பாரீர்! பாரீர்! கோயில் திருவிழாவின் யோக்கியதையை ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அடிதடி கலாட்டா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

பாரீர்! பாரீர்! கோயில் திருவிழாவின் யோக்கியதையை ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அடிதடி கலாட்டா

மதுரை, ஜூன் 6 - மதுரை கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச் சியில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்த நிகழ்வில் 30 இரு சக்கர வாகனங்கள், கார் உடைக்கப்பட்டன.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காளமேக பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட் களாக வைகாசி பெருந்திருவிழா நடந்து வருகிறது. 2.6.2023 மாலை தேர் ஊர்வலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் முன்பு மெயின்ரோட்டில் உள்ள கலையரங்கத்தில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது இருதரப் பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள்  நள்ளிரவில் ஆயுதங்களு டன் புகுந்தனர். அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்த வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

இதில் 30-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் சேதமானது. இதை தடுக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த செந்தில்குமார், செல்வகுமார் உள்பட 3 பேர் மீது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு அவர்கள் கொலை மிரட் டல் விடுத்துவிட்டு தப்பினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காய மடைந்த 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலால் திருமோகூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட காவல்துறை தலைவர் சிவபிரசாத், துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சீதாராமன், ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் ஏராளமான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏராளமானோர் வலியுறுத்தினர். அவர்களிடம் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் தொடர்பாக 23 பேர் மீது ஒத்தக்கடை காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பதற்றம் நிலவுவதால் திருமோகூர் பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவிலில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறால், நடந்த இந்த மோதல் சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment