அய்ந்தாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்கள் ஆட்சி ஏற்படுத்தப் பட்டது. அப்போது சமண, பவுத்த, ஆசீவகம் ஆகிய மதங்களே மக்களால் பெருமளவில் கடைப் பிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் பல்லவர்கள் காலத்தில் வைதீக மதம் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து சமணப் பள்ளிகளும், பவுத்த விகாரைகளும், ஆசீவக மடங்களும் மெல்ல மெல்ல வைதீகக் கோயில்களாக மாற்றப் பட்டன. வைதீகக் கடவுள்களைக் கற்பித்த வர்களே வைதீகக் கடவுள்களுக்கு அர்ச்சகர் களாக நியமிக்கப்பட்டனர். அதற்காக வட நாட்டிலிருந்து பார்ப்பனர்கள் குடும்பம் குடும்பமாக வரவழைக்கப்பட்டுத் தமிழ் நாட்டில் வந்து குடியேறினர்.
அப்படிக் குடியேறிய பார்ப்பனர்களுக்கு அவர்கள் சமூகம் சார்ந்து குடியிருக்கும் தொகுப்பு வீடுகள் மன்னர்களால் கட்டித் தரப்பட்டன. அவை ஊருக்கு நடுவில் பாதுகாப்பான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனித்தனி வீடுகளாக அல்லாமல் வட்ட வடிவம் அல்லது அரை வட்டமாக, பார்ப்பனர் குடியிருப்பாக அமைக்கப் பட்டன. ஒரு வீடாக அல்லாமல் ஒரு தொகுப்பாக அதாவது ஆரமாக (வட்டமாக) அமைக்கப்பட்டன. அதனால் அது ஒரு தொகுப்புக் குடியிருப்பு என்பதைக் குறிப்பதற்கும், தனி வீடு அல்ல என்பதைக் குறிப்பதற்கும் அ + கிரகம் (தனி வீடு அல்ல) என்று அழைக்கப்பட்டது.
பொதுவாக வடமொழியில் ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லை எதிர் மறையாகக் குறிக்க அச்சொல்லுக்கு முன்பு 'அ' சேர்ப்பது வழக்கம். (எடுத்துக் காட்டாக நியாயம் - அநியாயம், கிரமம் - அக்கிரமம்) அதாவது தனி வீடில்லாத ஒரு குடியிருப்புத் தொகுப்பு என்பதன் பொருள் தான் அ+க்ரஹ+ஆரம் என்ற சொல்.
கிரகம் என்பது வீடு. இன்றைக்கும் கிரகப் பிரவேசம் (கிருஹப்பிரவேசம்) தமிழர்களிடத் தில் இருந்து கொண்டிருக்கிறது. ஆரம் (அரை வட்டம்) என்பது தமிழ்ச் சொல் தான். அது வடமொழியில் ஹாரமாகத் திரிந்து போனது. இப்படியாகத்தான் பார்ப்பனர்கள் தங் களுக்கான தொகுப்பு வீடுகளை அரசர்களிடம் தானம் பெற்று உருவாக்கிக் கொண்டனர். அதுவே அக்கிரகாரம் - அக்ரஹாரம் - அ + க்ரஹ + ஹாரம்.
இது மட்டுமல்ல. அவர்களுக்கு எல்லாமே தானம் தான். மன்னர்களிடம் ஊர்களையும், நிலங்களையும் உழவர் குடிமக்களோடு சேர்த்துத் தானமாகப் பெற்றனர். அவற்றைச் சதுர்வேதி மங்கலங்கள் என்று பட்டயங்களாக ஆக்கிக் கொடுத்த நிகழ்வுகள், பல்லவர் காலம் தொடங்கி சோழர்கள் காலத்திலும் தொடர்ந்தது என்பது தனிக்கதை.
முனைவர் சிவ இளங்கோ - புதுச்சேரி
No comments:
Post a Comment