கம்பனின் எடிட்டிங் இன்றும் தொடர்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

கம்பனின் எடிட்டிங் இன்றும் தொடர்கிறது!

பாணன்

”சிரிப்புக்கு கேரண்டி”

2024ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் சரி பாதி மக்கள் மனதில் மதவாத போதையை முழுமையாக ஏற்றிவிட வேண்டும்  என்ற உச்சக்கட்ட வெறி ஹிந்துத்துவ அமைப்பு களுக்கு. காரணம் 2025 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா. அந்த நாளில் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரா என்று அவர்களால் அழைக்கப்படும் ஹிந்து நாடு என்று அறிவிக்க அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்காக சாம - தண்ட - பேதம் எல்லாம் கடந்துவிடத் தயாராகி விட்டனர்.  அப்படி மதபோதை ஏற்றும் ஒரு கட்டமாக புரட்டு இதிகாசங்களை திரைப்படமாக்குவது. 

எப்படி 1990களில் தொலைக்காட்சியில் ராமாயணத்தை ஓடவிட்டு மக்கள் மனதில் மதவாத விதையைத் தூவினார்களோ அதே பாணியில் இப்போது இறங்கி உள்ளார். 

ஆனால் அது பூமாரங்க் பாணியில் அவர்களையே திருப்பி தாக்கிக் கொண் டுள்ளது. சமீபத்தில் ஒரு நகைச்சுவையான செய்திகளை தொலைக்காட்சி முதல் நாளிதழ் வரை பார்த்திருப்பீர்கள். அது திரையரங்கில் ஒரே ஒரு இருக்கை மட்டும் குரங்கிற்காக(அனுமான்) ஒதுக்கப்படுமாம். 

அது என்ன குரங்கிற்காக - ஆமாம். ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் ராமாயணம் பற்றியதாக இருந்தாலும், அனுமானை முக்கிய கதாப்பாத்திரமாக கொண்டு எடுத்த திரைப்படம். 

படம் வெளியாவதற்கு முன்பு ஹிந்து அமைப்புகள் வீட்டுக்கு வீடு சென்று டிக்கெட் விநியோகம் செய்தது, கோவில்களில் அந்தப் படத்தின் பதாகைகள் வைத்து பூஜை செய்யப்பட்டது. உச்சக் கட்டமாக ராமர் சீதை வேடம் அணிந்து தியேட்டர் முன்பு அமர வைத்து பூஜை - பஜனை எல்லாம் பாடினார்கள். 

திரையரங்கம் உடைந்தது!

ஆனால் திரைப்படம் வெளியாகியது. சென்று பார்த்தார்கள், வெளியே வந்து தியேட்டரை உடைத்தார்கள். ராமர் படத்தை பார்த்துவிட்டு வெளியேவந்து தியேட்டரை உடைத்தவர்கள் வேறு யாருமல்ல அதே ராமபக்த அனுமான்கள்தான்.

என்ன என்று கேட்டால் ராமர் ஏசு போல் இருக்கிறாராம், தசரதன் கிறிஸ்வர் தோற்றத்தில் இருக்கிறாராம்.

இருந்துவிட்டுப் போகட்டும் என்பதோடு மட்டுமல்லாமல் முக்கியமாக அனுமான் அரு வருப்பான கொச்சை மொழி வசனங்கள் பேசுகிறார்.  விடுவார்களா? 

பிரதமரே கருநாடக தேர்தலில் “ஜெய் பஜ்ரங்கு பலி, ஜெய் பஜ்ரங்கு பலி” என்று கூவி வாக்கு சேகரித்தாரே, ஆனால் அங்கு பஜ்ரங்கு பலி காலை வாரிவிட்டது  அது வேறு கதை. ஆனால் பஜ்ரங்கு பலி பக்தர்கள் அதாவது பஜ்ரங்கு தள தொண்டர்கள் எங்கள் ராம பக்த அனுமான் எப்படி கொச்சை வார்த்தைகளைப் பேசுவார் என்று கிளம்பி விட்டார்கள்

ஹிந்துத்துவ அமைப்பினரின் பாணியில் அனுமார் பேசி உள்ளார்தானே.?   இப்போது அவர்களின் மொழியில் அனுமார் பேசினால் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. 

இந்த திரைப்பட வசனங்கள் ஹிந்து அமைப்பினரை மட்டும் புண் படுத்தவில்லை, நேபாள நாட்டையே அவமானப்படுத்தி உள்ளது. சீதை நேபாளத்தில் பிறந்ததாக கதை உள்ளது. அங்கு சீதைக்கு தனியாக கோவிலும் உள்ளது. ஆனால் ஆதிபுருஷ் படத்தில் சீதை இந்தியாவின் மகள் என்ற வசனம் இடம்பெற்று இருப்பதால் நேபாளத்தில் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்கள்.

நேபாள தலைநகரமான காத்மாண்டு, போக்ரா ஆகிய நகரங்களில் அனைத்து ஹிந்தி திரைப் படங்களுக்கும் தடை விதித்து அங்குள்ள மாநகர ஆட்சியாளர்கள் உத்தரவிட்டு உள்ளனர். ஆதிபுருஷ் படத்தில் உள்ள சர்ச்சை வசனத்தை நீக்கும் வரை நேபாளத்தில் அனைத்து ஹிந்தி படங்களுக்கான தடை தொடரும் என்றும் அறிவித்து உள்ளனர். 

அனுமான் அசிங்க மொழி பேசும் வசனத்தை எழுதிய வசனகர்த்தா  மனோஜ் முன்டாஷிர் சுக்லா  ஹிந்துத்துவ அமைப் பினரிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட் டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்ப தாகவும், அளித்த புகாரின் பேரில் மும்பை காவல்துறை அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

ஆதிபுருஷ் படத்திற்கு தடை? 

அவசர வழக்காக விசாரிக்க மறுத்த டில்லி நீதிமன்றம்! 

இந்த நிலையில் ராமாயணத்தை தவறாக சித்தரித்து விட்டனர். படத்தில் வசனங்கள் தவறாக இருக்கிறது என கூறி இப்படத்திற்கு தடை கேட்டு ஹிந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் இந்த வழக்கை அவசரவழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது

மோடிக்கு கடிதம்

பிரதமர் மோடிக்கு ஆதிபுருஷ் திரைப் படத்தைத் தடை செய்யக் கோரி அனைத் திந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில்: “ஆதிபுருஷ் படத் தில் ராமர், அனுமனை வீடியோ கேம் கதா பாத்திரம் போலச் சித்தரித்தும் அவதூறு செய்யும் வகையிலும் படத்தில் வசனம் இடம் பெற்றிருப்பது உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதைப் புண்படுத்துகிறது. சனாதன தர்மத்தை அவமதிக்கும் இந்தப் படத்தை உடனே தடை செய்ய வேண்டும். ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ராவணரை கொடூரமாக காட்டியுள்ளனர் 

இப்படி போய்கொண்டு இருக்க ஹிந்தியில் மார்க்கெட் இழந்த பார்ப்பன திரைப்பட நடிகருக்கு மற்றொரு ஆதங்கம். முகேஷ் கன்னா என்ற  நடிகர் கூறும் போது ராவணன்  இவ்வளவு மோசமாக கொடூரமானவராக ஏன் சித்தரிக்கவேண்டும். ராவணர் ஒரு பார்ப்பனர், ஒரு பார்ப்பனரே மற்றொரு பார்ப்பனரான ராவணனை  மோசமாக எப்படி சித்தரிக்க முடியும்  என்று புலம்புகிறார். 

சில ஹிந்து அமைப்புகள் இந்தப் படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகான்  ஏற்கெனவே லவ் ஜிகாத் மோசடி செய்துதான் ஹிந்தி நடிகையை திருமணம் செய்துள்ளார். ஆகவே அவர் வேண்டுமென்றே  இப்படத்தை மோச மாக்கி உள்ளார் என்றும் ராவணனாக நடிக்க ஒரு முஸ்லீம் சயிப் அலிகான்தான் கிடைத்தாரா?. ஹ்ந்து  நடிகர் யாருமே கிடைக்கவில்லையா?.  என்றார்.

ஹிந்துத்துவ நடிகை கங்கனாரானவாத் கூறுவது மேலும் காமெடி

​ராமாயணத்தில் வந்த இலங்கை தங்கத் தால் ஆனது. ஆனால் ஆதிபுருஷ் படத்தில் கருப்பாக்கிவிட்டார்கள். படத்தில் வந்த போர் காட்சிகளை பார்த்தால் குழாயடி சண்டை போடுவது போன்று உள்ளது. ராமாயணத்தை அவமதித்துள்ளது

படம் காமெடியாக, ஜாலியாக இருந்ததாக சிலர் கூறுகின்றனர். ராமாயணம் எப்படிப்பா காமெடியாக இருக்கும் என தோன்றியது. இந்தப் படத்தை விட மிக மோசமான டிராமா கிடையாது. ஆதிபுருஷை விட ராமாயணத்திற்கு வேறு மிகப் பெரிய அவமரியாதை இருக்க முடியாது என கொந்தளித்துள்ளார்

இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கம்பன் செய்த அதே பட்டி டிங்கர் வேலையை தமிழிலும் செய்து உள்ளார்கள்.  அதாவது ஹிந்தியில் அனுமான் பேசும் பல கொச்சை வசனங்கள் தமிழில் இல்லை.  ஒருவேளை வடக்கு ரசிகர்கள் அனுமான் கொச்சை வசனம் பேசுவதை விரும்புவார்கள் தெற்கே கொந்தளிப்பு ஏற்படும் என்று நினைத்தார் களோ என்னவோ பல காட்சிகளை கத் தரித்து மோசமான வார்த்தைகளை நீக்கி தெற்கில் வெளியிட்டார்கள். ஆனால், என்னவோ தென்னகத்தில் தியேட்டருக்கு அனுமானுக்கு ஒரு சீட் மட்டுமல்ல ஒட்டு மொத்த திரையரங்கின் இருக்கைகளையே தென்னகத்தார் ஒதுக்கிவிட்டனர். 

தெற்கில் பல காட்சிகள் ஆட்கள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடவேண்டிய சூழல் திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு ஏற் பட்டது. 

 மேலும் சில நகைச்சுவை நிகழ்வுகள்

போபாலில் உள்ள ஒரு திரையரங்கில் அனுமானின் இருக்கைக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்த போது தீப்பற்றியது அதில் ஒருவரிசை இருக்கைகள் முழுமையுமே எரிந்து நாசமானது. இதனால் 4 நாள் திரையரங்கம் மூடப்பட்டது.

அரித்துவாரில் குரங்காட்டி ஒருவரிடம் 400 ரூபாய் கொடுத்து குரங்கை தூக்கிவந்து அனுமானுக்கு ஒதுக்கிய சீட்டில் உட்கார வைத்தனர். அதுவோ வாழைப் பழத்தையும் தேங்காயையும் சாப்பிட்டு விட்டு திரையரங்கில் அங்கும் இங்கும் ஓட படம் பார்த்தவர்கள் பீதியில் ஆழ்ந்துவிட்டனர். பிறகு குரங்காட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடி குரங்கை அழைத்துச் செல்லக் கூறினார்கள். ஆனால், நாளிதழ் செய்தியிலோ திரைப்படத்தை நேரில் பார்க்க வந்த அனுமான் என்று எழுதி இருந்தார்கள்.

ஆந்திராவில் ஹிந்து அமைப்பினர் திரையரங்கை உடைத்து சூறையாடினர். ஏன் என்றால் அந்தப் படத்தில் ராமாயண கதாப் பாத்திரங்கள் அனைத்தும் கிறிஸ்துவ சாமிகளைப் போல் உள்ளதாம். ஹிந்து கலாச்சாரத்தின் படி இல்லையாம்.

எல்லாவற்றையும் விட ஒரு பெருங்கூத்து என்னவென்றால் ஹிந்து சமத சேனா என்ற அமைப்பு அய்.நா. சபைக்கு இந்தப் படம் உலக ஹிந்துக்களின் மனதை புண் படுத்துகிறது ஆகவே, இதை உலகம் முழுவதும் தடை செய்யுங்கள் என்று கடிதம் எழுதியது. அது மட்டுமல்லாமல் மும்பையில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் அனுமான் வேடம் போட்ட ஒருவரை அழைத்துவந்து திரைப் படத்தை பார்க்க வேண்டாம் என்று கூற வைத்துள்ளனர். 

இவ்வளவு கூத்துகள் நடந்துகொண்டு இருக்க இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயராகிக்கொண்டு இருக்கிறதாம். சங்கிகளின் உலகமே தனியானது - அதில் இது ஒருரகம்.

No comments:

Post a Comment