ம.பி.யில் பிஜேபி கரைகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

ம.பி.யில் பிஜேபி கரைகிறது!

போபால், ஜூன் 20 - முன்பு காங்கிரசில் இருந்து பின்னர் அதிருப்தி அடைந்து பா.ஜ.,வில் சேர்ந்த பைஜ்நாத் சிங் என்பவர், தற்போது 400 கார்களுடன் படைசூழ ஊர்வல மாக வந்து மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். இந்த காட்சிப் பதிவு வைரலாகியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் சில அதிருப்தி சட்டமன்ற உறுப் பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கடந்த 2020இல் பா.ஜ.,வில் சேர்ந்தனர்.

இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சி அமைத்தது. அப்போது பைஜ்நாத் சிங் என்பவரும் காங் கிரசில் இருந்து பா.ஜ.,வில் இணைந்தார். இவர் ஷிவ்புரி பகுதியில் செல்வாக்கு மிக்க நபர் எனக் கூறப்படுகிறது. இதில் ஜோதிராதித்ய சிந்தியா ஒன்றிய அமைச்சரானார்.

பா.ஜ.,விற்காக கடுமையாக உழைத்த பைஜ்நாத் சிங், இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 'சீட்' கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார். ஆனால், அதற்கான எந்தவித நகர்வும் இல்லாததால், அதிருப்தியடைந்த பைஜர்நாத், மீண்டும் காங்கிரசில் இணைய முடிவு செய்தார்.

இதனையடுத்து ஷிவ்புரியில் இருந்து போபாலில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் வரையிலான சுமார் 300 கி.மீ தூரத்திற்கு பா.ஜ.,வின் 15 மாவட்ட தலைவர்களுடன் 400 கார்களுடன் படைசூழ ஊர்வலமாக சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், திக் விஜய் சிங் தலைமையில் காங்கிரசில் இணைந்தார்.

No comments:

Post a Comment