அமர்நாத் சிவலிங்கம் என்பது ஒரு சீசன் கடவுள். பனிக் காலத்தில் பனி உறைந்து ஓர் உருவம் தோன்றும். அதுதான் சிவலிங்கமாம். பனிக்காலம் போனபின் வெயிலால் பனி உருகி சீசன் கடவுள் காணாமல் போய்விடுவார்.
இந்த சாதாரண அறிவுகூட இல்லாமல் - குறிப்பிட்ட சீசனில் பக்தர்கள், யாத்திரீகர்கள் குவிவதால் பிசினஸ் 'பலே பலே' என்று நடக்கும் - பக்தி பிசினஸ் ஆகி விட்டது என்று கூறிய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி யின் வாயில் சர்க் கரையைத்தான் அள்ளிக் கொட்ட வேண்டும்.
தினமலரில் ஒரு செய்தி:
யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள் கண்டிப்பாக அசைவ உணவு சாப்பிடக் கூடாது. காரணம் என்ன தெரியுமா? கடந்த ஆண்டு நடந்த யாத்திரையின் போது உடல் உபாதைகள், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளால் 42 பக்தர்கள் இறந்தனர் என்று "தினமலரே" (10.6.2023 பக்.12) செய்தி வெளியிட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 12,500 அடி உயரத்தில் குகையில் பனி உறைவதால் தோன்றும் உருவத்திற்கு சிவலிங்கம் என்று பெயர் சூட்டி, எப்படி எல்லாம் மக்களைச் சுரண்டுகிறார்கள் பார்த்தீர்களா?
கடவுள் என்றால் எப்பொழுதும் இருக்க வேண்டியவர்தானே! அது என்ன ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டும் ஒரு கடவுள்.
சரி, கடவுளாகவே இருந்து தொலையட்டும். தன்னை நாடி வந்த பக்தர்கள் உடல் ஒவ்வாமையால், உபாதையால் 42 பேர் செத்திருக்கிறார்களே?
உண்மையிலேயே அமர்நாத் சீசன் சிவனுக்கு சக்தி இருந்தால் தன்னை நம்பி நாடி வந்த பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்றிடத் துப்பு இல்லாமல் போனது பற்றிச் சிந்திக்க வேண்டாமா? அசைவ உணவு சாப்பிட்டதால் தான் செத்தார்கள் என்பது எத்தகைய மாய்மாலம்!
புத்தி வந்தால் பக்தி போகும், பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய துல்லியமானது என்பதை மக்கள் சிந்திப்பார்களா?
- மயிலாடன்
No comments:
Post a Comment