அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அனைத்துத் தரப்புக்கும் உண்டு!
சட்டப் போராட்டமும், சட்டமன்றப் போராட்டமும், மக்களின் அறப்போராட்டமுமே சரியான தீர்வு!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி அவர்களை முதலமைச்சர் நியமித்ததை ஏற்பதற்கு இல்லை என இன்று (29.06.2023) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில்பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இது முழுக்க முழுக்க அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது என்பதால், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆளுநரின் இந்த சட்ட முரணான, அதீத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படி ஓர் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் ஆணையை ஆளுநர் ரவி அவர்கள் இந்திய அர சமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் பிறப்பித் துள்ளார் என்பதை அவர் விளக்குவாரா?
எப்படி ஓர் அமைச்சரை ஆளுநரால் தன்னிச்சை யாக நியமிக்க முடியாதோ அதே போன்று அவரால் பதவி நீக்கமும் செய்ய முடியாதே!
அரசமைப்புச் சட்டப்படி (கூறுகள் 163, 164(1)) முதலமைச்சரின் அறிவுரைப்படிதான் ஆளுநர் எந்த அமைச் சரையும் நியமிக்கவும் முடியும்; நீக்கவும் முடியும்.
ஆளுநருக்கென்று எந்தத் தனி அதிகாரமும் கிடையாது.
ஒருவர் மீது விசாரணை நடப்பதாலோ, நீதிமன் றத்தில் வழக்கு நடப்பதாலோ அந்த அமைச்சரை நீக்கச் சட்டத்தில் இடம் கிடையாது. ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வந்த பிறகே, அதிலும் கூட 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனையை நீதிமன்றம் அளித்தால்தான் அமைச்சரையோ அல்லது அது போன்ற வேறு பதவிகள் வகிப்போரையோ நீக்க முடியும் என்ற சட்டத்தைக் கூட ஆளுநர் அறிய மாட்டாரா?
தமிழ்நாடு திமுக அரசு மக்களின் அபரிமித ஆதரவைப் பெற்றுள்ளது என்பதால், வேண்டுமென்றே அதற்கு எதிராக இப்படி திட்டமிட்ட வம்பு, வல்லடியை இந்த ஆளுநர் உருவாக்குகிறார்; மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக வியூகம் வகுக்கிறார்.
இவரைப் பின்புலத்திலிருந்து இயக்குவோருக்கு நிச்சயம், மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவர் என்பது உறுதி.
ஆளுநருக்கு எதிராகக் கண்டனக் குரலை எழுப்பி, ஜனநாயகத்தைக் காப்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவரது முக்கியக் கடமையாகும்.
அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அனைத்துத் தரப்புக்கும் உண்டு.
சட்டப் போராட்டம், சட்டமன்றப் போராட்டம், மக்களின் அறப் போராட்டம் ஆகியவையே சரியான தீர்வு ஆகும்.
முன்பு சட்டமன்றத்தை அவமதித்து வெளிநடப்புச் செய்தார்; இப்போது அரசமைப்புச் சட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி, எல்லை தாண்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சவால் விடுகிறார். சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குற்றாலம்
29.06.2023
குறிப்பு: நேற்றிரவு (29.6.2023) 10.30 மணிக்கு இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment