சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜூன் 24- நேற்று (23.6.2023) பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது,
உங்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வணக் கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் பீகாரின் தலைநகரான பாட்னாவில் நடைபெற்றது.
அதில் கலந்துகொள்வதற்காக நானும் தி.மு. கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும் சென்றிருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்குவதாக இந்தக் கூட்டம் அமைந்திருந்தது.
அகில இந்திய தலைவர்கள் அனைவரையும் நான் சந்தித்தேன். குறிப்பாக நேற்று மாலை நான் பாட்னா சென்ற வுடன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக லாலு பிரசாத் அவர்களது இல்லத்திற்குச் சென்று, அவருடைய உடல்நிலை விசாரித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அது எனக்கு பெரிய உற்சாகத்தைத் தந்தது.
ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை வீழ்த்துவது என்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தக் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் கூட்டியிருந்தார்கள்.
பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டமாக மட்டும் இதனை யாரும் நினைக்க வேண்டாம்.
இந்தியாவின் ஜனநாயகத்தை - மக்களாட்சியை - மதச்சார்பின்மையை - பன்முகத்தன்மையை - ஒடுக்கப்பட்ட மக்களை - ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டு மானால் பாஜக மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம்.
இதில் கடைசி வரை உறுதியாக இருக்கவேண்டும் என் பதை நான் இன்று காலை உரையாற்றும்போது குறிப்பிட்டுச் சொன்னேன்.
2023 ஜூன் 23 ஆம் தேதி கூடினார்கள் - 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் நான் அழுத்தம்திருத்தமாக பேசினேன்.
மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் அடைந்த அனைத்து வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
அதேபோல் அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தி வற்புறுத்தி எடுத்துச் சொன்னேன்.
சில முக்கியமான ஆலோசனைகளையும் நான் அந்தக் கூட்டத்திலே வழங்கினேன்.
உதாரணமாக எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.
கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம்.
அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம்.
தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.
அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
இதுபோன்று எழும் பிரச்சினைகளைச் சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வரிசையாக நான் அந்தக் கூட்டத்திலே உரையாற்றும்போது வலியுறுத்தி சொல்லி இருக்கிறேன்.
பாஜகவை வீழ்த்துவதையே அனைத்துத் தலைவர்களும் ஒற்றை இலக்காகக் கொண்டு இருக்கிறார்கள்.
பாஜகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டு இருக்கிறது.
ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. நிச்சயமாக அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இப்போதுதான் கருவாகி இருக்கிறது. அது உருவாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அடுத்தடுத்த நடவடிக்கைகளைப் பின்னர் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
பாட்னாவில் கூடினோம்.
மகிழ்ச்சியாகத் திரும்பினோம்.
செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில்
செய்தியாளர்: இந்தக் கூட்டம் நடந்து முடிந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நீங்களும், ஆம் ஆத்மி கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அதில் ஏதாவது காரணம் இருக்கிறதா ?
முதலமைச்சர் பதில்: நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு எனக்கு விமான நிலையம் செல்ல நேரமாகிவிட்டது. மதிய உணவுக்குப் பிறகுதான் செய்தியாளர் சந்திப்பு வைத்திருந்தார்கள். அதனால் மதிய உணவு கூட சாப்பிட முடியாமல், விமானத்தில் தான் சாப்பிட்டேன். அவர்களிடம் சொல்லிவிட்டுத் தான் வந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. அதுதான் உண்மை.
செய்தியாளர்: ஆம் ஆத்மி கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். டில்லி Ordinance தொடர்பாக காங்கிரஸ் கட்சி அவர்களது நிலைப்பாடு குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அதுகுறித்து...
முதலமைச்சர் பதில்: நீங்கள் அது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
செய்தியாளர்: இரண்டாம் கட்ட கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள். முதற்கட்ட கூட்டத்தில் முழுமையாக எதுவும் எட்டப்படவில்லையா? எதற்காக இரண்டாவது கூட்டம்?
முதலமைச்சர் பதில்: முதல் கூட்டத்தில் கூடினோம். என்ன செய்வது என்பதுபற்றி முடிவு செய்திருக்கிறோம். போகப்போக அடுத்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்பதை தெரிவிக்கிறோம்.
செய்தியாளர்: பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து....
முதலமைச்சர் பதில்: அது இன்னும் முடிவு செய்யவில்லை. நீங்கள் எல்லோரும் ஆர்வமாக இருப்பதைப் பார்த்தால். பிரதமர் வேட்பாளர் யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment