அரக்கோணம்: பிரபாகரன் - மகாலட்சுமி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

அரக்கோணம்: பிரபாகரன் - மகாலட்சுமி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

உடலில் ஒரு கை, ஒரு கால் மட்டுமே இயங்கினால் அது பக்கவாதமே தவிர உடல்நலமாகாது - அதுபோன்று

அரசியல் சமூக பக்கவாதத்தைப் போக்கிய மருத்துவர்தான் தந்தை பெரியார் என்ற மாமருத்துவர்!

அரக்கோணம், ஜூன் 27 உடலில் ஒரு கால் இயங்கினால் போதும், ஒரு கை இயங்கினால் போதும் என்று சொன் னால், அது பக்கவாதமே தவிர, அது உடல்நலமாகாது. அதுபோன்று அரசியல் சமூக பக்கவாதத்தைப் போக்கிய மருத்துவர்தான் தந்தை பெரியார் என்ற மாமருத்துவர்; இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாகப் படிக்கின்ற மாநிலம் எதுவென்று சொன்னால், ‘திராவிட மாடல்‘ ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில்தான். பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

மணமக்கள் பிரபாகரன் - மகாலட்சுமி

கடந்த 22.5.2023 அன்று அரக்கோணத்தில் நடை பெற்ற பிரபாகரன் - மகாலட்சுமி மணவிழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

திராவிடப் பண்பாட்டு அடிப்படையில், தந்தை பெரியாருடைய சுயமரியாதைத் திருமண முறையில், ஆண் எஜமானன் அல்ல; மணமகன் எஜமானன் அல்ல.

ஆண்களைவிட, பெண்கள் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? எனக்குத் திருமணமா? புரோகி தரை வைத்தால் நான் வரமாட்டேன் என்று ஒவ்வொரு பெண்ணும் சொல்லவேண்டும். அதுபோன்று சொன் னால், அந்தப் பெண்ணுக்கு அறிவு இருக்கிறது என்று அர்த்தம்; மானம் இருக்கிறது என்று அர்த்தம். 

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு.

மனிதத்தன்மையைக் கொடுப்பதற்கு, இந்த மண முறையைக் கண்டுபிடித்தார் தந்தை பெரியார்.

நம்முடைய தாய்மார்கள் கொஞ்சம் சிந்திக்கவேண் டும்; நீங்கள் பட்டுப்புடவையில் காட்டுகின்ற அக்கறை - நகை வாங்குவதில் இருக்கின்ற உங்கள் கவலை - உங்கள் உரிமைகளின்மீது இருக்கிறதா?

எனக்குப் படிப்பதற்கு உரிமை இருக்கிறதா?

படித்த நான் சுதந்திரமாக உத்தியோகத்திற்குப் போக உரிமை இருக்கிறதா?

எதற்கெடுத்தாலும் ஆண்கள் கட்டுப்பாடு, ஆண்கள் கட்டுப்பாடு. அப்பா என்ன சொல்கிறார்? கணவன் என்ன சொல்கிறார்? என்பதுதானே!

இதைத்தான் மனுதர்மத்தில் சொல்கிறான்,

எந்தக் காலகட்டத்திலும் 

பெண்ணுக்குச் சுதந்திரம் கிடையாது!

பெண் ஆனவள், குழந்தையாக இருந்து வளருகின்ற வரையில் அப்பாவினுடைய கண்காணிப்பில் இருக்க வேண்டும்; திருமணம் ஆகிவிட்டதா? கணவனுடைய கண்காணிப்பில் இருக்கவேண்டும். பிள்ளை பெற்று விட்டாரா - மகனுடைய கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

முதற்கட்டம் - அப்பா; இரண்டாவது கட்டம் கணவன்; மூன்றாவது கட்டம் மகன்.

ஆகவே, எந்தக் காலகட்டத்திலும் பெண்ணுக்குச் சுதந்திரம் கிடையாது.

ஆண்கள் எஜமானர்கள்; பெண்கள் அடிமைகள்.

பெரியார்தான் சொன்னார், இரண்டு பேரும் நண் பர்கள்; இரண்டு பேருக்கும் சம உரிமை உண்டு. நண்பர் களில், ஒருவர் தாழ்ந்தவர்; இன்னொருவர் உயர்ந்தவர் என்று உண்டா? என்றால், கிடையவே கிடையாது.

ஆணுக்கு என்ன உரிமையோ, அந்த உரிமை பெண்ணுக்கு உண்டு. இதுதானே வாழ்க்கை - அதுதானே மகிழ்ச்சி!

அதைத்தான் சொன்னார் - வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் - வாழ்க்கை இணையேற்பு விழா என்று அழகாக சொல்கிறோம் நாம்.

கன்னிகாதானம் என்றால், தானம் கொடுப்பது; தானம் கொடுத்தவன் திரும்பிப் பார்க்கக் கூடாது; தாரை வார்த்தவன், கீழே போய்விட  பாணிக் கிரஹணம் வந்தாயிற்று.

அதனால், மனிதர்கள் என்போர் ஒப்புக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஆக்கினார் சுயமரியாதைத் திருமணத்தை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரும் யோசிக்கிறார்கள். பெரியார் இங்கே இதைச் சிந்தித்து உருவாக்கினார்.

250 ஆண்டுகளுக்கு முன்பு - 

‘‘உண்மை விளக்கும் அமைப்பு’’

உங்களுக்குத் தெரியாத ஒரு தகவலைச் சொல்கிறேன் - 250 ஆண்டுகளுக்கு முன்பு, மகாராட்டிரா (மும்பை) வில் ஜோதிபாபூலே, அவருடைய துணைவியார் சாவித்திரி பாபூலே என்று இருந்தார்கள். அந்த அம்மையார்தான் முதன்முதலில் ஆதிதிராவிடர்களுக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு பள்ளிக்கூடம் தொடங்கினார்கள். அவர்கள்தான் பெரிய புரட்சியை உண்டாக்கி, ‘‘உண்மை விளக்கும் அமைப்பு'' என்று உண்டாக்கினார். ‘‘சத்ய சோதக் சமாஜ்'' என்று அதற்குப் பெயர்.

அதில், ‘‘புரோகிதர்களை எந்தக் காரணத்தை முன் னிட்டும் திருமணத்திற்கு அழைக்கமாட்டோம்; தாலி கிடையாது; புரோகிதர்களுக்கு வேலையில்லை. நாங்களே ஓர் ஆள் தலைமை தாங்கி நடத்தி வைப்போம்'' என்று மணவிழாக்களை நடத்தினார்கள்.

நூறு ஆண்டு வரலாற்றை 

மறைத்துவிட்டார்கள்

பெரியார் அவர்கள், அதைத் தெரிந்து இங்கே சுயமரியாதைத் திருமண முறையை தொடங்கவில்லை. நூறு ஆண்டு வரலாற்றை மறைத்துவிட்டார்கள்; ஒரு வருக்கொருவர் தொடர்பு இல்லை.

அங்கே ஒரு வேடிக்கை நடந்தது நண்பர்களே, அது என்னவென்றால், 250 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரி யாதைத் திருமண முறையை ஜோதிபாபூலே மகாராட் டிரத்தில் ஆரம்பித்தவுடன், பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள் சுயமரியாதைத் திருமணம் நடத்தியவர்கள்மீது.

‘‘சட்டப்படி, புரோகித முறைப்படி திருமணத்தை நடத்துவதற்கு நாங்கள்தான் உரிமைப் படைத்தவர்கள். வேறு யாரும் நடத்தக்கூடாது. எங்களுக்குத் தட்சணை கொடுத்தால்தான், அந்தத் திருமணம் செல்லும். வேறு ஆட்கள் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தால், அது செல்லாது'' என்பது மட்டுமல்ல, அந்தத் தட்சணை எங்களுக்குத்தான் வரவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

வெள்ளைக்காரர்கள்தான் நீதிபதிகளாக இருந்தார்கள் -  திருமணத்தை நடத்துவதற்கு பார்ப்பனர்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆகவே, அவர்கள் வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, அவர்களுக்குச் சேரவேண் டிய பணத்தைக் நீங்கள் அவர்களுக்குக் கட்டவேண்டும் என்று சொன்னார்கள்.

பிறகு அவர்கள் வழக்குப் போட்டு, ஏறத்தாழ 50 ஆண்டுகள் தகராறு நடந்து, 1915 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பம்பாயில் அம்பேத்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அந்த சூழ்நிலையில் எப்படி தீர்ப்பு வந்தது என்றால், யாரும் பணம் கட்டவேண்டிய தில்லை. அவரவர் நடத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது.

மார்க்க சகாய ஆச்சாரி - 

பஞ்சாங்க குண்டய்யர் வழக்கு!

அதேபோன்று ஒவ்வொரு இடத்திலும் பார்ப்பனர்கள் தகராறு செய்தனர். பக்கத்தில் உள்ள சித்தூரில், விஸ்வகர்ம ‘பிராமணர்'கள் என்று சொல்லக்கூடியவர்கள், தங்களை ‘பிராமணர்'களைவிட ஒருபடி மேலானவர்கள் என்பார்கள். வெள்ளைக்காரர்கள் ஆட்சியின்போது சித்தூரில் ஒரு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை ஒரு பத்தர் நடத்தி வைத்தார். அவருடைய பெயர் மார்க்க சகாய ஆச்சாரி. 

பஞ்சாங்க குண்டய்யர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்; ‘‘நாங்கள்தான் அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கக்கூடிய உரிமை பெற்றவர்கள். அவர்கள் என்னதான் பூணூல் போட்டிருந்தாலும், அவர்கள் பிராமணர்கள் ஆகமாட்டார்கள்; புரோகிதர் நான்தான். ஆகவே, சட்டப்படி அந்தத் திருமணம் செல்லாது. எனக்குத்தான் தட்சணை வரவேண்டும்; அதற்கு அபராதம் போட்டு, அதை எனக்கு வசூல் செய்து கொடுங்கள்'' என்று வழக்குப் போட்டு, அந்த வழக்கு வெள்ளைக்கார நீதிபதியிடம் வந்து, ஏறத்தாழ ஏழு, எட்டு ஆண்டுகள் நடைபெற்றது.

‘‘பஞ்சாங்க குண்டய்யர் எதிர் - மார்க்க சகாய ஆச்சாரி  கேஸ் - சித்தூர் அதாலத் கோர்ட் தீர்ப்பு'' என்று புத்தகமாக வெளிவந்தது.

பெரியார், 1933 ஆம் ஆண்டு நாகம்மையாரை அடக்கம் செய்துவிட்டு, அடுத்த நாள் ஒரு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக திருச்சிக்குச் செல்கிறார். ஆரோக்கியமேரி என்ற பெண்ணின் திருமணம் அது.

ஒரு கிறிஸ்தவ பாதிரியார், பெரியார்மீது புகார் கொடுக்கிறார் - நாங்கள் நடத்தவேண்டிய திருமணத்தை பெரியார் நடத்துகிறார்; அவரை கைது செய்யவேண்டும் என்று.

பெரியாரை கைது செய்கிறார்கள்.

ஆகவேதான், இதெல்லாம் இல்லாமல், பெரியாரு டைய உழைப்பினால், இந்தத் திருமணங்களை மூன்றா வது தலைமுறை, நான்காவது தலைமுறை இன்றைக்குப் பார்க்கின்றது என்றால், அதற்குக் காரணம், பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தை சட்ட வடிவமாக்கியதுதான்.

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய பெருமை!

‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய பெருமை என்னவென்றால், ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு வித்தூன்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ‘‘சுயமரியாதைத் திருமணங் கள் சட்டப்படி செல்லும்; நடந்த திருமணங்களும் செல்லும்; இனி நடக்கப் போகும் திருமணங்களும் சட்டப்படி செல்லும்'' என்று சொன்னார்.

ஆகவே, இன்றைக்கு இந்தத் திருமணம் நடைபெறுகிறது. எனவே, ஒரு நீண்ட வரலாறு படைத்ததுதான் இந்தத் திருமண முறை. இந்தத் திருமண முறை போகப் போக வளர்ச்சி பெற்று மாறும்.

பெரியாரிடம் கேட்டார்கள், சுயமரியாதைத் திருமண முறையில் மாற்றம் வருமா? என்று.

தந்தை பெரியார் அவர்கள் அப்போது தெரிவித்தபடி, புரோகிதர் இல்லாமல், மணமக்கள் இருவரும் உறுதி மொழி கூறி, வாழ்க்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் போதும். நிறைய பேரை-  கூட்டத்தைக் கூட்டவேண்டிய அவசியமில்லை.

இணையத்திலேயே திருமணம் செய்துகொள்ளக்கூடிய நிலை வரும்!

இன்னும் போகப் போக இணையத்திலேயே திருமணம் செய்துகொள்ளக்கூடிய நிலை வரும். ‘‘நாங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டோம் என்பதை உங்களுக்குத் தெரியப் படுத்திக் கொள்கிறோம். நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே எங்களை வாழ்த்துங்கள்'' என்று சொல்லக்கூடிய நிலை வரும்.

ஆடம்பரங்கள் இதுபோன்ற திருமணங்களில் போகப் போகக் குறையும். மண்டபத்தைப் பார்ப்பது, சாப்பாடு போடுவது போன்ற செலவுகள் எல்லாம் குறையக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

அமெரிக்காவிற்கு ஒருமுறை சென்றிருந்தபொழுது, இந்தத் திருமண முறையைப்பற்றி சொன்னபொழுது, ஆச்சரியப்பட்டனர்.

‘‘ஆகா, அப்படியா?'' என்றனர்.

‘‘நாங்கள்கூட மதவாதிகள் இல்லாமல் திருமணங் களை நடத்துகிறோம்'' என்று சொன்னார்கள்.

‘‘உங்கள் ஊர் திருமணங்களில் எவ்வளவு பேர் வருவார்கள்?'' என்று கேட்டார்கள்.

‘‘அதிகமாக வரமாட்டார்கள்; ஒரு ஆயிரம் பேர், 2 ஆயிரம் பேர் வருவார்கள்'' என்றேன்.

‘‘அய்யய்யோ!'' என்றார்.

‘‘என்னங்க'' என்றேன்.

‘‘எங்கள் ஊர் மக்கள் தொகையே அவ்வளவு கிடையாதே?'' என்றார்.

‘‘ஆயிரம் பேர் வந்தால் என்னாகும்?'' என்றார்.

‘‘ஒன்றும் ஆகாது; நாங்கள் எல்லாம் விருந்து சாப்பிடுவோம்; காலையில் ஒருமுறை டிபன்; மதியம் ஒருமுறை பகல் சாப்பாடு; மாலையில் சாப்பாடு - பசி இருக்கிறதோ, இல்லையோ நாங்கள் கட்டாயம் சாப்பிட அமர்ந்து, இலையில் எவ்வளவு வீணாக்க முடியுமோ, அவ்வளவு வீணாக்குவோம்'' என்றேன்.

இதுபோன்ற சூழ்நிலையைத்தான் மாற்றவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.

சிக்கனம் வேறு; 

கருமித்தனம் என்பது வேறு!

எளிமை இருக்கவேண்டும்; சிக்கனம் இருக்க வேண்டும் என்றார். சிக்கனம் வேறு; கருமித்தனம் என்பது வேறு. தேவைக்குமேல் செலவழிப்பது ஆடம் பரம்; தேவைக்கேற்ப செலவழிப்பது சிக்கனம்; தேவைக்கே செலவழிக்காமல் இருப்பது கருமித்தனம்.

அந்த வகையில், அருமை நண்பர்களே இதுபோன்ற திருமணங்களைக்கூட எவ்வளவு எளிமையாக நடத்த முடியுமோ, அவ்வளவு எளிமையாக நடத்துங்கள்; சிறப்பாக நடத்துங்கள்.

மணமக்கள் இரண்டு பேரும் படித்தவர்கள். இப் பொழுது திராவிட மாடல் ஆட்சியில், பெண்கள் படிப்பதற்குரிய வாய்ப்புகள் பெருமளவில் இருக்கிறது.

முன்பெல்லாம் என்ன சொல்வார்கள், ‘‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?'' என்று கேட்டார்கள்.  அந்த ஊதுகிற அடுப்பை ஒழித்து,  கேஸ் அடுப்பைக் கொடுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

இப்பொழுது ஒரு வீட்டில் மூன்று பெண்கள் படித்தாலும், மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் என்று மூன்று பெண்களுக்கும் மாதம் மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறது ‘திராவிட மாடல்' ஆட்சி.

பெண்கள் அதிகமாகப் படிக்கின்ற மாநிலம்!

இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாகப் படிக்கின்ற மாநிலம் எதுவென்று சொன்னால், ‘திராவிட மாடல்‘ ஆட்சி நடைபெறும் தமிழ் நாட்டில்தான் அதிகமாகப் பெண்கள் படிக்கின்றனர்.

பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ் நாடுதான் என்று இந்திய அளவில் கருத்து உள்ளது.

பெண்களை எவ்வளவு அடிமைப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். அந்தப் பெண்களை விடுதலை செய்கின்ற இயக்கம் பெரியார் இயக்கம்தான் - திராவிடர் கழகம்தான்.

வாழ்க்கையில் நன்றாக சிரிக்கவேண்டும். ‘‘வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்'' என்பார்கள்.

வாய்விட்டு சிரிப்பது என்றால், ஆண் - பெண் இருவரும்தானே சிரிக்கவேண்டும்.

பெண்கள் சிரிக்கவே கூடாது  என்றார்கள்!

ஆனால், ‘‘பொம்பள சிரித்தால் போச்சு; புகையிலை விரிச்சா போச்சு?'' என்று சொன்னார்கள்.

பெண்கள் சிரிக்கவே கூடாது  என்றார்கள். எவ்வளவு மூடத்தனம் - இதைக் கண்டித்த ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.

பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தால், அந்தக் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும். இங்கு வரும்பொழுது பேசிக்கொண்டுதான் வந்தோம் - எல்லப்பன் அவர்கள் அடிக்கடி கழகக் கூட்டங்களுக்குச் சென்றுவிடுவார். அவருடைய துணைவியார் புஷ்பா கடையைப் பார்த்துக் கொள்வார். வாய்ப்புக் கொடுத்தால் கண்டிப் பாக பெண்கள் சிறப்பாகச் செய்வார்கள்.

ஆகவேதான், சரி பகுதி வாய்ப்பினை பெண்களுக்குக் கொடுக்கவேண்டும். இரண்டு கைகள் சரியாக இயங்கவேண்டும் அல்லவா!, இரண்டு கால்கள் சரியாக இயங்கவேண்டும் அல்லவா! இரண்டு கண்களிலும் பார்வை சரியாக இருக்கவேண்டும் அல்லவா!

அதுபோன்றுதானே, ஆணும் - பெண்ணும்! 

அரசியல் சமூக பக்கவாதத்தைப் போக்கிய மருத்துவர்தான் 

தந்தை பெரியார்!

அப்படியில்லாமல், ஒரு கால் இயங்கினால் போதும், ஒரு கை இயங்கினால் போதும் என்று சொன்னால், அது பக்கவாதமே தவிர, அது உடல்நலமாகாது. இந்த அரசியல் சமூக பக்கவாதத்தைப் போக்கிய மருத்துவர்தான் தந்தை பெரியார் என்ற மாமருத்துவர்.

அதுதான் இதுபோன்ற மணவிழாக்கள் - இந்தப் பிரச்சாரம்.

திருமணத்திற்காக மணமகளுக்குப் புடவை எடுக்கப் போகும்பொழுது, இந்தப் புடவை நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால், வேறொரு புடவை இருக்கிறதா? என்று கடைக்காரரிடம் கேட்பார்கள். 

ஏங்க என்று கடைக்கார் கேட்பார்.

‘‘இந்தப் புடவை நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால், இந்தப் புடவையில்  கருப்பு இழை ஒன்று வந்திருக்கிறது, அதனால்தான்'' என்று சொல்வார்கள்.

இன்றைக்குக் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு மணமகன் அமர்ந்திருக்கிறார். இதுதான் மாறுதல் - இதுதான் துணிச்சல்.

சரிங்க, கருப்பு என்றால், பயப்படவேண்டுமா?

எது உங்களை இளமையாகக் காட்டுகிறது?

வயதாக, வயதாக எல்லோருக்கும் தலைமுடி வெள்ளை நிறமாகிக் கொண்டிருக்கிறது. எது உங்களை இளமையாகக் காட்டுகிறது; கருப்புதானே காப்பாற்றுகிறது. அடிக்கடி பணம் கொடுத்தல்லவா முடியை கருப்பாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

தலைமுடி மட்டும் கருப்பாக இருக்கவேண்டும்; புடவையில் கருப்பு இழை ஓடக்கூடாது என்றால், அறிவியல்படி எவ்வளவு பேதம் என்பதைப் பாருங்கள். இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

மணமக்களாகிய நீங்கள் எளிமையாக வாழுங்கள். உங்கள் தாய் - தந்தையைப் போல் சிறப்பான உழைப்பினால், நேர்மையானால், கொள்கையினால் சிறப்பாக வாழுங்கள்.

உங்களுக்கு நான் ஒரு வேண்டுகோளாக வைப்பது என்னவென்றால், நீங்கள் வாழ்க்கையில் பல வகையிலும் உங்கள் பெற்றோரைவிட உயர்வீர்கள். ஆனால், எவ்வளவுதான் வாழ்வில் உயர்ந்தாலும், உங்கள் தாய் - தந்தையரிடம் மரியாதை காட்டுவதில், நன்றி காட்டுவதில், அன்பு காட்டுவதற்கு மறவாதீர்கள். 

ஏனென்றால், அவர்களுடைய தியாகத்தால்தான் நீங்கள் வளர்ந்தீர்கள். அவர்களுடைய உழைப்பினால்தான் நீங்கள் உயர்ந்திருக்கிறீர்கள்.

விட்டுக் கொடுப்பவர்கள் 

கெட்டுப் போவதில்லை!

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள். அதைத்தான் அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னார்.

‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை;

கெட்டுப் போகிறவர்கள், விட்டுக் கொடுப்பதில்லை.''

அந்த அடிப்படையில் நீங்கள் இரண்டு பேரும் விட்டுக் கொடுத்து வாழவேண்டும்.

புரட்சிக்கவிஞர் சொன்னதைப்போல, ‘‘ஒரு மனதாயினர் தோழ - திருமண மக்கள் நன்கு வாழி!'' என்று சொன்னதைப்போல, இந்த மணமக்கள் வாழ்வார்கள்.

மணமக்கள் இப்பொழுது உறுதிமொழி கூறி, மணவிழாவினை நடத்திக் கொள்வார்கள்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய இந்த மணமுறைக்கு சட்ட வடிவம் கொடுத்தார் பேரறிஞர் அண்ணா. 

அமைச்சரவையே  பெரியாருக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

ஆகவே,  அய்யாவை - அண்ணாவை நினைத்து இந்த மணவிழாவினை நடத்தி வைத்திருக்கிறேன்.

அகில இந்திய அளவில் இந்தத் திருமண முறையை ஆக்கவேண்டும் என்ற விருப்பப்பட்டார் நூற்றாண்டு விழா நாயாராக இருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள்.

ஆகவே, அவர்களையெல்லாம் நினைத்து இந்த மணமக்கள் உறுதிமொழி ஏற்று வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியினை நடத்திக் கொள்வார்கள்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

No comments:

Post a Comment