"பாரத ராஷ்டிர புருஷர்களான ராமன் கிருஷ்ணனை வணங்க வேண்டும்!"
கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் கோல்வால்கர் அறிவுரை!
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
தொகுப்பு: தஞ்சை மருதவாணன்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் சிந்தனைகளும், கொள்கைகளும், மதவாதப் பாதையில் எப்படி ஊறித் திளைத்திருந்தன என்பதை எடுத்துக்காட்டும் சில நிகழ்வுகள் அவர்களது நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
‘தன் வீட்டுக்கெதிரே ஹிந்து சகோதரர்களின் ரத்தம் சிந்தப்படக் கூடாது' என்று பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையில் ‘ஹிந்து'வின் பின்னால் ஒளிந்துகொண்டதும், சிறுபான்மையினர் மீதான அவரது பார்வையும் இச்சான்றுகளில் வெளிப்படுகின்றன.
"பசுவதைத் தடைச் சட்டம் பற்றி பேசும்பொழுது, ஹிந்துக்களைத் தவிர முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் கூட இந்தக் கிளர்ச்சியில் ஒத்துழைப்பது அவசியம் என்று சிறீகுருஜி கூறினார். இங்கு உட்கார்ந்திருப்ப வர்களில் சிலர் அமெரிக்கப் பிரஜையாக இருக்க விரும்புகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த உரிமையையும் பெற்று விடுகிறார். அங்கு சென்று அவர் எந்தக் கொடியிடம் அபிமானம் காட்ட வேண்டும்?
பாரதத்தினுடைய சக்கரம் பொறித்த மூவண்ணக் கொடிக்கா? இல்லை. அவர் அமெரிக்கக் கொடியிடம் தான் அபிமானம் கொள்ள வேண்டும். ராஷ்ட்ர புருஷர் என்ற ரீதியில் அவர் யாரை மதித்துப் போற்று வார்? ஜார்ஜ் வாசிங்டனையும் ஆபிரகாம் லிங்கனை யும்தான். அங்கு பகவான் ராமனையும் கிருஷ்ணனை யும் பூஜிப்பதையும் எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால் அங்குள்ள தேசிய பக்திக் கேந்திரங்களை உன்னுடையதாக ஏற்க வேண்டும்.
இதுபோலவே கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் பாரதத்தின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து இங்குள்ள குடிமகனுக்குரிய சட்ட திட்டங்களுக்குத் தக்கபடி தான் வாழ வேண்டும். இங்குள்ள தேசிய வாழ்க்கையின் லட்சியத்தையே தம்முள் வைத்துக் கொண்டு இங்குள்ள விழாக்களை தமது தேசிய விழாக் களாகக் கருதி வந்து இங்குள்ள ராஷ்ட்ர புருஷர்களை வாழ்த்தி வணங்க வேண்டும். வேத காலம் முதல் பெருகி ஓடி வருகின்ற வாழ்க்கை நீரோட்டத்துடன் இரண்டறக் கலந்து பாரதத்தின் மகா புருஷர்களின் வாழ்க்கையிலிருந்து ஊக்கம் பெற்று வாழ்வதுடன் அவர்களது நம்பிக்கைகளைத் தமதாக்கிக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
இப்படி வாழ்ந்து கொண்டு அவர்கள் விரும்பினால் மசூதிக்குப் போகலாம் மற்றும் பைகம்பர் முகமது பெயரை வழிபடலாம். அல்லது, சர்ச்சுக்குப் போகலாம். பைபிள் படிக்கலாம். இது விடயமாக எவருக்கும் எவ்விதமான ஆட்சேபனையும் இருக்காது"
(ஆதாரம்: ராஷ்ட்ர சிற்பி சிறீகுருஜி (வாழ்க்கைச் சம்பவங்கள்) நூல்: பக்கம் 62).
காந்தியார் கொலையினால் சூடுபிடித்த
பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் விவாதம்!
பம்மிப் பதுங்கிய ஆர்.எஸ்.எஸ். குருஜி
காந்தியாரைக் கொன்றவன் ‘பிராமணனா'யிருந்தபடி யால் மகாராட்டிரத்தில் ‘பிராமணர்', ‘பிராமணர் அல்லா தார்' விவாதம் மீண்டும் தலைதூக்கியது. பிராமணர்க ளுக்கு எதிராக சூழ்நிலையானது திடீர் என சூடு பிடித்து விட்டது. நாகபுரியில் ஜனவரி 31 இரவு முதலே சங்க விரோத முணுமுணுப்பு சூழ்நிலை காணப்பட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி காலையில் குருஜி தங்கியிருந்த வீட்டுக்கு எதிரில் தூண்டி விடப்பட்ட கூட்டம் கல்வீசத் துவங்கியது.
சங்கத்துக்கு எதிராக தலைவர்களது உள்ளத்தில் நீண்ட காலமாக குவிந்து கிடந்த வெறுப்புணர்ச்சி இந்த வடிவத்தில் வெளிப்பட்டது. இங்கு ஒரு பக்கம் கல்வீச்சு நடந்து கொண்டிருந்தது. ஆனால் மறுபக்கம் குருஜி யின் மனதில் இதன் மூலம் பாரதத்தில் ஏற்படக்கூடிய அராஜகத்தைப் பற்றி ஆழ்ந்த கவலை தோன்றிவிட்டது. உள்ளத்தில் ஒரு அச்சமும் இருந்தது. ஏற்கெனவே பரஸ்பர கலகத்தால் சிதைந்து கிடக்கும் சமாஜத்தில் இந்தப் புயலின் காரணமாக ஒருமைப்பாட்டை உருவாக்கும் சங்க முயற்சியானது. சிறிது காலத்துக்குத் தடைப்பட்டு விடுமோ என்று அவர் பயந்தார்.
தப்புக் கருத்துக்களின் காரணமாக கொதிப்பு அடைந்திருக்கும் மக்களுடன் சங்க ஸ்வயம் சேவகர் கள் கைகலக்கக் கூடாது என்று தீர்மானித்து குருஜி நாடு முழுவதும் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் "எல்லாச் சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கவும்" என்ற தந்தியை அனுப்பினார்.
இந்தக் கட்டளையின் மூலம் அராஜகமானது இரண்டு கைகளாலும் தாளமிடுவதை அவர் தடுத்தார். சிலருக்கு இது சரணாகதியாகத் தோன்றியது. ஆனால் கடந்த எத்தனையோ ஆண்டுகளாக ஒருமைப்பாட்டை உருவாக்க நடத்தும் நமது போராட்டத்தில் லட்சியத் துக்கு இசைவாக இந்தக் கொள்கைதான் சரியானது என்று குருஜி நம்பினார்.
இந்த நம்பிக்கை காரணமாக வாலிப ஸ்வயம் சேவக்குகள் குருஜியின் வீட்டுக்கு எதிரே இருந்த கூட்டத்தைக் கலைத்து விரட்ட வேண்டும் என்று ஆவேசம் காட்டிய போதும் அவர் பதில் அளித்தார். நமது வீட்டுக்கு எதிரில் ஹிந்து சகோதரர்களின் ரத்தம் சிந்தப்படுவதை நான் ஒரு போதும் சம்மதிக்க மாட் டேன். என்னைப் பாதுகாக்க எவரும் இங்கு இருக்க வேண்டியதில்லை. நல்லது. அவரவர் தத்தம் வீடு களுக்குச் சென்று விடுங்கள்.
(ஆதாரம்: ராஷ்ட்ர சிற்பி சிறீகுருஜி (வாழ்க்கைச் சம்பவங்கள்) நூல்: பக்கங்கள் 32-33).
"ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கமாக இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஆக்கிவிட முடியுமா? இல்லை,
இது அப்பாவி சர்தார்ஜியின் கனவா?
எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் அனுபவம்
சிலர் இருக்கிறார்கள்; அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே நாம் பகைமை உணர்ச்சியை நம் மனத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எனது வெறுப்புப் பட்டியலில் குரு கோல்வால்கர் முதன்மை ஸ்தானம் பெற்றிருந்தார்.
வகுப்புக் கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ்.-இன் செய் கைகள், காந்தியாரைக் கொலை செய்தது, இந்தியாவில் மதச்சார்பற்ற நிலையிலிருந்து ஹிந்து ராஜ்யமாக மாற்றப் பேவதாகப் பேசுவது - இவை காரணமாக வேறென்ன நினைப்பது? எனினும் பத்திரிகையாளன் என்ற ரீதியில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவிர்க்க என்னால் இயலவில்லை.
ஸ்வயம் சேவக்குகள் சங்கிலித் தொடர் போல் பின்னிக் கொண்டு நிற்பார்கள் என்று எதிர்பார்த்தேன். எவருமே இல்லை. எனது காரின் நம்பரைக் குறித்துக் கொள்ள சாதா உடையிலுள்ள ரகசியப் போலீஸ் கூட இல்லை. அவர் தங்கியிருந்தது நடுத்தர வகுப்பினரின் வீடு. ஏதோ பூஜை நடப்பது போன்ற தோற்றம். வெளியில் செருப்புகள் வரிசையாக வைக்கப்பட்டிருந் தன. அகர்பத்தி வாசனை மிதந்து வந்து கொண்டிருந்தது. உள்ளுக்குள்ளே பெண்களின் சலசலப்பு. பாத்திரங்க ளும் தேநீர்க் கோப்பைகளும் சலசலத்தன. ஒரு சிறு அறையில் வெள்ளை வெளேரென்று மாசு மறுவற்ற, புதிதாகச் சலவை செய்யப்பட்டது போன்ற வெள்ளை வேஷ்டியும் சட்டையும் அணிந்து - மகாராட்டிர பிராமணர்களால் தான் இப்படி உடையணிய முடியும் - ஒரு டஜன் பேர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடையே குரு கோல்வால்கர் அறுபத்தைந்து வயதிருக்கும். மெலிந்த உடல், தோளில் விழும் கருத்த தலைமுடிச்சுருள். வாயை மறைக்கும் மீசை. அரை குறையாக நரைத்த கற்றையான தாடி தொங்குகின்றது. மாறாத புன்னகைச் சிரிப்பு.
கண்ணாடிகளுக்குப்பின் மினுக்குகின்ற கருத்த கண்கள். இந்திய ஹோ-சி-மின் போல அவர் தோற்ற மளிக்கிறார். நெஞ்கத்தில் புற்றுநோய்க்காக அண்மை யில் அறுவைச் சிகிச்சை நடத்தப் பெற்ற அவரது தோற்றம் அற்புதமான ஆரோக்கியத்துடனும் உற்சாகத் துடனும் காணப்படுகிறது. குருவாக இருப்பதால் சிஷ்யனைப் போல நான் நமஸ்கரிக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்ப்பார் என நான் நினைக்கின்றேன்.
ஆனால் அவர் அந்த வாய்ப்புத் தரவில்லை. குனிந்து அவரது பாதங்களைத் தொட முயலும்போது எலும்பும் தோலுமான தனது விரல்களால் என் கைகளைப் பிடித்துத் தமக்கே உள்ள இடத்தில் உட்கார வைக்கிறார். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி யடைகிறேன் என்கிறார். அவர் சில காலமாகவே உங்களைச் சந்திக்க விரும்பினேன் என்கிறார். அவரது ஹிந்தி தூயதாக உள்ளது.
அசடுபோல நானுந்தான் உங்கள் "பஞ்ச் ஆப் லெட்டர்ஸ்" என்ற புத்தகத்தைப் படித்ததிலிருந்து சந்திக்க நினைத்தேன் என்கிறேன் "பஞ்ச் ஆப் தாட்ஸ்"என்று திருத்துகிறார். அது பற்றி என் கருத்தை அறிய அவர் விரும்பவில்லை. என் கைகள் ஒன்றைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தட்டிக் கொடுக்கிறார். "அப்புறம்" என்று எனது கேள்வியை எதிர்பார்க்கும் ரீதியில் பார்க்கிறார்.
"எங்கிருந்து துவங்குவது என்று எனக்குத் தெரிய வில்லை. நீங்கள் விளம்பரத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறீர் கள் என்றும், உங்கள் இயக்கம் ரகசியமானது" என்றும் கூறுகிறார்கள்.
"நாங்கள் விளம்பரத்தைத் தேடிப் போவதில்லை என்பது உண்மையே. ஆனால் எங்களைப் பற்றி ரகசியம் எதுவும் கிடையாது. நீங்கள் கேட்க விரும்புவது எதுவாயினும் கேளுங்கள்" ஜாக் குர்ரன் எழுதிய "ஆர்.எஸ்.எஸும் ராணுவ வெறித்தனமும்" என்ற புத்தகத்தி லிருந்து உங்கள் இயக்கத்தைப் பற்றிப் படித்தேன்.அவர் சொல்லுகிறார்... குருஜி இடைமறித்து "அது ஒரு வஞ்சனையான விளக்கம். நேர்மையற்றது. முறையற் றது. நானும், பிறரும் சொன்னதை எல்லாம் தப்பும் தவறுமாக எழுதியுள்ளார்.எங்கள் இயக்கத்தில் ராணுவ வெறித்தனம் எதுவும் இல்லை. நாங்கள் கட்டுப்பாட் டைப் போற்றி மதிக்கிறோம். அது வேறு விஷயம்."
அய்ரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் சி.அய்.ஏ. வின் (அமெரிக்க உளவு இயக்கம்) தலைவராக அவர் வேலை பார்த்தார் என்று ஒரு கட்டுரையில் நான் பார்த்ததைக் கூறுகிறேன். (அவரது கருத்து பற்றி) "எனக்கு ஒரு போதும் சந்தேகம் இல்லை. அவரை இருபது ஆண்டுகளாகத் தெரியும்" என்று அப்பாவித் தனமாகக் கூறுகிறேன்.
குருஜி என்னை நோக்கிப் புன்னகை ஒன்றை வீசு கிறார். "இதில் எனக்கு வியப்பே இல்லை" என்கிறார். அவரது இந்த வாசகம் குர்ரன் சி.அய்.ஏ.க்காரர் என் பதைப் பற்றியா அல்லது எனது அப்பாவித்தனத்தைப் பற்றியா என்று எனக்குத் தெரியாது. "ஆர்.எஸ்.எஸ். பற்றி ஒரு விஷயம் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் அனுமதித்தால் அதனை எவ்வளவு பச்சை யாகக் கேட்க முடியுமோ கேட்கிறேன்."
"ஓ! கேளுங்களேன்"
"சிறுபான்மையினரைப் பற்றிய உங்கள் போக்கு தான் குறிப்பாக கிறிஸ்துவர்களையும் முஸ்லீம்களையும் பற்றி..."
"மதம் மாறுவதற்காக அவர்கள் கையாளும் முறை களைத் தவிர கிறிஸ்துவர்களைப் பற்றி விரோதமாக எங்களுக்கு ஒன்றுமில்லை. நோயாளிகளுக்கு மருந்து தரும் போதும் பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் போதும் லாப நோக்குடன் சந்தர்ப்பத்தையும் பயன் படுத்தி அம்மக்களிடையே மதத்தைப் பிரச்சாரம் செய்யக்கூடாது. ரோமாபுரியிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திரமான இந்திய சர்ச்சுகளை அமைக்க முயற்சி நடப்பது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்."
"முஸ்லிம்களைப் பற்றி என்ன?"
"என்ன அவர்களைப் பற்றி?"
"இந்தியாவினிடமும் பாகிஸ்தானிடமும் பல முஸ்லீமகள் இரட்டை விசுவாசம் கொண்டிருப்பதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன என்பது பற்றி எனக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது. இதற்கு முஸ்லீம்கள் எவ்வளவு பொறுப்போ அவ்வளவு பொறுப்பு ஹிந்துக்களுக்கும் உண்டு. நாட்டுப் பிரி வினைக்குப் பிறகு முஸ்லீம்கள் கஷ்டப்பட்டார்கள் என்ற காரணத்திலிருந்து இது (இரட்டை விசுவாசம்) தோன்றியுள்ளது. என்ன ஆனாலும் ஒரு சிலரது பிழைகளுக்காக முழு சமுதாயத்தையும் பொறுப்புச் சாட்ட முடியாது."
"குருஜி! இங்கு நம்முடன் ஆறு கோடி முஸ்லீம்கள் வாழ்கிறார்கள். நான் சரளமாகப் பொழிகிறேன். அவர்களை ஒழிததுக் கட்ட முடியாது. அவர்களை விரட்ட முடியாது. மதமாற்ற முடியாது. இது அவர்களு டைய வீடு. நாம் அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை யூட்ட வேண்டும். தம்மை இங்கு விரும்புகிறார்கள் என்ற உணர்ச்சியை அவர்களிடையே ஊட்ட வேண்டும். அன்பினால் அவர்களை வென்று விட வேண்டும். இது ஒரு முக்கிய விஷயமாக."
"நீங்கள் கடைசியாகக் குறிப்பிடுவதற்கு நான் முதலாவதாகக் குறிப்பிடுவேன்" என்று அவர் குறுக்கிடுகிறார் - உண்மையாகப் பார்த்தால் அன்பின் மூலம் அவர்களது விசுவாசத்தைச் சம்பாதிப்பதுதான் ஒரே சரியான கொள்கை என்பேன். "நான் திடுக்கிடுகி றேன். அவர் சொற்களை வைத்து விளையாடுகிறாரா," அல்லது அர்த்தத்துடன்தான் பேசுகிறாரா? தனது கூற்றுக்கு அவர் ஒரு வரையறை விதிக்கிறார்.
ஜமாத்-இ-இஸ்லாமியைச் சேர்ந்த ஒரு தூது கோஷ்டி என்னைக் காண வந்தது. இந்தியாவை ‘முஸ்லிம்கள் ஆண்டார்கள் என்பதை மறந்துவிட வேண்டும்' என்று அவர்களிடம் கூறினேன். அன்னிய முஸ்லிம் நாடுகளை தமது தாய் நாடாக அவர்கள் கருதக் கூடாது. இந்தியாவின் (இந்தியனிசம்) பிரதான நீரோட்டத்துடன் அவர்கள் இணைந்து விட வேண்டும்."
"எப்படி?"
"அவர்களுக்கு நாம் விஷயங்களை விளக்கிச் சொல்ல வேண்டும். சில சமயங்களில் முஸ்லிம்களின் செயல்களைக் கண்டு கோபம் வருகிறது. ஆனால் கோபதாபங்கள் ஹிந்து ரத்தத்தில் நீண்ட நாள்களுக்குக் குடி கொள்ள முடியாது. காலம் அனைத்தையும் குணமாக்கி ஆற்றி விடும். நான் இனிய நம்பிக்கை நிறைந்தவன். ஹிந்து சமயமும் இஸ்லாமும் ஒன்றாக வாழக் கற்றுக் கொள்ளும் என்று நான் கருதுகிறேன்."
தேநீர் பரிமாறப்படுகிறது. குருஜியின் கண்ணாடி டம்ளர் விடயத்தைத் திசை திருப்புகிறது. எங்களைப் போல பீங்கான் கோப்பையில் ஏன் அவர் பானங்களை அருந்தவில்லை என்று கேட்கிறேன். அவர் புன்முறுவல் பூக்கிறார். "எப்பொழுதுமே இதன் மூலம் தான் பருகுகிறேன். நான் போகுமிடமெல்லாம் இதனை யும் கொண்டு செல்கிறேன். அவருடன் மிக நெருங்கி யிருப்பவரும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவருமான டாக்டர் தத்தே விளக்குகிறார். "பீங்கான் கோப்பை நாளாகும்போது முதல் பாகமான வழவழப்பு தேய்ந்து போய் மண் பாகம் தெரிகின்றது. அந்த மண்ணில் கிருமிகள் வாழ முடியும்." நான் மீண்டும் எனது பழைய விடயத்துக்குத் திரும்புகிறேன். "உலகின் பெரும்பகுதியில் சமயப் பற்றில்லாமலும் உலகாயுத வாதியாகவும் மாறி வரும்போது நீங்கள் ஏன் மத அடிப்படையில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?"
"ஹிந்து சமயம் பலமான அஸ்திவாரத்தின் மீது அமைந்துள்ளது. காரணம் அதற்கு ஆணவப்பிடி வாதமான கொள்கை கிடையாது. சமயப் பற்றின்மை என்ற இன்றைய அலையை அது மற்ற மதங்களைவிட நன்கு சமாளித்து வாழும்."
"எப்படிச் சொல்கிறீர்கள்? சான்றுகள் நேர்மாறாக அல்லவோ உள்ளன? உறுதியாக நிற்பதுடன் மக்கள் மீதுள்ள பிடிப்பை வலிமைப்படுத்தி வரும் மதங்கள் எல்லாம் ஆணவப் பிடிவாதமான கொள்கை அடிப்படையில் அமைந்தவைதானே... உதாரணமாக கத்தோலிக்க மதம் அதைவிட இஸ்லாம்..."
"இதெல்லாம் மாறிவரும் கட்டங்கள். உலகாயுத வாதம் அந்த மதங்களையெல்லாம் தாக்கி வெல்லும். ஹிந்துத்துவத்துக்கு அப்படி நேராது. அகராதியில் காணப்படும் பொருள்படி நமது சமயமானது "மதம்" அல்ல. அது தர்மம் ஆகும். வாழ்க்கை முறையாகும். ஹிந்துத்துவம் உலகாயுதத்தைப் போகிற போக்கிலேயே சமாளித்துவிடும்."
குருஜியின் நேரத்தில் அரை மணிக்கு மேல் நான் எடுத்துக் கொண்டு விட்டேன். அமைதி இழந்ததற்கான எந்த அறிகுறியும் அவரிடம் காணவில்லை. விடைபெறும் போது நான் அவரது பாதங்களைத் தொடாமலிருப்பதற்காக மீண்டும் என் கைகளைப் பிடித்துக் கொண்டு விடுகிறார். எனக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளதா? ஆமாம் என்று ஒத்துக் கொள்ளுகிறேன். தனது கருத்துப்பாதைக்கு என்னை திருப்ப அவர் முயலவில்லை. அவரது அபிப்பிராயங் களை என்னால் மாற்றிவிட முடியும் என்ற எண்ணத்தை அவர் என் மனத்தில் உண்டாக்கினார். நாகபுரிக்கு வந்து எல்லாவற்றையும் நேரில் பார்க்கச் சொல்லி அழைப்பு விடுத்தார். நான் அதனை ஏற்றேன். அவரது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாக ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையை ஆக்கிவிட என்னால் ஒருக்கால் முடிந்தாலும் முடியலாம். இல்லையென்றால் நான் அப்பாவி சர்தார்ஜி போல ஏதோ கனவு காண்கிறேனா?
(‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி' இதழில்
26.11.1972இல் வெளியான கட்டுரை).
(தமிழாக்கம்: ஆதாரம்: ராஷ்ட்ர சிற்பி சிறீகுருஜி (வாழ்க்கைச் சம்பவங்கள்) நூல்: பக்கங்கள் 68-74).
No comments:
Post a Comment