ரயில் விபத்தில் தான் காயம் அடைந்தாலும், உடன் பயணம் செய்த சிலரை மீட்க உதவிய தொழில் பாதுகாப்பு படை பெண் காவல்துறை ஆய்வாளர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

ரயில் விபத்தில் தான் காயம் அடைந்தாலும், உடன் பயணம் செய்த சிலரை மீட்க உதவிய தொழில் பாதுகாப்பு படை பெண் காவல்துறை ஆய்வாளர்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவல்துறை துணை ஆய்வாளரான லப்பானி தாஸ், தன்னுடைய 5 வயது மகள், மாமியார் ஆகியோருடன் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பினார்.

இந்த ரயில் ஒடிசா அருகே விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயம் அடைந்ந லப்பானிதாஸ், தன்னுடன் பயணம் செய்த சக பயணிகள் சிலரை யும் காப்பாற்றினார். பின்னர் மகள், மாமியாருடன் அரசு ஏற்பாடு செய்த சிறப்பு ரயிலில் சென்னை திரும்பினார். விபத்து குறித்து அவர் கூறியதாவது:- மகள், மாமியாருடன் ரயிலில் சென்னை திரும்பி வந்து கொண்டு இருந்தேன். மகள் மேல் படுக்கையில் படுத்து இருந் தாள். மாமியார் கழிப்பறைக்கு சென்று இருந்தார். இரவு 7 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ரயில் குலுங்கியது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது மேல் படுக்கையில் இருந்த மகள் கீழே விழப் பார்த்தபோது அவளை காப்பாற்றினேன்.

பின்னர் ரயில் வாசல் அருகே சென்று பார்த்தபோது ரயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடப்பதும், கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதும் தெரிந்தது. அப்போது அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் அங்கு நின்றிருந்தனர். அவர்களிடம் எனது மகளை கொடுத்து கீழே இறங்க செய்தேன். பின்னர் கழிப்பறையில் இருந்த மாமியாரை மீட்டு கீழே இறங்க வைத்தேன். மேலும் நான் இருந்த பெட்டியில் பயணம் செய்த வயதானவர்கள், பெண்கள் ஆகியோரையும் பத்திரமாக மீட்டு அப்பகுதி மக்கள் உதவியுடன் கீழே இறங்கினேன். இதில் எனக்கு காலில் காயம் ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது. தண்டவாளத்தில் இறங்கிய போதுதான் இந்த கோர விபத்து ஏற்பட்டு இருப்பதை அறிய முடிந்தது. பலர் காயங்களுடன் அலறிக் கொண்டு இருந்தனர். தண்டவாளத்தில் இருந்து 15 அடி கீழே இருந்த மைதானம் பகுதிக்கு மீட்கப்பட்டவர்களுடன் சென்று பாதுகாப்பாக இருந்தோம். இரவு நேரமாக இருந்ததால் அந்த இடம் முழுவதும் இருட்டாக இருந்தது. ஆனால் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்திருந்தன. மீட்புக் குழுவினர் வந்து முதலுதவி செய்தனர். பின்னர் லேசான காயம் அடைந்தவர்களை சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைத்தனர். ரயில் விபத்தில் காயம் அடைந்தாலும் உடன் பயணம் செய்த சிலரை மீட்க உதவியது மகிழ்ச்சி யாக இருந்தது. அந்த பகுதி மக்களின் உதவி அளவிட முடியாதது. ஆனால் குளிர்சாதன பெட்டிகளுக்கு பெரும் பாதிப்பு இல்லை என்றாலும், சாதாரண வகுப்பு பெட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment