சிந்திக்கும் உரிமையையே பறித்துவிட்டனர் பார்ப்பனர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

சிந்திக்கும் உரிமையையே பறித்துவிட்டனர் பார்ப்பனர்!

“நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லி விட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பதும் நல்ல பழக்கங்களையும், அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும். ஆனால், என்ன குறை என்றால் நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர்களாக நம்மைச் செய்துவிட்டது. இந்தப்படியான சிந்திக்கும் தன்மையற்ற மக்களை மாற்றி, அவர்களைச் சிந்திக்கத் தூண்டி சிந்தனைப் பாதையிலே அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.

நமக்குத் தனிப்பட்ட முறையில் எவரிடமும் விரோதமோ குரோதமோ கிடையாது. நம்மை அடிமைப் படுத்தியிருக்கின்ற அடிமைத் தளைகளினின்றும் விடுதலை பெறவே முயற்சிக்கிறோம். நம்மை யார் அடக்கி அடிமைப்படுத்தி இழி மக்களாக ஆக்கி வைத்திருக்கிறார்களோ, அவர்களையே கேட்டோம்; “இந்த நாட்டின் உரிமையாளர்கள் நாங்கள்; சொந்தக்காரர்கள் நாங்கள்; இன்றும் நாட்டுப் பெரும்பகுதி மக்கள் நாங்கள்தான்; இத்தகையதொரு மாபெரும் சமுதாயத்தையே மடத்தனத்தில் ஆழ்த்தி எல்லாத் துறைகளிலும் எங்களை அழுத்தி வருகிறீர்களே பார்ப்பனர்களே! இது தவறு; எங்களின் உரிமையை நாங்கள் பெறவிடுங்கள்!” என்று கேட்டுக் கொண்டோம்! பலமுறை அமைதியான முறையிலே அழகான தன்மையிலே கேட்டுக்கொண்டோம்; ஆனால் நாம் எவ்வளவோ பெருந்தன்மையுடன் சொல்லி வந்துங்கூட இதற்குப் பலன் செய்வதுபோல பார்ப்பனர்கள் மேலும் மேலும் நம்மை அடக்குவதையே லட்சியமாகக் கொண்டு சகல காரியங்களையும் செய்து வந்தனர்.

இந்த நாட்டிலேயே பார்ப்பனர் என்ற பிரிவு மக்கள் இருக்கும் வரையிலே நம்மவர் எத்துறையிலும் ஏற்றங்காண வியலாது என்ற நியாயமான முடிவுக்கு வந்து நின்று “பார்ப்பானே வெளியேறு” என்ற அளவுக்கு வந்திருக்கிறோம். ( பெரியார்,  ‘விடுதலை’ - 12.2.1959 )

No comments:

Post a Comment