யார் என்ன ஜாதி என்றோ, எவ்வளவு சொத்து என்றோ பார்த்து நாம் பழகுவதில்லை!
நம் எல்லோரையும் இணைத்திருப்பது ''பெரியார்'' என்கிற மாபெரும் தத்துவம்தான்!
நமக்கு அடையாளம் கருப்புச்சட்டைதான்!!
உளுந்தூர்பேட்டை, ஜூன் 24 இவ்வளவு பேர் இங்கே இருக்கின்றோமே, யார் என்ன ஜாதி என்று தெரியுமா? எவ்வளவு படிப்பு? யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்றா நாம் பழகுகின்றோம்? இல்லவே இல்லை. நம் எல்லோரையும் இணைத்திருப்பது பெரியார் என்கின்ற அந்த மாபெரும் தத்துவம்தான். நமக்கு அடையாளம் என்ன? கருப்புச் சட்டைதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
10 மாவட்டங்களின் கலந்துரையாடல்
கடந்த 18.6.2023 அன்று மாலை உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற 10 மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி!
அருமைக் கழகப் பொறுப்பாளர்களான அருமைத் தோழர்களே!
10 மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்களது கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது - இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; இந்த அளவிற்கு இருக்கும் என்று நான் உள்ளபடியே எதிர்பார்க்கவில்லை.
தோழர் பரணிதரன் அவர்களுடைய இல்லத்து மணவிழாவிற்கு வருகின்றபொழுது உங்களையெல்லாம் சந்திக்கவேண்டும் என்று நினைத்தேன். ஈரோடு கழகப் பொதுக்குழுவின் மாற்றங்களுக்குப் பிறகு உங்களை யெல்லாம் சந்திக்கக்கூடிய முதல் வாய்ப்பு இதுதான்.
பெரியாரின் மாணவன் என்ற முறையில் உங்களைச் சந்தித்துக் கருத்துரைகளை சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!
அப்படிப்பட்ட இந்த வாய்ப்பில், இந்த அரங்கம் முழுவதும் நீங்கள் திரண்டிருக்கிறீர்கள். இந்த இயக்கத்தினுடைய ரத்த ஓட்டம் மிகுந்த சீராக இருக்கிறது; சிறப்பாக இருக்கிறது. இதயத் துடிப்பு சரியாக இருக்கிறது. அதேபோல அறிவார்ந்த பலம் வாய்ந்த கரங்களாக இருக்கிறது. லட்சியப் பயணத்தில் சிறப்பாக நடைபோடக் கூடிய கால் களாக நம்முடைய தோழர்களுடைய உணர்வுகள் வடிவெடுத்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன். உங்களைப் பாராட்டி, தோழர்களைப் பாராட்டி, இன்னும் மற்றவர்களுக்கும் உற்சாகத்தைத் தரக் கூடிய இது ஒரு புதிய திருப்பத்தைத் தரவிருக்கிறது என்பதற்காக என்னுடைய தலைதாழ்ந்த நன்றியை உங்களுக்கெல்லாம் தெரிவித்து, உங்கள் தொண்டன், தோழன், என்றைக்கும் கூட்டுப் பணி யில் முன்னால் நின்றிருக்கக்கூடிய பெரியாரின் மாணவன் என்ற முறையில் உங்களைச் சந்தித்துக் கருத்துரைகளை சொல்வதில் மகிழ்ச்சியடை கிறேன்.
வரவேற்புரையாற்றிய மாநில இளைஞரணி செய லாளர் செயல்வீரர் தோழர் இளந்திரையன் அவர்களே,
கருத்துரை நிகழ்த்தி, சிறந்த ஒரு செயலாக்கத்திற்கு ஊக்க உரைகளை நிகழ்த்திய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே,
அந்தந்தப் பகுதிகளில், அடுத்த தலைமுறையை ஆயப்படுத்துவதற்கு - பல பேரை உருவாக்கவேண்டும் என்று பணிகளை செய்துகொண்டிருக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்களான தோழர்கள் இரா.ஜெயக் குமார் அவர்களே, இரா.குணசேகரன் அவர்களே,
மாநில ஒருங்கிணைப்பாளர்களாக இருவருக்கும் பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இது ஒரு புதிய திருப்பம்.
துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, தலைமைக் கழக அமைப்பாளர் திண்டிவனம் இளம்பரிதி அவர்களே, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பாஸ்கர் அவர்களே, திண்டிவனம் மாவட்டத் தலைவர் தோழர் அன்பழகன் அவர்களே, விழுப்புரம் மாவட்டத் தலைவர் தோழர் சுப்பராயன் அவர்களே, சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களே, கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி அவர்களே, விருத் தாசலம் மாவட்டத் தலைவர் இளங்கோவன் அவர்களே, புதுச்சேரி மாவட்டத் தலைவர் அன்பரசன் அவர்களே, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு அவர்களே, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் அவர்களே, காரைக்கால் மாவட்டத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
கழகக் காப்பாளர் சுப்பராயன் அவர்களே, டாக்டர் அன்புமணி அவர்களே, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இன்பராஜன் அவர்களே, திண்டிவனம் மாவட்டச் செயலாளர் பரந்தாமன் அவர்களே, கடலூர் மாவட்டச் செயலாளர் எழிலேந்தி அவர்களே, சிதம்பரம் மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன் அவர்களே, விருத்தாசலம் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன் அவர்களே, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் விஜயேந்திரன் அவர்களே, அரியலூர் மாவட்டச் செய லாளர் சிந்தனைச்செல்வன் அவர்களே, காரைக்கால் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அருமைக் கொள்கையாளர் பகுத்தறிவாளர் தோழர் திருநாவுக்கரசு அவர்களே,
மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூர்பாண் டியன் அவர்களே, மாநில இளைஞரணி செயலாளர் தம்பி.பிரபாகரன் அவர்களே, நாத்திகப் பொன்முடி அவர்களே, நன்றியுரை கூறவிருக்கின்ற நகர செயலாளர் சக்திவேல் அவர்களே,
ஒருங்கிணைத்தும், மற்ற பணிகளைச் செய்தும் இயக்கத்தை வலுப்படுத்த முன்வந்திருக்கின்ற பாராட் டுக்குரிய தோழர் வலசை பெரியார் மணி அவர்களே,
இந்த நிகழ்விற்கு வந்திருக்கக்கூடிய தோழர்களே, குடும்பத்தினரோடு வந்திருக்கும் உங்கள் அனை வருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
பழைய தென்னார்க்காடு மாவட்டம்தான்!
10 மாவட்டங்கள் என்று நாம் சொன்னாலும்கூட, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களைப் பார்த்தால், பழைய தென்னார்க்காடு மாவட்டம்தான் இது.
அந்த மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை குறுகிய காலத்தில் அறிவித்த உடன், இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவ்வளவு பேர் இங்கே வந்திருக்கிறார்கள் என்றால், அது ஒரு ஆள் - ஒரு நபர் என்பதால் அல்ல - ஓர் அமைப்பு என்ற அடிப்படையாகும்.
உங்களையெல்லாம் பார்க்கின்றபொழுது எல்லை யற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது; உற்சாகமாக இருக்கிறது. அந்த உற்சாகத்தோடு நீங்கள் திரும்புவது மட்டுமல் லாமல், உற்சாகத்தோடு நீங்கள் பணியாற்றவேண்டும் என்று அன்போடு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
சரி பகுதி மகளிர் இருக்கவேண்டும்!
அடுத்தமுறை நம்முடைய கமிட்டிக் கூட்டங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னால் நண்பர் களே, சரி பகுதி மகளிர் இருக்கவேண்டும்.
மதவாதிகளைப் பாருங்கள், அவர்கள் கோவிலுக்குப் போனாலும் சரி; சர்ச்சுக்குப் போனாலும் சரி, மற்ற இடங்களுக்குச் சென்றாலும் சரி - குடும்பம் குடும்பமாகப் போகிறார்கள்.
அதுபோன்று நாமும் குடும்பம் குடும்பமாக நம் முடைய கமிட்டி கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும். இது கலந்துரையாடல் அல்ல - கலந்துறவாடல் ஆகும்.
எல்லோரையும் இணைத்திருப்பது பெரியார் என்கின்ற அந்த மாபெரும் தத்துவம்தான்!
இவ்வளவு பேர் இங்கே இருக்கின்றோமே, யார் என்ன ஜாதி என்று தெரியுமா? யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது, என்ன படித்தவர் என்றா நாம் பார்த்துப் பழகுகின்றோம். இல்லவே இல்லை.
நம்மை எல்லோரையும் இணைத்திருப்பது பெரியார் என்கின்ற அந்த மாபெரும் தத்துவம்தான்.
நமக்கு அடையாளம் என்ன?
கருப்புச் சட்டைதான்!
கருப்புச் சட்டைக்கு ஒரு காலத்தில் பெரிய எதிர்ப்புகள் இருந்தது. கருப்புச் சட்டை மாநாட்டினை மதுரையில் நாம் நடத்தியபொழுது, கூலிப்படைகளை வைத்து, காலிகளை வைத்து மாநாட்டுப் பந்தலை எரித்ததோடு மட்டுமல்லாமல், அந்த மாநாட்டிற்குச் சென்ற கருப்புச் சட்டைக்காரர்களை எல்லாம் தாக்கினார்கள் என்பது பழைய வரலாறு.
'மரண சாசனம்' எழுதி வைத்துவிட்டுத்தான் கருப்புச் சட்டையை அணிந்திருக்கின்றோம்!
அண்ணா அவர்கள் திராவிட நாடு பத்திரி கையில் ‘‘மரண சாசனம்'' என்ற தலைப்பில் எழுதினார், அப்போது (1946).
‘‘நாங்கள் எல்லாம் ‘மரண சாசனம்' எழுதி வைத்துவிட்டுத்தான் இந்தக் கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு இந்த இயக்கத்திற்கு வந்திருக்கின்றோம்'' என்று எழுதினார்.
இரண்டு நாள் மாநாடு அது. ஆனால், இரண் டாவது நாள் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது நம்முடைய பழைய வரலாறு.
ஆனால், தோழர்களே! இன்றைக்குக் கருப்புச் சட்டை எப்படி இருக்கிறது? இந்த இயக்கத்தின் கொள்கையினுடைய வெற்றியைப் பாருங்கள்.
எண்ணிக்கை நமக்கு முக்கியமல்ல; எண்ணங்கள்தான் முக்கியம்!
இயக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். எண்ணிக்கை நமக்கு முக்கியமல்ல; எண்ணங்கள்தான் முக்கியம்.
என்றாலும், ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன் - கருப்புச் சட்டையா, எரிப்போம் - கருப்புக்கு மறுப்பு என்றெல்லாம் அந்தக் காலத்தில் சொன்னார்கள்; இன்றைய இளைஞர்களுக்கு அது தெரியாது.
நம்முடைய ஆட்கள் அதற்கெல்லாம் முரட்டுத்தன மாக பதில் சொல்வார்கள்.
‘‘கருப்புக்கு மறுப்பு’’ -
மறுப்புக்கு ஒரு செருப்பு!
‘‘கருப்புக்கு மறுப்பு'' என்று விபூதி வீரமுத்து என்பவர் எழுதினார். அன்றைய காலகட்டத்தில், சமூக வலை தளங்கள் எல்லாம் கிடையாது.
‘‘மறுப்புக்கு ஒரு செருப்பு'' என்று நம்முடைய தோழர் பதில் எழுதினார். பிறகு அவர்கள் அடங்கி விட்டார்கள். இப்படி நம்முடைய இயக்கத்திற்கு ஒரு பெரிய வரலாறு உண்டு.
ஆனால், இன்றைக்கு ஒரே ஒரு அளவுகோல் - கருப்புச் சட்டை தைத்து வைத்திருக்காத அரசியல் கட்சியினர் உண்டா?
இதற்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
ஆயுதத்தை எப்பொழுது எடுப்பார் ஒருவர் - போர்க் களத்தை நோக்கி வந்தால், ஆயுதம் தேவை. அது போன்று, போராட்டக் களத்தை நோக்கி எந்தக் கட்சி சென்றாலும், முதலமைச்சராக இருந்தாலும் சரி, எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் சரி - அவர்களுடைய நியாயத்தைப் புலப்படுத்தி கோரிக்கை வைக்கவேண்டும் என்றால், அத்துணை பேரும் கருப்புச் சட்டை அணிகிறார்கள் - இப்போது!
இந்தக் காட்சி இந்தியாவில் வேறு எங்காவது உண்டா?
ஒரு காலத்தில் கருப்புச் சட்டைக்காரர்கள்தானே, ஊருக்கு இரண்டு பேர் இருப்பார்கள் என்று சொல் வார்கள்.
எங்கள் கட்சியில் உறுப்பினர்களை தனியே எண்ண வேண்டிய அவசியம் கிடையாது.
கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்களும் இருக் கிறார்கள்; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
சீசன் கருப்புச் சட்டைக்காரர்களும் உண்டு. சீசன் கருப்புச்சட்டை என்றால், அய்யப்பன் கோவிலுக்குச் செல்கிறவர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது மிகவும் குறைந்துவிட்டது.
முதலமைச்சர்களும் - முதலமைச்சராக வர விரும்புவர்களும்
கருப்புச் சட்டை அணிகிறார்கள்!
அரசியல் கட்சிகள் போராட்டக் களத்தில் கருப்புச் சட்டை அணிகிறார்கள்; முதலமைச்சர்கள் கருப்புச் சட்டை அணிகிறார்கள்; முதலமைச்சராக வர விரும்புகிறவர்களும் கருப்புச் சட்டை போடுகிறார்கள்.
ஆக, இந்தக் கொள்கை என்பது ஆயிரங் காலத்துப் பயிர்; இதை அசைக்க யாராலும் முடியாது; வீழ்த்தவும் முடியாது. நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு இருக்கிறது.
இங்கே அருமையாகக் கருத்துகளைச் பகிர்ந்த நீங்கள் செயல்வீரர்களாக ஒவ்வொருவரும் மாறவேண்டும்.
சில மாற்றங்கள்!
சில மாறுதல்களை இங்கே முதற்கண் அறிவிக்க விரும்புகின்றோம்.
தலைமைக் கழக அமைப்பாளராக அரியலூர் - பெரம்பலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஏற் கெனவே அறிவித்திருந்தோம். வேறொரு பணி நிமித்தம் காரணமாக அவருக்கு தலைமைக் கழக அமைப்பாளராக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று சொன்னதால், அதற்காக ஒரு மாற்றத்தை அறிவிக்கின்றோம்.
அரியலூர் - பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலைமைக் கழக அமைப்பாளராக, ஆண்டிமடம் தோழர் சிந்தனைச்செல்வன் அவர்களை அறிவிக் கின்றோம்.
சிந்தனைச்செல்வன் ஏற்கெனவே அரியலூர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அவர் வகித்த அந்தப் பொறுப்பிற்கு அரியலூர் தோழர் மு.கோபால கிருஷ்ணன் அவர்கள் அறிவிக்கப்படுகிறார்.
அதற்கடுத்து நண்பர்களே, கள்ளக்குறிச்சி மாவட்டத் தில், மாவட்டத் தலைவர், மற்ற தோழர்களின் விருப்பப் படி, கள்ளக்குறிச்சி மாவட்டத் துணைத் தலைவராக குழ.செல்வராசு அவர்கள் அறிவிக்கப்படுகிறார்.
விருத்தாசலம் கழக மாவட்டத்தில் சில புதிய பொறுப்பாளர்களை அறிவிக்கின்றோம்.
மாவட்டத் துணைத் தலைவராக தோழர் இரா.பன் னீர்செல்வம் அவர்கள் அறிவிக்கப்படுகிறார்.
மாவட்டத் துணை செயலாளராக தோழர் சேகர் அவர்கள் அறிவிக்கப்படுகிறார்.
விருத்தாசலம் நகரத் தலைவராக ந.பசுபதி, நகர செயலாளராக முகமது பஷீர், நகர அமைப்பாளராக காரல்மார்க்ஸ் ஆகியோர் அறிவிக்கப்படுகிறார்கள்.
‘‘பணி செய்வார்க்கில்லை பருவம்!''
அதற்கடுத்து நண்பர்களே, ‘‘பணி செய்வார்க்கில்லை பருவம்'' என்று சொல்லக்கூடிய அளவில், நீங்கள் அத்துணை பேரும் இயக்கப் பணிகளை விரைவாக நிறைவேற்றவேண்டும்.
தோழர்கள் இங்கே சொன்னதை நான் சுருக்கிச் சொல்கிறேன்.
ஒவ்வொரு முறையும், வாய்ப்பு இருக்கின்ற ஊர்களில், அதிலும் குறிப்பாக என்னைப் போன்றவர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள் வரும்பொழுது நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்,
இங்கே உரையாற்றிய நம்முடைய முனைவர் துரை.சந்திரசேகரன் சொன்னார், வீடுகளில் கழகக் கொடியேற்றி இருக்கவேண்டும்; நம்முடைய வாகனங் களிலும் கொடி கட்டியிருக்கவேண்டும் என்றார்.
வீடுகளில், வாகனங்களில்
நமது கழகக் கொடி பறக்கட்டும்!
அது நமக்கு பெரிய பாதுகாப்பு. இதைவிட பெரிய பாதுகாப்பு நமக்கு வேறு ஏது? யாராவது வந்து வீட்டின்மேல் ஏற்றியிருக்கும் கொடியைப் பார்த்தால், ‘‘ஓகோ, இது திராவிடர் கழகத்துக்காரர் வீடு - எல்லாம் சரியாகத்தான் இருக்கும்'' என்று போய்விடுவார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment