பட்டம் அளிப்பு நடைபெறாததால் ஒன்பது லட்சம் மாணவர்கள் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 9, 2023

பட்டம் அளிப்பு நடைபெறாததால் ஒன்பது லட்சம் மாணவர்கள் பாதிப்பு

ஆளுநரே காரணம் - அமைச்சர் க.பொன்முடி பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை, ஜுன் 9 அரசு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருப்பதற்கு ஆளுநரே முழுக் காரணம். பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு ஆளுநர் தேதி வழங்காததால் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, நேற்று (8.6.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் சிறப்பு விருந்தினர் ஒருவரை அழைத்து வருவார்.அதன்படி இதற்குமுன் தமிழ்நாட்டை சேர்ந்த மேனாள் துணைவேந்தர்கள் போன்ற கல்வியாளர்களை வைத்துதான் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

தற்போது ஆளுநர் வடஇந்திய பிரபலங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்களை வைத்து பட்டமளிப்பு விழா நடத்த விரும்புகிறார். ஒன்றிய அமைச்சர்கள் தேதி தருவதில் தாமதம் ஏற்படுவதால் விழா நடத்தாமல் உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலை.களிலும் யாருக்கும் பட்டம் வழங்கப்படவில்லை. அதாவது 2022-ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற 9 லட்சத்து 29,142 மாணவர்கள் பட்டம் பெற முடியவில்லை. இதனால் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடுத்தகட்டப் பணி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் அவசியமாகும். தற்போது சான்றிதழ் இல்லாததால் அவர்களும் தவிப்பில் உள்ளனர். எந்த விவகாரத்திலும் தமிழ்நாடு அரசின் ஆலோசனையை ஆளுநர் பெறுவது கிடையாது. பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருப்பதற்கு ஆளுநரே முழு காரணம். அவர் எப்போது தேதி கேட்டாலும் கொடுக்க தயாராக உள்ளோம். எனவே, மாணவர்கள் நலன்கருதி அனைத்து பல்கலைகளிலும் உடனடியாக பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் முன்வரவேண்டும்.

அதேபோல், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு விதிகளின்படி தேடல் குழுவை கடந்த அக்டோபரில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. ஆனால், விதிமுறையைமீறி பல்கலை. மானியக்குழு தரப்பில் இருந்து ஒருவரை உறுப்பினராக நியமிக்க ஆளுநர் கூறுகிறார். அது தவறு. இதனால் இதுவரை அதை கிடப்பில் வைத்துள்ளார். பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டிலும் தமிழ்நாடு சிறப்பாக திகழ்கிறது. ஆளுநருக்கு இது தெரியவில்லை எனில் எங்களிடம் விளக்கம் கேட்கலாம். இதில் அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment