ரயில்வே நிர்வாகத்தின் லட்சணம்: பேசின் பிரிட்ஜ் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

ரயில்வே நிர்வாகத்தின் லட்சணம்: பேசின் பிரிட்ஜ் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

சென்னை, ஜூன் 10 - ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 8.6.2023 அன்று இரவு 11 மணிக்கு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்தது. பின்னர் இந்த ரயில் பயணிகளை இறக்கிவிட்டு 12 மணி அளவில் சென்டிரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றுகொண்டிருந்தது. 

பணிமனை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டது. ரயிலின் ஒரு பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டாவளத்தை விட்டு விலகி கீழே இறங்கின. இதையடுத்து, ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து 2 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 சக்கரங்களும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இதனால், பணிமனைக்கு செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

சென்டிரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு ரயில் குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்ட போதிலும் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில், ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், சிக்னல் உள்ளிட்டவைகளை சரிவர ஆய்வு செய்ய வேண்டும் எனவும், வரும் 14ஆம் தேதிக்குள் இதுகுறித்த அறிக்கையை மண்டல மேலாளர்கள் ரயில்வே வாரியத் திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த சூழலில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் தடம் புரண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment