியத்தை முழங்கிய தலைவர் இவை இல்லை என்றால்  நான் மடி வேன் என்று சொன்னபோது, தோழர்கள் எழுந்து நின்று அய்யா தாங்கள் இடும் பணிகளை செய்து முடிப்போம் என உறுதி கூறினர்.

உளுந்தூர்பேட்டை பகுதியில் 

1 நாள் தமிழர் தலைவர்

காலை ஒன்பது மணிக்கு திருச்சியில் தொடங்கிய பயணம் இரவு எட்டு மணி வரை ஓய்வின்றி உளுந்தூர்பேட்டையில் முடிவடைந்தது.

இதைத்தான் வள்ளுவர் தன் குறளில் ;

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.

அதாவது கலைஞரின் குறள் உரையில் : தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

ஆம், தமிழர்களின் இன்னலை களைந்து, எம்மினத்தை தாங்குகின்ற தூணாக விளங்குபவர் தான் தமிழர் தலைவர். ஆசிரியர் அவர்களோடு ஜூன்  18 ஆம் தேதி முழுவதும் இருந்தது பெரு மகிழ்ச்சி. அரிய வாய்ப்பு .

நிறைவாய் ஒரு தகவல் 

உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு நாள் தொண்டால் பொழுதழுந்த தலைவர் சென்னையில் 15-ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு, சோலையார் பேட்டைக்குச் சென்று அங்கு நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு, அங்கிருந்து கோவை செல்வதற்காக தொடர்வண்டி நிலையத்திற்கு வருகை தந்தார். இரவு 1 மணிக்கு வரவேண்டிய தொடர்வண்டி  1:45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இடைப்பட்ட நேரங்களில் தான் கொண்டு வந்த நூலை படித்துக் கொண்டிருந்தார்.

 16 ஆம் தேதி,  கோவையில்  மறைந்த மூன்று தோழர் களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத் தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், திமுக கூட்டணிக் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு மாலை 5:30 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்கள் இரவு 9:30 மணி அளவில் கூட்டத்தை முடித்துக் கொண்டு, சாலை மார்க்கமாக  திருச்சி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்திலேயே நின்று இரவு சிற்றுண்டியை உண்டு,   விடியற்காலை 3 மணிக்கு திருச்சி வந்தடைந்தார்.

17 ஆம் தேதி காலை 9 மணிக்கு திராவிடப் பொழில் இதழ் தொடர்பாக உலகளவிலான அறிஞர்கள் கலந்து கொண்ட காணொலிக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை வழங் கினார். பின்னர், திருச்சியில் நிர்வாகப் பணிகளை மேற் கொண்டார். 

18 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை நிகழ்வுகளை முடித் துக் கொண்டு சாலை மார்க்கமாகவே தஞ்சை வல்லத்திற்கு புறப்பட்டார். வல்லத்திற்கு செல்லும் வழியிலேயே உணவை முடித்துவிட்டு, இரவு 11:30 மணியளவில் வல்லத்தை அடைந்தார்.

19ஆம் தேதி காலை தஞ்சை வல்லத்தில் நிர்வாகப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு, பகல் 2 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்பட்டு கபிஸ்தலத்திற்கு 3 மணிக்கு வருகை தந்தார். அங்கு நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு, கல்வியாளர் தி.கணேசன் சிலை திறப்பு மற்றும் பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட  முப்பெரும் விழாக்களில் கலந்து கொண்டு உரையாற்றி அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு சென்னை நோக்கி சாலை மார்க்கமாக புறப்பட்டார். இரவு 9:30 மணிக்கு விக்கிரவாண்டியை அடைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் சரோஜா தண்டபாணி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரின் உடல் நலனை விசாரித்தார். விக்கிரவாண்டி திண்டிவனம் இடையே சாலையோரத்தில் இரவு 10.15 மணிக்கு இரவு உணவை முடித்த தமிழர் தலைவர்  இரவு 12.30 மணிக்கு இல்லத்திற்கு சென்றார். அவர் சென்று வந்த நிகழ்வுகளின் சுருக்கம் தான் இவை. உங்கள் மனக்கண்ணால் தலைவரின் உழைப்பைக் காணுங்கள். அதில் நமக்கோர் புத்துணர்ச்சி ஏற்படும்.

பொதுத் தொண்டு செய்பவர்களுக்கு நேரம் காலம் கிடையாது என அறிவாசான் தந்தை பெரியார் சொன்னது தமிழர் தலைவருக்காகத் தான் போலும்.

வியப்பே வியக்குமளவுக்கு 90  வயதிலும் தொண்டறம் தொடரும் தலைவா இன்னுமோர் 90 ஆண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க.

No comments:

Post a Comment