பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

பதிலடிப் பக்கம்

  (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

விஜயபாரதத்தின் வெண்டைக்காய்

விளக்கெண்ணெய்க் கட்டுரை

திருவள்ளுவர்           வைகுண்டர்

ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்‘ (23.6.2023) செங்கோலைப் பற்றி எழுத ஆரம்பித்து, இடையில் வைகுண்டரை இழுத்துக் குளிர் காயும்  ஆர்.எஸ்.எசுக்கு உரிய திருகுதாளத்தில் ஈடுபட்டதை நினைத்தால், இவர்கள் எப்பொழுதும் திருந்தப் போவ தில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதோ "விஜயபாரதம்" பேசுகிறது:

"அறம் என்பதன் சமஸ்கிருத சொல் தர்மம். தர்மம் என்றால் என்ன? 19 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர் ஐயா வைகுண்டர். அவரது திருநூல் அகிலத்திரட்டு. அன்று திரு விதாங்கூரில் மதமாற்றக் கொடுமை இருந்தது. அதன் பின்னால் சாதியக் கொடுமைகள் இருந்தன. அதற்கும் பின்னால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம் பெனியாரின் சூழ்ச்சியும் கொடுமையும் நிறைந்த வரிவசூல் தகிடுதத்தங்கள் இருந்தன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் திருநெல்வேலி கலெக் டரே ஐயா வைகுண்டரை கைது செய்ய வேண்டு மென்று திருவிதாங்கூர் அரசருக்கு அழுத்தம் அளித்தவன். அவனது அறிக்கையில் ஐயா வைகுண்டரின் இயக்கம் பிரிட்டிஷாரை பாரதத்தி லிருந்தே விரட்டி யடிக்க ஆயத்தமாவதாக சொல் லியிருக்கிறான். துரதிருஷ்டவசமாக இந்த தேசபக்த பரிமாணம் ஐயா வைகுண்டரின் வரலாற் றில் அதிகமாக பேசப்படுவதில்லை. ஐயா வைகுண் டரின் அகிலத் திரட்டில் அவர் தர்மத்தை இப்படி விவரிக்கிறார்: 'தாழக் கிடப்பவரை தற்காப்பதே தர்மம்'.

வலிமையற்றவர்களை குரலற்றவர்களை காப்பாற்ற வேண்டும். ஆனால் எப்படி காப்பாற்ற வேண்டும்? அவர்களை ஒருவர் தன்னை போலவே நினைந்து காப்பாற்ற வேண்டும்.நான் மேலானவன். நீ பரிதாபத்துக் குரியவன். எனக்கு வலிமை இருக்கிறது உனக்கு இல்லை எனவே நான் உன்னை காப்பாற்றுகிறேன் என்று காப் பாற்றக் கூடாது. நீயும் நானும் ஒன்று. ஒரே பிரம்மமே.உன்னிலும் என்னிலும் இருக்கிறது என்பதை உணர்ந்து வலிமையற்றவர்களை குரலற்றவர்களை காப்பாற்ற வேண்டும். குருஜி கோல்வல்கர் இதை இப்படி சொல்வார். சேவை செய்யும் போது நான் உதவுகிறேன் என்று செய்யக் கூடாது. இன்னலில் இருப்பவர்கள் அவர்கள் எந்த மதமோ எந்த இனமோ அவர்களை இறைவனே சேவை மூலம் தனக்கு வழிபாடு செய்ய நமக்கு ஒரு வாய்ப்பை அருளுகிறான் என்கிற உணர் வுடன் மட்டுமே சேவை செய்ய வேண்டும். அரசில் இருப்பவர்களுக்கும் அது சேவை என்கிற போது அவர்கள் குடிமக்களை தெய்வமாகவே எண்ண வேண்டும்."

உண்மையிலே வைகுண்டர் யார்? அவர் எப்படி எல்லாம் வேத மரபை மறுத்தார்? என்பதை எண்ண வேண்டும்!

வேத மரபை எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர் வைகுண்ட சாமிகள். கன்யாகுமரிக்கு அருகே பூவண்டன் தோப்பு எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ‘முடி சூடும் பெருமாள்’. ஆனால் அந்தக் காலத்தில் மன்னர்கள் அல்லது பார்ப்பன உயர்ஜாதியினர் வைத்துக் கொள் ளும் பெயர்களை ‘தாழ்ந்த’ ஜாதியினராக கருதப் பட்டவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே இப்பெயர் வைத்தமைக்காக பார்ப்பனர், உயர் ஜாதியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்ற உத்தரவிட்டனர். வேறு வழியின்றி பெற்றோர்கள், பெயரை ‘முத்துக்குட்டி’ என்று மாற்றினர்.

 1833இலிருந்து பொது வாழ்வில் இறங்கினார். தொடக்கத்தில் விஷ்ணு பக்தராக இருந்த இவர், தனது பெயரை ‘வைகுண்டர்’ என மாற்றிக் கொண்டார்.

குமரிப் பகுதி அப்போது திருவாங்கூர் சமஸ் தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. ஜாதி வெறியோடு ஆட்சி நடத்திய அரசர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினரை அடிமைகளாக நடத்தினர். அநியாயமாக வரி போட் டனர். மன்னனை எதிர்த்து துணிவோடு போராடினார் வைகுண்டர். 110 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாடார் சமூகம், அப்போது ‘தீண்டப்படாதவர்களாக’ கருதப்பட்டது. ஒரு நாடார், நம்பூதிரி பார்ப்பனரிட மிருந்து 36 அடி தூரத்திலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திலும் நின்றுதான் சந்திக்க வேண்டும். பொதுச் சாலையில் நடக்க உரிமை இல்லை.

 கோயில்களில் நுழையும் உரிமை இல்லை. கோயில்களுக்கு அருகே பள்ளிகள், அரசு அலுவலகங் கள் இருந்தால் அங்கேயும் போக முடியாது. குடை பிடிக்கவோ, செருப்பு அணியவோ முடியாது. பெண் கள் ‘ரவிக்கை’ அணியும் உரிமையை மறுத்தார்கள்.

 இந்தக் கொடுமைகளை எதிர்த்து களமிறங்கிய வைகுண்ட சாமிகள், மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த ‘சமத்துவ சங்கம்’ ஒன்றைத் தொடங்கினார். ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் அதில் உறுப்பினர்களானார்கள். ஊர் ஊராகச் சென்று வேத வைதிக மரபுகளுக்கு எதிராக சமத்துவக் கொள்கைகளை பரப்பினார். 

கன்யாகுமரி மாவட்டத்தில் ஊர் தோறும் தனது கொள்கைகளைப் பரப்பிட ‘நிழல்தாங்கல்’ என்ற நிறு வனத்தை உருவாக்கினார். இது வழிபாட்டுத் தலமாக வும், கல்வி நிலையமாகவும், வைகுண்ட சாமிகளின் கருத்துகளைப் பரப்பும் மய்யமாகவும் செயல்பட்டது.

கடவுளை சிலைகளுக்குள் அடைத்துவிட முடியாது என்று கூறிய அவர், தமது வழிபாட்டு முறையில் அர்ச்சகர்கள், உருவ வழிபாட்டை ஒதுக்கினார்.

 பேய்-பிசாசு-மாந்திரிக நம்பிக்கை - தமது மக்களிடையே தீவிரமாக பரவி இருந்ததை எதிர்த்தார். “பேயுமில்லை பிசாசுமில்லை, பில்லியின் வினை களில்லை” என்று கூறினார்.

 கோயிலுக்குள்ளே நாடார் சமூகத்தைவிட மறுத்த புரோகிதர்கள், அவர்களின் காணிக்கையை இழக்கத் தயாராக இல்லை. எனவே தொலைவில் நின்று காணிக்கைகளை வீசவேண்டும்; பதிலுக்கு புரோகிதப் பார்ப்பனர்கள் இலையில் கட்டிப் பிரசாதத்தைத் தூக்கி வீசுவார்கள். இந்த இழிவை எதிர்த்து கோயிலுக்கு காணிக்கை வழங்காதீர் என்று வைகுண்டசாமி பரப்புரை செய்தார்.

“காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ

வீணுக்குத் தேடு முதல் விருதாவில் போடாதுங்கோ”

- என்று காணிக்கைத் தருவதை ‘விருதா வேலை’ என்று பாமரர் மொழியில் எடுத்துச் சொன்னார்.

அந்தக் காலங்களில் ஒரு நாடார் சமூக இளைஞனுக்கு 16 வயதில் தலையில் தலைப்பாகைக் கட்டி கையில் பிச்சுவா கத்தி கொடுப்பார்கள். பல இடைநிலை ஜாதியினரிடம் இந்த வழக்கம் உண்டு. அதேபோல் குடும்பத் தலைவர் இறந்ததும் அவரது மகனுக்கு தலைப்பாகைக் கட்டுவார்கள். இதற்கு ‘உறுமால் கட்டு’ என்று பெயர். இடைக்காலத்தில் பார்ப்பனர்கள் உயர்ஜாதியினர் இந்த உரிமையை நாடார் சமூகத்துக்கு மறுத்தனர். சுமை தூக்கக்கூட தலைப்பாகை அணிய அனுமதிக்க வில்லை. ‘சும்மாடு’ எனும் பெயரில் வைக்கோலை மட்டும் தலையில் வைக்க அனுமதிக்கப்பட்டனர். வைகுண்டர் வெகுண் டெழுந்தார். தன்னை சந்திக்க வருவோர் தலைப்பாகை யுடன் தான் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். இப்போதும் அவரது இயக்கத்தினர் தலைப்பாகை அணிந்து வழிபடும் முறையை பின்பற்றுகிறார்கள்)

 ஒடுக்கப்பட்ட ஜாதியினர் ஓட்டு வீடு, மாடி வீடு கட்ட வேத புரோகித கூட்டம் அனுமதி மறுத்தது. வைகுண்ட சாமிகள் ஒரே திசையில் முன் கதவு வைத்த வீடுகளை அடுத்தடுத்து கட்டுமாறு கூறி, ‘சமதர்ம குடியிருப்பை’ உருவாக்கினார்.

 தனது சீடர்களை பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி, ‘தீண்டப்படாத’ ஜாதியினர் வீட்டில் உணவு அருந்த பணித்தார். தனது சொந்த ஊரில் அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தும் பொதுக் கிணற்றை வெட்டினார்.

 முகாம் நடத்தி, மக்களுக்கு சமத்துவ-வேத மறுப்பு கருத்துகளைப் பயிற்றுவித்தார். அங்கு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. ‘துவையல் பந்தி’ என்று அதற்குப் பெயர்.

 பார்ப்பனப் புரோகிதர்களையும் மன்னர்களையும் ஒரே நேரத்தில் துணிவுடன் எதிர்த்து நின்றவர். வைகுண்ட சாமிகள், “பிராமணர்களை பயம் காட்ட நாம் வருவோம்” என்று அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். புரோகிதத்தை ‘வேடம்’ என்றார். “பிராமண வேசம் போட பக்தன்மாரே நீங்கள் உண்டு” என்று துணிவுடன் கூறினார். 

 தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்களை துணிவாக ஜாதித் தடைகளை எதிர்த்து தோள் சேலை (ரவிக்கை) அணியுமாறு வற்புறுத்தினார். 

அவரது மறைவுக்குப் பிறகு இந்து, கிறிஸ்துவ நாடார் இரு பிரிவினர் இணைந்து, ‘தோள் சீலை’ உரிமைப் போராட்டத்தை நடத்தினர். 1859இல் நாடார் பெண்களுக்கு ‘தோள் சீலை’ அணியும் உரிமையை திருவிதாங்கூர் அரசு வழங்கியது. மக்களின் தொடர் போராட்டம் காரணமாக 1865இல் ஏனைய ஒடுக்கப் பட்ட ஜாதி பெண்களுக்கும் இந்த உரிமை கிடைத்தது.

உண்மை வரலாறு இப்படியாக இருக்க, சனாதன வாதி  ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ்.கோல்வால் கரையும் சனாதனத்தையும் சல்லி வேரோடு வீழ்த்த வீறு கொண்ட வைகுண்டரையும் முடிச்சுப் போடுவது போக்கிரித்தனம் என்பதைவிட - "பார்ப்பனத்தனம்" என்று பளிச்சென்று சொல்லி விடலாம்.

திருவள்ளுவர் கூறும் அறமும், சமஸ்கிருதத்தின் தர்மமும் ஒரே பொருள் கொண்டதாம்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அறம் எங்கே? பிறப்பின் அடிப்படையில் வர்ண தர்மம் பேசும் பார்ப்பன வேதத் தர்மம் எங்கே?

நடக்கவே முடியாதவனை நடராஜன் என்றும், பேசவே முடியாத ஒரு பெண்ணைத் தேன்மொழி என்றும், பார்வையிழந்தவனைக் கண்ணாயிரம் என்பதும் எவ்வளவுக் கேலியோ அதைவிட வெகு மோசம் தமிழர்களின் அறமும் - பா£ப்பனர்களின் தர்மமும் ஒன்றே என்பதாகும்.

மார்புச் சீலை அணியக்கூடாது என்று சட்டம் செய்தது திருவரங்கம் சமஸ்தான ஹிந்து ராஜ்யம்தானே. வெள்ளைக்காரனா அவ்வாறு சட்டம் போட்டான்.

எப்படியெல்லாம் திசை திருப்புகிறது இந்தத் திரிநூல் கூட்டம் - இதில் அவர்கள் ‘வல்லவர்கள்' என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம் - கொஞ்சம் ஒலியின் சுருதியைக் குறுக்கி நல்லவர் என்று ஆக்கி விடுவார்கள் - சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிம் என்று சொல்லவில்லையா?

கல்லையும், செம்பையும் காட்டி - ‘இது கடவுள்' - ‘விழுந்து கும்பிடு!' என்பதை ஏற்றுக் கொண்டவரல்லவர் வைகுண்டர்.

"தாழக் கிடப்பவரை தற்காப்பதே தர்மம்" என்று வைகுண்டர் கூறிய கருத்தை தன்னை அறியாமலேயே விஜயபாரதம் ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறது.

தாழக்கிடப்பது அவனுடைய கர்ம பலன் என்று கூறும் ஹிந்து சனாதனத்தோடு எப்படி வைகுண்டரை ஒப்பிட முடியும்.

உண்மையைச் சொன்னால் கடைசி வரை சுருதி பேதம் வராது. ஆனால் பொய்யைப் புளுகினால் கடைசி வரை அதைக் காப்பாற்றவே முடியாது என்பது உளவியல். ஆரியத்தின் அண்டப் புளுகுத்தன்மை அவ்வப்போது அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். விஜயபாரதங்களின் வெண்டைக்காய், விளக்கெண் ணெய் வழியும் கட்டுரையும் அதுதான்!

No comments:

Post a Comment