ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், தமிழ்நாட்டிற்கு நேற்று (20.6.2023) வந்து ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்.
ஒன்றிய அமைச்சர்களின் படையெடுப்பு - தேர்தலில் பணி - பிரச்சாரம் இவற்றைத் தீவிரமாக முடுக்கிவிடுதல் என்ற முனைப்புடன் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் பெருந்தலைகள் தமிழ்நாட்¬ட் நோக்கி வரிசையாக வந்து தங்களது வீரதீர பராக்கிரம பிரச்சாரத்தை அவிழ்த்துக் கொட்டிவிட்டு, வந்த வேகத்திலேயே சென்று விடுகிறார்கள்.
அந்த வரிசையில் வாரந்தோறும் வடநாட்டு மந்திரிகளின் தொடர் படையெடுப்பு, பிரச்சாரம்.
‘திரட்டி வரப்படும் காவிகள்' கூட்டம் - எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசியுள்ளார் ராஜ்நாத்சிங் - இது எல்லோருக்கும் வாடிக்கைதான்.
ஆனால், அவர் சமூக அவதூறு பரப்பிய பா.ஜ.க. பொறுப்பாளருக்கு - கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருக்காக வக்காலத்து வாங்கிப் பேசியுள்ளார்!
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், முக்கிய ஒன்றிய அமைச்சர் இப்படி, அவர் கைதுபற்றிப் பேசி, அதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ‘ஒரு சர்வாதிகாரி' என்று கூறிவிட்டு, ‘‘அவர் பெயரில் உள்ள ஸ்டாலின் எப்படி சர்வாதிகாரியோ அப்படிதான் நடந்துவருகிறார் இங்குள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின்'' என்கிறார்.
பொதுவான அரசியல் மரபு, ஒழுக்கம் துறந்து, ஒன்றியத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களுக்குக் கட்சிப் பிரச்சாரத்திற்குச் செல்லும்போது அங்குள்ள முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் (Personal Attack) தாக்குதல் தொடுப்பதைப் போன்றே, இவரும் ‘‘அவர் பெயர் ஸ்டாலின். அதனால்தான் போலும் இப்படி கொடுமையான சர்வாதிகாரியாக நடந்துகொள்ளுகிறார்'' என்று அபாண்டமாகக் குற்றம் சுமத்துகிறார்.
இவர் முன்பு ஒன்றிய உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்தான்!
இவர் காலத்தில் அவதூறு வழக்குகள் போடப்படவில்லையா? டில்லியில் உள்ள எதிர்க்கட்சி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள்மீது வழக்குகள் பாய்ந்ததோடு இல்லாமல், எளிதில் வெளியே வர முடியாத - தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டே வரும் நிலையில், வழக்குகள் பாய்கின்றனவே - இவர்களது ஆட்சியில்! அதை ‘ஏனோ வசதியாக மறந்துவிட்டு' இப்படி வசனம் பேசி, மக்கள் அதை பொருட்படுத்தாமல், உள்ளுக்குள் உணர்ந்து, விசனத்தோடு திரும்புகின்றனர்!
இரண்டாம் உலகப் போர் முடிந்தது எப்படி என்ற வரலாற்றை ஆர்.எஸ்.எஸ்.காரரான ராஜ்நாத் சிங் ‘ஜீ' மீண்டும் ஒருமுறை படித்தால், ரஷ்ய ஸ்டாலினின் மகத்தான சக்தி எப்படிப்பட்டது என்பது புரியவரும். ‘நான் ஆரியன்' என்பதைப் பெருமையோடு பிரகடனப்படுத்திய ஹிட்லர் என்ற பாசிஸ்ட் சர்வாதிகாரியை பின்னங்கால் பிடரியில் பட ஓட ஓட ரஷ்யப் படைகள் விரட்டி - பெருந்தோல்விப் பள்ளத்தில் ஹிட்லர் முதன்முதல் விழுந்து, பிறகு எழ முடியாத அளவுக்கு ஆனார் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது!
அவர் ஒன்றிய இராணுவத் துறை அமைச்சர் ஆனதால், அது அவருக்குப் பெரிதும் பயன்படக் கூடுமே!
‘‘The Fall of Berlin'' என்ற ஒரு பழைய ஆங்கில திரைப்படத்தை வரவழைத்துப் போட்டுப் பார்த்தால், அதில் நாஜி ஹிட்லர் படைகளை ரஷ்ய ஸ்டாலின் படைகள் எப்படி வீழ்த்தி, படுதோல்வியை ஏற்படுத்தின என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்!
ஆரியத்தின் பாரம்பரியமான ஹிட்லரும், ஆரிய ஆர்.எஸ்.எஸ்.சும் மிக நெருக்க உறவுக்காரர்கள் அல்லவா!
அந்தப் பழைய படம் இப்போது பாடம் கற்றுக்கொள்ள அவர்களுக்குப் பயன்படும்.
ஹிந்து மகாசபை தலைவர்கள், ஜெர்மனி மற்றும் முசோலினி கூட்டு சந்திப்பு வரலாற்றில் மறைக்கப்பட முடியாத நிகழ்வுகள் அல்லவா?
அன்று ஹிட்லரை அந்த ஸ்டாலின் தோற்கடித்தார்.
இன்றைய தமிழ்நாட்டு மு.க.ஸ்டாலின் ஹிட்லராகத் துடிப்போரைத் துரத்தித் துரத்தி விரட்டுவார் - வரும் 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில்!
எனவே, ஸ்டாலின்களின் வெற்றி வரலாற்றில் நிலை பெறும் இன்றும், என்றும்!
No comments:
Post a Comment