சுயமரியாதை இயக்கம் என்பது நம்மையெல்லாம் மனிதர்களாக ஆக்குவது!
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மையெல்லாம் அடிமைகளாக வைத்திருந்தார்கள்!
நம்மை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்குமுன்பு புகுத்திய திருமண முறைதான் சுயமரியாதைத் திருமண முறை!
அரக்கோணம், ஜூன் 26 ஒரே கொடி - ஒரே தலைவர் - ஒரே கொள்கை - அதில் மாறுபடாத கட்டுப்பாடு - இவற்றை வைத்துக் கொண்டிருக்கின்ற இயக்கம்தான் இந்த இயக்கம். நம்முடைய தோழர் எல்லப்பன் அவர்கள், இந்த இயக்கத்திற்குக் கிடைத்த ஓர் அற்புதமான கொள்கைக் கருவூலம்; சுயமரியாதை இயக்கம் என்பது நம்மையெல்லாம் மனிதர்களாக ஆக்குவது. குறிப்பாக, எப்படி நம்மையெல்லாம் அடிமை களாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வைத்திருந் தார்களோ, அந்த அடிமைத்தனத்தைப் போக்குவதற்காக தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால், புகுத்திய திருமண முறை இது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள் பிரபாகரன் - மகாலட்சுமி
கடந்த 22.5.2023 அன்று அரக்கோணத்தில் நடை பெற்ற மணவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
வேலூர் இராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர் அருமைத் தோழர் குமரேசன் அவர்களே, மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களே, திராவிடர் கழக மாநில சட்டத்துறை தலைவர் த.வீரசேகரன் அவர்களே, மாவட்டக் காப்பாளர் தோழர் சடகோபன் அவர்களே, தலைமைக் கழக அமைப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் அவர்களே, தே.செ.கோபால் அவர்களே, அரக்கோணம் மாவட்டத் தலைவர் தோழர் லோகநாதன் அவர்களே, மாவட்ட செயலாளர் கோபி அவர்களே, மாவட்ட அமைப்பாளர் ஜீவன்தாஸ் அவர் களே, பொதுக்குழு உறுப்பினர் சூரியகுமார் அவர்களே, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன் அவர்களே, பெரியார் பெருந்தொண்டர் பொதட்டூர் புவியரசன் அவர்களே, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களே, வடசென்னை மாவட்ட செயலாளர் கணேசன் அவர்களே, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் அருண்குமார் அவர்களே, சுரேசு அவர்களே, மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற வேலூர் மாவட்டத் தலைவர் அன்பரசன் அவர்களே, காஞ்சி மாவட்டக் காப்பாளர் டி.ஏ.ஜி. அசோகன் அவர்களே, வழக்குரைஞர் சென்னியப்பன் அவர்களே, நல்லாசிரியர் புலவர் பாண்டியன் அவர்களே மற்றும் திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தோழர் மோகன்ராஜ் அவர்களே,
திருவள்ளூர் மாவட்டக் கழகத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி அவர்களே, மாவட்டச் செயலாளர் அறிவுச்செல் வன் அவர்களே, செய்யாறு மாவட்டத் தலைவர் தோழர் இளங்கோவன் அவர்களே, அருமைத் தோழர்களே, வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய இயக்க மற்றும் இயக்கத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்ச் சமுதாய சான்றோர்ப் பெருமக்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லப்பன், இயக்கத்திற்குக் கிடைத்த
ஓர் அற்புதமான கொள்கைக் கருவூலம்
அருமை நண்பர்கள் எல்லப்பன் - புஷ்பா ஆகியோரின் செல்வன் பிரபாகரன் அவர் களுக்கும், இராணிப்பேட்டை மாவட்டம் சம்பத்து ராயன் பேட்டை சதீஷ் - கோகிலா ஆகியோரின் செல்வி மகாலட்சுமி பிஎச்.டி., அவர்களுக்கும் நடைபெறக்கூடிய வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமை தாங்கி நடத்தி வைப்பதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
காரணம், நம்முடைய தோழர் எல்லப்பன் அவர்கள், இந்த இயக்கத்திற்குக் கிடைத்த ஓர் அற்புதமான கொள்கைக் கருவூலம்.
எந்தப் பணியை செய்தாலும், அவர் இளை ஞரணியில் இருந்த காலந்தொட்டு, இன்றுவரையில் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர். குடும்ப ரீதியாக, அவரும் சரி, அவருடைய வாழ் விணையர் புஷ்பா அவர்களும் சரி, அவருடைய மகன் பிரபாகரன் ஆனாலும் அவருடைய மகள் ஆனாலும், அருமையான கொள்கை வீரர்கள் - இந்த இயக்கத்திற்கு.
இயக்கத்தை நடத்துவதில்
கட்டுப்பாடு மிகுந்தவர்கள்!
மணமகன் கருப்புச் சட்டை அணிந்துதான் அமர்ந் திருக்கிறார். அரக்கோணத்திற்கு வந்து நான் திரும்பும் போது, மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும்தான் திரும்புவேன். ஏனென்றால், எந்தக் குதர்க்கமும் அவர்களுக்குச் செய்து பழக்கம் கிடையாது. இயக்கத்தை நடத்துவதில் கட்டுப்பாடு மிகுந்தவர்கள்.
தலைமை என்ன சொல்லுகிறது - கொள்கை எப்படி செயலாக்கம் அடையும்- இயக்கம் என்ன ஆணையிடு கிறது - இவற்றை மட்டுமே சிந்திக்கக்கூடிய அற்புதமான எடுத்துக்காட்டான ஒரு லட்சியத் தொண்டர் தோழர் எல்லப்பன் அவர்கள்.
அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, மாறுபாடு இல்லாமல், ஓர் உருவம் போன்று - நாலைந்து பேராக இருந்தாலும் - ஒன்றாக இருக்கக்கூடியவர்கள். ஜீவன்தாஸ் அவர்களானாலும், சூரியகுமார் அவர்களா னாலும், லோகநாதன் அவர்களானாலும், இன்னும் வரிசையாக தோழர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்; நேரமின்மையால் நான் ஒரு சிலரின் பெயர்களை மட்டும் சொல்கிறேன்.
வரும்போது எல்லோரும் ஒன்றாகத்தான் வருவார் கள்; ஒன்றாகத்தான் இயக்கப் பணிகளை செய்வார்கள். என்னிடம் தேதி கேட்பார்கள்.
அவர்கள் மணவிழாவிற்குத் தேதி கேட்டவுடன், எனக்கு உடல்நலக் குறைவு, பணிகள், சுமைகள் இருந்தாலும், மறுக்காமல் ஒப்புக்கொண்டேன்.
பல மாவட்டத் தோழர்கள், மாவட்டப் பொறுப்பாளர் கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறீர்கள். இயக்கத்திற்குக் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறீர்கள்.
எல்லப்பன் - புஷ்பா ஆகியோரின் மணவிழாவினை
34 ஆண்டுகளுக்கு முன்பு
நடத்தி வைத்தேன்!
ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால், ஒரு பெரிய அரிய வாய்ப்பு - அருமை நண்பர் மணமகன் பிரபாகரன் - மணமகள் மகாலட்சுமி ஆகியோரின் மணவிழாவை நடத்தி வைக்கின்ற வாய்ப்பை இன்றைக்கு நான் பெற்றிருக்கிறேன்.
எல்லப்பன் - புஷ்பா ஆகியோரின் மணவிழா வினை 34 ஆண்டுகளுக்கு முன்பு நான்தான் நடத்தி வைத்தேன்.
நிச்சயமாக, உங்களுடைய பேரப் பிள்ளை களுக்கும் மணவிழாவினை நான்தான் நடத்தி வைப்பேன். இது ஒன்றும் பேராசையால் நான் சொல்லவில்லை. அல்லது நீண்ட நாள் வாழ்வேன் என்பதற்காகச் சொல்லவில்லை. இந்தக் கொள்கை வயப்பட்டவர்கள், இந்தக் கொள்கையிலிருந்து மாறாதவர்கள் என்பதுதான் மிக முக்கியம் வாய்ந்ததாகும்.
4.12.1989 ஆம் ஆண்டு என்னுடைய தலை மையில்தான் எல்லப்பன் - புஷ்பா ஆகி யோரின் மணவிழா நடைபெற்றது.
பெரியார் கொள்கையைப் பின்பற்றியவர்கள் யாரும் வீழ்ந்துவிட மாட்டார்கள்!
பல பேருக்கு, வயதானவர்களுக்கு அல்லது வைதீக உணர்வு படைத்தவர்களுக்கெல்லாம் - இதுபோன்று திருமணம் நடக்கிறதே, சடங்கு இல்லையே, சம்பிரதாயம் இல்லையே, அய்யர் வரவில்லையே, மந்திரம் ஓத வில்லையே, நெருப்பைச் சுற்றி வரவில்லையே, அதனால் என்னாகுமோ என்று பயந்தார்கள் பாருங்கள் - ஒன்றும் ஆகாது - நாங்கள் நன்றாக இருக்கின்றோம் என்று காட்டுவதற்காகத்தான் மாநாடு போன்று இம் மணவிழா நடைபெறுகிறது.
பெரியார் கொள்கையைப் பின்பற்றியவர்கள் யாரும் வீழ்ந்துவிட மாட்டார்கள்; வாழ்ந்து காட்டுவதற்கு என்பதற்கு அடையாளம்தான் இந்த மணவிழா!
என்னுடைய தலைமையில், மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை மணவிழாக்களை நடத்தி வைத்திருக்கிறேன்.
இவர்களுடைய பேரப் பிள்ளைகளுக்கும் மணவிழா வினை நான் நடத்தி வைப்பேன் என்று சொல்வதின் நோக்கம் - நான் அவ்வளவு காலம் வாழவேண்டும் என்கிற எண்ணத்தில் சொல்லவில்லை - இந்தக் கொள் கைகளில் இருந்து அவர்கள் மாறாமாட்டார்கள் என்பதால்தான்.
‘‘இப்பொழுது நீங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள்?'' என்று சிலரைப் பார்த்துக் கேட்பார்கள்.
எல்லப்பனைப் பார்த்தோ, கருப்புச் சட்டைக்காரர் களைப் பார்த்தோ இந்தக் கேள்வியை யாரும் கேட்கமாட்டார்கள்.
ஒரே கொடி - ஒரே தலைவர் -
ஒரே கொள்கை!
ஒரே கொடி - ஒரே தலைவர் - ஒரே கொள்கை - அதில் மாறுபடாத கட்டுப்பாடு - இவற்றை வைத்துக் கொண்டிருக்கின்ற இயக்கம்தான் இந்த இயக்கம்.
இதைப் புரிந்துகொள்ளாதவர்கள், இந்த இயக்கத்தி லிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள் வார்கள். அதை நாங்கள் செய்யவேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால், இந்த இயக்கம் அப்படிப்பட்ட இயக்கம். ஒரு கொள்கைப் பட்டறை - அந்தக் கொள்கைப் பட்டறையினுடைய வீச்சு என்து வளர, வளர, வளர, இன்றைக்கு இளைஞர்கள் இந்த இயக்கத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.
எல்லப்பன் இல்லத்து மணவிழா இந்த முறையில் நடைபெறுவது என்பது ஒரு பெரிய அதிசயமில்லை. ஆனால், எல்லப்பன் அவர்களுடைய சம்பந்தியை நாம் பாராட்டவேண்டும். அவருடைய குடும்பத்தினரைப் பாராட்டவேண்டும்.
எல்லப்பன் போன்று கருப்புச் சட்டை அணிந்து இயக்கப் பணியை செய்பவர்கள் அல்ல. ஆனாலும், இந்தக் கொள்கைக்கு மாறுபட்டவர்கள் அல்ல அவர்கள்.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்!
ஏனென்றால், தமிழன் தமிழனாக இருக்கவேண்டும்; திராவிடன், திராவிடனாக இருக்கவேண்டும்; மனிதன் மானமுள்ளவனாக இருக்கவேண்டும். அறிவுள்ளவனாக இருக்கவேண்டும்; பகுத்தறிவைப் பயன்படுத்தவேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதற்காக அவர்களைப் பாராட்டவேண்டும்.
இரண்டு குடும்பங்கள் இங்கே இணைகின்றன. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
சுயமரியாதைத் திருமணத்தை சடங்கில்லாமல், பார்ப்பனர்களை அழைக்காமல், சம்பிரதாயம் இல்லாமல் நடத்தவேண்டும் என்றார் தந்தை பெரியார்.
வாழ்க்கையில் துணிச்சல்காரர்களாக இருக்க வேண்டும்; கோழைகளாக இருக்கக் கூடாது. அடி யெடுத்து வைக்கும்பொழுதே, உறுதியான அடியெடுத்து வைத்தால், அவர்கள் சறுக்கிவிட மாட்டார்கள்; கீழே விழுந்துவிட மாட்டார்கள். உறுதியாக நிற்பார்கள், வேகமாக நடப்பார்கள். அவை உறுதியான கால்கள்.
கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி ஏற்படாது!
அதுபோன்று கொள்கையில் உறுதியாக இருப்பவர் களுக்கு வாழ்க்கையில் தோல்வி ஏற்படாது. அதுதான் மிக முக்கியான ஓர் அடிப்படை.
பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார்கள். மணமகன் பிரபாகரன் அவர்கள் பெரியார் பாலிடெக் னிக்கில்தான் படித்தார். அது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.
ஏனென்றால், கொள்கைக் குடும்பத்திலும் நான் உறவுக்காரன்; கல்விக் குடும்பத்திலும் நான் உறவுக்காரன். ஆகவே, மகிழ்ச்சியாக இந்த மணவிழாவை நடத்தி வைக்கிறேன்.
இதுபோன்ற திருமணம் நூறாண்டுகளுக்கு முன்பு உண்டா? என்றால், கிடையாது. தமிழ்நாட்டில் கிடையாது. ஆனால், 200 ஆண்டுகளுக்கு முன்னால், நம்முடைய தொடக்கக் காலத்தில், தமிழர்களுடைய பண்பாடு, சங்க இலக்கியம் என்றெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள், அதில் திராவிடப் பண்பாடு. ஆரியம் ஊடுருவதற்கு முன்பு - பார்ப்பனியம் இந்த நாட்டில் காலூன்றுவதற்கு முன்பு என்ன சூழ்நிலை என்று சொன்னால் நண்பர்களே, அந்தக் காலகட்டத்தில் நமக்கு ஜாதி கிடையாது - வேறுபாடுகள் கிடையாது - பார்ப்பனர்களை அழைத்து சடங்கு, அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது, நெருப்பைக் கொளுத்தி ஹோமம் வளர்ப்பது எல்லாம் கிடையாது. இவையெல்லாம் இடையில் வந்ததுதான்.
இவ்வளவு பேர் இங்கே அமர்ந்திருக்கிறீர்களே, நீங்கள் எல்லோரும் நான் என்ன பேசுகிறேன் என்பதை, தோழர்கள் இங்கே என்ன பேசினார்கள் என்பதைக் கேட்டுப் புரிந்துகொள்கிறீர்கள். இதை ஏற்கிறீர்களா? என்பது முக்கியமல்ல. ஏற்கலாம், ஏற்காமல் போகலாம் - அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.
பார்ப்பனர் மந்திரம் சொன்னார் என்றால்,
அது உங்களுக்குப் புரியுமா?
ஆனால், நாங்கள் என்ன பேசுகிறோம் என்று உங்களுக்குப் புரிகிறது - கேட்கிறீர்கள். ஆனால், பார்ப்பனர் மந்திரம் சொன்னார் என்றால், அது உங்களுக்குப் புரியுமா? அவர் என்ன சொல்கிறார் என்று புரியுமா? நமக்குப் புரியவேண்டாம் - யாருக்காக மந்திரம் சொல்கிறாரோ, அந்த மணமக்களுக்காவது புரிய வேண்டுமா, இல்லையா? புரியவில்லையே!
சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்கிறான்.
நம்முடைய தாய்மொழியில் திருமணத்தை நடத்தி வைத்தால், அது உகந்ததல்ல; அது சாஸ்திர விரோதம்; அது சம்பிரதாயத்திற்கு விரோதம்; அது சனாதனத்திற்கு விரோதாம் என்று சொன்னால், அது அறிவுடைமையா? ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் எழுதிய புத்தகத்தில் சடங்கு என்ன? சம்பிரதாயம் என்ன? என்பதைப்பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இதை நாங்கள் சொல்லவில்லை. பெரியார் சொன் னால், பெரியார் எப்பொழுதுமே பார்ப்பானைப்பற்றி அப்படித்தான் சொல்வார்; திராவிடர் கழகத்துக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று நினைப்பார்கள்.
இங்கே வாழ்க்கை இணையேற்பு விழா - இரண்டு பேருக்கும் ஒப்பந்த விழா. ஒருவருக்கொருவர் நண்பர் களாக வாழ்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்.
கன்னிகாதானம் என்றால் என்ன?
ஆனால், சமஸ்கிருதத்தில் இருக்கின்ற வார்த்தை யைப் பாருங்கள் - விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை என்று அடிப்பார்கள். கன்னிகாதானம் செய்விக்க பெரியோர்களால் நிச்சயித்தபடி என்று போடுவார்கள். பாணிக்கிரஹணம் செய்வதினால், தாரா முகூர்த்தம் செய்வதினால் என்று வார்த்தைகளைப் போடுவார்கள்.
கன்னிகாதானம் என்றால் என்ன? தானம் கொடுப்பது. ஒரு பொருளை தானமாகக் கொடுப்பது.
என் பையில் இருக்கின்ற பேனாவை அன்பளிப்பாக நான் ஒருவருக்குக் கொடுத்தால், தானம் கொடுக்கிறேன் என்று அதற்கு அர்த்தம்.
தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால், புகுத்திய திருமண முறை
பெண்கள், தாய்மார்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் என்பது நம்மையெல்லாம் மனிதர்களாக ஆக்குவது. குறிப்பாக, நம்மையெல்லாம் அடிமைகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வைத்திருந் தார்களோ, அந்த அடிமைத்தனத்தைப் போக்கு வதற்காக தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால், புகுத்திய திருமண முறைதான் இது.
மனித ஜீவனாகவே பெண்ணைக் கருதவில்லை!
பழைய திருமண முறையில், கன்னிகாதானம், தாரா முகூர்த்தம், பாணிக்கிரஹணம் என்றால், சந்தையில் மாடு விற்பதுபோன்று; கடையில் பொருள் விற்பது போன்று.
மனித ஜீவனாகவே பெண்ணைக் கருதவில்லை. ஆண்தான் எஜமானன் - பெண் அடிமை என்பது தான் வடமொழித் திருமணங்களுடைய தத்துவம்.
(தொடரும்)
No comments:
Post a Comment