ஞான. வள்ளுவன்
வைத்தீசுவரன்கோயில்
கடந்த சில நாள்களுக்கு முன் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி அவர்கள் வள்ளலார் ஒரு ரிஷி என்றும் அவர் பார்வை குறித்துப் பார்க்கையில் 10,000 ஆண்டுகட்கு முன் தோன்றிய பழைமையான சனா தனத்தின் வழி வந்தவராக அவரைப் பார்க்கின்றேன் என்றும் அனைத்து உயிர்களுடனானத் தொடர்புதான் சனாதனம் என்றும் பேசியிருந்தார்.
மதவாதிகள் உள்பட பலரும் அவர் கருத்தினைக் கண்டித்த நிலையில் அதற்கு ஆதரவாகச் சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் “சனாதன தர்மத்தின் அங்கம்தான் வள்ளலார்“ என்றும் “அனைத்து மதங்களும் இணைந்ததுதான் சனாதனம்“ என்றும் தன் சைவத்திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
விவாதம் என்று வருகின்றபோது பொதுவான அறங்களையெல்லாம் இந்து மதத்தின் சனாதனம் சொல்கிறது என்றும் அது அனைவருக்குமானது என்றும் இவர்கள் எல்லாம் ஆதாரமில்லாமல் நழுவு கின்றனர். ஆனால் இந்து மதத்தின் அத்தாரிட்டியாக இவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் "சனாதனம் என்றால் இந்து மத சாஸ்திரங்களும் அவற்றில் கூறப் பட்டுள்ள வர்ணாஸ்ரமும்தான்" என்கிறார். தனது தெய்வத்தின் குரலில். சநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி - என்ற தலைப்பில் அவர் கூறுகையில்,
"நம் சனாதன சாஸ்திரங்கள் வரையறை செய்து தந்த சமூக பாகுபாடுகள் கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது. எனவே தரும சாஸ்திரங்களால் வாஸ் தவத்தில் ஏற்படாத கொடுமைகளை இவர்களாகக் கற்பித்துக் கொள்கிறார்கள். “நம் தேசத்தில் இன்னின்னார்தான் இன்னின்ன காரியம் செய்யலாம் என்ற அதிகார பேதத்தால் ஜனங்கள் பிரிந்து போனார்கள். இதனால் இந்து சமூகத்தில் ஒற்றுமையில்லை. இதனால்தான் அந்நிய தேசத்தார் பலமுறை ஜெயிக்க முடிந்தது என்று சொல்கிறார்கள். இது துளிகூடச் சரியில்லை. பொது எதிரி வந்தபோது நம் தேசத்து ராஜாக்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந் திருக்கலாம். ஆனால் ஜனங்களிடையே பரஸ்பர பேதம் இருந்து அவர்கள் எதிரிக்கு உதவியதாகச் சொல்வதற்குக் கொஞ்சம்கூட சாட்சியம் இல்லை.”
"பழைய தர்மங்களை எல்லாம் முறிவு படாமல் காப்பாற்றப் பிரயத்தனப்பட வேண்டும் என்று எங்களுக்கு சங்கர பகவத்பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக் கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும் நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள் லோக ஷேமம், ஆத்ம ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப் பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்.” (பக்கம் 283-284)
ஆக சனாதனம் என்றால் அது பழைய வர்ணாஸ்ர தர்மம்தான் என்று அத்தாரிட்டியே சொல்லி விட்டார்.. இந்து மதத்தின் ஆணிவேராகச் சொல்லியிருக்கும் வர்ணாஸ்ர தர்மம்தான் அன்றையிலிருந்து நேற்று வரை ஆட்சி செலுத்தியிருக்கிறது என்பதையும் தமிழர்களை அடிமைப்படுத்தியிருந்தது என்பதையும் அதற்கு ஆபத்து என்பதால் இன்றைக்கும் அதனைக் காப்பாற்றத் துடிக்கிறது ஆரியம் என்பதும்தான் வரலாறு.
மனிதருக்குள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி ஈராயிரம் ஆண்டுகளாக நடந்துவரும் இக்கொடுமைகளைச் சாடித்தான் வடலூர் வள்ளலார் இராமலிங்கனார் தன் இறுதிக் காலத்தில் பெற்ற தெளிவு காரணமாக அனைத்தையும் வெறுத்தார். அவர் நாத்திகரல்ல. இறை நம்பிக்கை உடையவர்தான். ஆறாம் திருமுறையில் தனது பெரு விண்ணப்பமாக அக்கடவுளுக்கு அவர் எழுதியுள்ள இவ்வரிகளே அவர் சனாதனத்திற்கு முற்றிலும் விரோதமானவர் என்பதை விளக்கும்.
”எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே!
இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத் தையும் பெரு மறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது பயிற்றுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுவதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய்க் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவரும் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து அத் தென்மொழியால் பலவகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.
அச்சிறு பருவத்திற்றானே ஜாதி ஆசாரம் ஆசிரம ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து என்னை மேல் திசையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்.
அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர். அவ்வாலிபப் பருவம் தோன்றிய போதே சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய் வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும் அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெய்வித்தருளினீர். அன்றியும் வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித் தருளினீர்.”
இப்படி சனாதனத்திற்குட்பட்ட அனைத்தையும் வள்ளலார் கடைப்பிடிக்காதபடி தடைசெய்வித்தவர் அவர் நம்பிய இவர்கள் நம்பும் கடவுள்தானே? அன்றி அவருக்கு அருளிய கடவுள் வேறு என்பார்களா?
வள்ளலாரின் தத்துவங்கட்கும் எண்ணங்கட்கும் நேர் எதிரானது ஆரிய மதத்திற்குரிய சனாதனம் என்பதும் அதனை அவரது கருத்துகளோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது என்பதையும் தெரிந்துகொண்டுதான் அரசியல் காரணங்களுக்காக ஆளுநரும் மடாதிபதிகளும் பேசுகின்றனர்.
ஆரியத்தின் இச்சூழ்ச்சி 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெறும் பெரியார் மண்ணில் கிஞ்சிற்றும் பலனளிக்காது என்பதையும் தமிழ் மக்கள் அதனைப் புறக்கணிப்பர் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment