திராவிடத்துத் தீரரான நம் கலைஞருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

திராவிடத்துத் தீரரான நம் கலைஞருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்!

* முத்தமிழ் அறிஞர் கலைஞருக்குத் தலைநகரில் சிலை எழுப்பவேண்டும் என்று தந்தை பெரியார் முன்வந்த பேறு யாருக்குக் கிடைக்கும்?

* திருவாரூர் காட்டூரில் இன்று ''கலைஞர் கோட்டம்'' - சிலை திறப்பு!

* ‘திராவிட மாடல்' அரசின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு!

* வரலாற்றைத் திருப்பிப் பார்ப்போம்!

திராவிடத்துத் தீரர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களை நினைவுகூரும் வண்ணம் - அவர் வாழ்ந்த ஊரில் ‘‘கலைஞர் கோட்டமும், கலைஞர் சிலையும்'' திறக்கப்படுவது குறித்து பெருமகிழ்ச்சியோடு, நன்றி உணர்வுடன் வீர வணக்கம் செலுத்தும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (20.6.2023) நமது மானமிகு சுயமரியாதைக் காரராக இறுதிவரை வாழ்ந்து, வரலாறு படைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி, அவர் பிறந்த மண்ணான திருவாரூரில் (காட்டூரில்) மிக்கப் பொருத்தமாக ‘‘கலைஞர் கோட்டம்'' அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது!

திருவாரூர் - காட்டூரில் 

‘‘கலைஞர் கோட்டம்'' இன்று திறப்பு!

கலைஞரின் சிலை அவரால் பயிற்றுவிக்கப்பட்டு, ‘திராவிட மாடல்' அரசின் மாண்பை இந்தியாவிற்கே பறைசாற்றி, எதேச்சதிகார ஆக்டோபஸ் கொடுங்கரங் களுக்குள் சிக்கவிடாமல் தடுக்கும் அரசியல் போர்ப் படைத் தளபதியான நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் இன்று (20.6.2023) மாலை திறக்கப்படுகிறது.

அசோகர் ஆண்ட பூமியிலிருந்து, அதை ஆளும் முதலமைச்சர், கைதேர்ந்த அரசியல் வல்லுநரான நிதிஷ்குமார் அவர்களால், ‘‘கலைஞர் கோட்டம்'' திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சமூகநீதிப் போராளி திரு.லாலு பிரசாத் அவர்களின் புதல்வரும், பீகாரின் நம்பிக்கை நட்சத்திரமும், துணை முதலமைச்சருமான தேஜஸ்வி அவர்களும் கலந்துகொண்டு விழா மாண்பினைப் பெருக்குகின்றனர்! இது திராவிடர் இயக்க வரலாற்றில் பொன்னேடு!

கலைஞரின் நினைவைப் போற்றும் சின்னங்கள்!

முதல் தொடக்கம் தலைநகர் சென்னையில் 7.6.2023 - மக்கள் கடல் திரண்ட கூட்டணித் தலைவர்கள் பங் கேற்ற மாநாடும், அதில் முதலமைச்சர் விடுத்த அரசியல் ஏவுகணையும் எதிரிகளைக் குலைநடுங்கச் செய்தன!

அதன்பின் ஒரு தலைசிறந்த பன்னோக்கு மருத்துவ மனையை சென்னை கிண்டி பகுதியில் நமது முதலமைச்சர், கலைஞர் பெயரில் திறந்து வைத்தார்!

மதுரை மாநகரில் அறிவின் தேக்கமான அரிய நூலகமும் அவர் பெயரில் விரைவில் திறக்கப்பட விருக்கிறது!

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, கலைஞரின் நினை விடத்தில் ஒரு புதுமைப் பொலிவும், அவரது பேனாவே அடையாளச் சின்னமாக கடலில் அமைவதை சிறிது தூரம் சென்று பார்த்து, அறிந்து, கற்றுத் திரும்புகின்ற ஓர் ஏற்பாடு, சென்னை நகரத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் எங்குமில்லாத அமைதிப் புரட்சிக்கு அடித்தளமிடவிருக்கிறது - அந்தப் பறிக்கப்பட முடியாத பேனாவின் எழுத்துகள்!

தந்தை பெரியாரே கலைஞருக்குச் 

சிலை திறக்கச் சொன்னது சாதாரணமா?

வாளைவிட வலியதான பேனாவின் வலிமையைக் காட்டியவர். அவரது அமைதியின் தொடர்ச்சியை, அழகின் சிரிப்பைப் புலப்படுத்தும் அந்த பேனா நினைவுச் சின்னம்  அந்த வங்கக் கடலில் தங்கமாய் தகத்தகாய ஒளிர்விடும்.

இப்படிப்பட்ட பல சிறப்புகள் கலைஞர் என்ற உழைப்பின் உருவமாம், பல்திறன் கொள்கலான அவருக்கு மட்டும் பெருமை சேர்ப்பன அல்ல; அதையும் தாண்டி அவர் கொண்ட சுயமரியாதை - பகுத்தறிவு - திராவிடக் கொள்கை வெற்றியை திக்கெட்டும் முரசொலித்து முழங்குவது சாதனைக்கான சாதனை! சரித்திரப் போதனைக்கான நல்லதோர் வாய்ப்பு - காட்சியும், கருத்தும் எவரும் பெறலாம்!

மற்ற பல தலைவர்களுக்குக் கிட்டாத பெருமை, எட்டாத புகழ் நமது நூற்றாண்டு விழா நாயகர் கலை ஞருக்கு எது தெரியுமா?

பகுத்தறிவுப் பலகவன், சுயமரியாதை இயக்கங்கண்ட அந்த சூரியன், இந்த உதயசூரியன் இளந்தலைவருக்கு அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோதே தனி சிலையை சென்னையில் நிறுவ வலுவான வாதங்களை - இன எதிரிகளின் வாயடைத்து வைக்க முன்மொழிந்தார் தந்தை பெரியார்!

இந்தப் பொன்னான வாய்ப்பு எவருக்கே கிடைக்கும்?  கலைஞர் அப்போது மறுத்தார் - தந்தைக்கு நன்றி கூறினார்.

பிறகு 1971 இல் மகத்தான வெற்றியை தேர்தலில் பெற்று (184 இடங்களில்) - மீண்டும் கலைஞருக்கு சென் னையில் சிலை வைக்க குழு அமைத்தார் - அப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் தந்தை பெரியார்!

கலைஞருக்கு சிலை வைக்க, அன்னை மணியம் மையார் முயன்றபோது, சென்னையில் அய்யாவுக்குத் தி.மு.க. சிலை வைத்த பிறகு, செய்யலாம் என்று கூறி, அதைத் தடுத்தார் கலைஞர்! சொன்னபடியே தந்தை பெரியார் சிலையை சென்னை அண்ணா சாலையில் தி.மு.க. திறந்தது.

பிறகு, திராவிடர் கழகம் அன்னை மணியம்மையார் தலைமையில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னி லையில், அண்ணாசாலையில், கலைஞரின் சிலை  திரா விடர் கழகத்தால் திறக்கப்பட்டது - 1975 ஆம் ஆண்டு!

வீர வணக்கம் செலுத்தி, நன்றி கூர்வோம்!

இப்படி அவரது சிலைக்கே ஒரு நீண்ட வரலாறு உண்டு. இன்று அவர் பிறந்த மண் - அந்த அரிய மாமனிதரை - திராவிடத்துத் தீரரை நன்றியோடு நினைவு கூர்ந்து, திராவிட ஆட்சியின் மாட்சியை மீட்சியாக்கி - ‘‘தலைவரே உங்களுக்கு எங்கள் வீர வணக்கம் நன்றியோடு'' என்று முழங்குகிறோம்!

வாழ்க கலைஞர்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

20.6.2023


No comments:

Post a Comment